சூரியப் பிம்பமே
இரவின் -
கருமை கொன்று...
பகலின் -
வெம்மை போக்கி...
உணர்வில் -
தண்மை சேர்க்கும்...
வெண்மை நிலவே...!
ஏகாந்தமருளும்
இளமென்மதியே...!
நின் -
உதித்தல் தொடங்கி
உதிர்தல் வரையில்...
உவகை பூத்ததோர்
உயிரோவியம்...!
அழகிய பிறையே...!
பூமியின்
துணைக்கோளாய்
சுழல்வது உன் விருப்பு...
சூரியக் கிரகணம்
நிகழ்வதோ உன் பொறுப்பு...
வளர்வதும் தேய்வதும்
வாடிக்கையான உனக்கு...
மறைவதும் நிறைவதும்
மாதத்தின் கணக்கு...
அழகும் குளுமையும்
ஆக்கிய உன்வனப்பு...
அகிலமே வியக்கும்
அற்புதப் படைப்பு...
தாய் -
பாசத்தோடு
பிசைந்தூட்டிடும்
பாற்சோறே..!
மழலைச் சிநேகிதம்
மகிழ்ந்தாடிடும்
ஒளிப்பந்தே..!
உன் தோள்மீது
ஊஞ்சலாட
ஓடிவருமென்
விஞ்ஞானம்..!
வட்ட வட்ட நிலா...நீ
வானில் வரும் உலா
வையகமெங்கும் இலா
வைபவம் காட்டும் நிலா..!
சொட்டசொட்டப் பலா
சுவை கொட்டி வரும் நிலா,
தேய்ந்து வளர்ந்து நல்லா
நீ...தேவதையான நிலா.
இரவைத் தின்று
வளர்கின்றாய்....
இரவிக்குவுன்னைத்
தருகின்றாய்....
மாதமொருமுறை
மறைகின்றாய்....
மலரும்
பௌர்ணமியாய்
மிளிர்கின்றாய்...
நீல வானில் -
நிலைக் கண்ணாடியாய்
ஞாயிரைப் பிரதிபலிக்கும்
திங்களே...!
நீ சுடுவதில்லையே
ஏன்..?
ஓ...
நீ சூரியப்பிம்பமோ...!