நூலிழை

இரு முனைவின் ஈர்ப்பில்
இழுபறிப்படும்
ஓர் இணைப்பு.

இழு விசை எதிர்விசை நீங்கி
எங்கோ ஓர் புள்ளியில்
நிலைத்திருக்கும் சமநிலை.

தொய்ந்து தொய்ந்து
நொந்து போக துணை நிற்கும்
சரிவரப் பகிரா
எடை தரும் விரிசல்.

சந்தித்துக் கொள்ளாத
முனைவுகளிடையே
நிந்தித்திக் கொண்டு
நிதம் தேயாது அதிரும்
பரிவதிர்வு .

அவநம்பிக்கை
அளவுகோல் கணிப்பில்
அறுந்து விடும்
அபாயம்.

நம்பிக்கைச் சிறு
முடிச்சுக்களால்
காப்பாற்றப்படும்
நியாயம்..

இவை யாவும் தாண்டி
எப்போதும் இவ்
இரு முனைகளிடையே
இணைந்த ஓர் நூலிழையில்
இயங்கிக் கொண்டிருக்கும்
ஏதோ ஓர் கயிற்றுறவு...

எழுதியவர் : சிவநாதன் (24-Mar-16, 2:01 am)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : noolilai
பார்வை : 264

மேலே