காமராசர் எனும் பெருமகன் ---- கட்டுரை ---நமது சிந்தனைக்கு
காமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீரர். தந்தை பெரியாரை பெற்றதால் ஈரோடு பேர் பெற்றது. அண்ணா பிறந்ததால் காஞ்சி சிறந்தது. காமராசர் பிறந்ததால் விருதுப்பட்டி சீர்பெற்றது என்பது மிகையான வார்த்தை அல்ல.
பொதுவாழ்வில் ஈடுபட, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் தொண்டாற்ற, நாட்டு விடுதலையில் நாட்டம் கொள்ள காமராசருக்கு - இளமைக்கால ஈர்ப்புக் குக் காரணமாய் அமைந்தவர்கள் காந்தியும், பெரியாரும்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் ஈடுபட்ட போது, இளைஞராய் பங்கேற்றவர் காமராசர். சத்தியமூர்த்தி யின் சீடராக அடையாளப்படுத்தப் பட்டாலும் அரசியலில் இராசகோபாலாச் சாரியின் ஆதிக்கத்தை அகற்றி அணிய மானவர் காமராசர்.
ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்திட வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சிறப்பாக செயலாற்றியவர். காங்கிரசில் இருந்தாலும், காங்கிரஸ் முதலமைச்சரான இராசகோபாலாச்சாரி குலக் கல்வித் திட்டத்தைச் செயலாக்க முனைந்தபோது எதிர்த்தவர். அத்திட்டம் ஒழிய காங்கிரசாரை அணிதிரட்டியவரும் கூட. தேவை என மக்கள் கருதியபோது, அவசியம் என அவர் உணர்ந்தபோது இராசகோபாலாச்சாரியை வீட்டுக்கு அனுப்பி தமிழக முதல்வராக பொறுப் பினை ஏற்றவர்.
பெரியாரின் கருத்தினை ஏற்று ஆட்சித் தேரினை செலுத்தியவர் காமராசர். தகுதி-திறமை பேசிய கூட்டத் தினருக்கு உன் தகுதியும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும் என்றவர். இந்திய பிரதமர்களை உருவாக்கிடும் ஆற்றல் பெற்ற கிங் மேக்கர் அவர். சோசலிச சமுதாயம் அமைவதை லட்சியமாகக் கொண்டவர். ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரானவர். அவரின் சாதனைகளை, சிறப்புகளை, செயல் திறனைப் பார்ப்போம்.
எத்தனை எத்தனை திட்டங்கள்
மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வாலையார் அணை, ஆரணி யாறு அணை, மங்கலம் அணை, வீடூர் அணை, கிருட்டிணகிரி அணை, மேல்கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடி கால்வாய், சாத்தனூர் அணை, கோமுகி அணை, பரம்பிக்குளம் - ஆளியாறு அணை, கீழ் பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம் இப்படியாய் எத்தனை எத்தனை அணைகள் காமராசர் ஆட்சியில் அமைக்கப்பட்டன. எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன. வேளாண்மை செழித்திட காமராசர் ஆற்றிய பணிகள்.
திருச்சி பெல் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி உற்பத்தி சாலை, மேட்டூர் காகித ஆலை, ஆவடி ராணுவ டாங்கித் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, குன்னூர், கிண்டி இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ், நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், திருச்சி துப்பாக்கித் தொழிற் சாலை, இப்படியாய் இன்னும் ஏராளமான சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பல்வேறு தொழிற்சாலைகள் தலைவர் காமராசரின் ஆட்சியின் சாதனைகளாக மலர்ந்தன.
நீர்மின்திட்டங்கள், அனல்மின் திட்டங்கள், அணு மின் திட்டங்கள் பல காமராசர் ஆட்சிக் காலத்தில் செயல் படுத்தப் பட்டு கிராமப்புற மக்கள் மின் னொளி பெற காரணமானவர் காமராசர். மின்வாரியம் அமைத்து மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு என செயல்படுத்தி மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட வைத்தார்.
மக்கள் பங்களிப்புடன் கல்வி . . .
ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைந்திட மாணவர்களாகிய பிஞ்சு உள்ளங்களில் ஜாதி, பொருளியல் ஏற்றத் தாழ்வு எனும் நஞ்சு கலந்துவிடக் கூடாது என எண்ணிய காமராசரின் உள்ளத்தில் உதித்திட்ட திட்டம்தான் மதிய உணவுத் திட்டம் - சீருடைத் திட்டம். ஒடுக்கப்பட்ட சமுதாய பிள்ளைகள் படிக்கவும், படித்து சிறக்கவும், மதிய உணவுத் திட்டம் மகத்தான வழி வகுத்தது என்றால் மிகையல்ல. அனை வரும் சமம் என்ற உணர்ச்சி, ஒன்றாக அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிடவும், ஒரே மாதிரியான உடைஅணிந்து வருவதும் ஆன நிலை ஏற்பட வழி வகுத்தது. மக்கள் பங்களிப் போடு இத்திட்டங்களை நிறைவேற்றினார்.
அரை நேரம் படிப்பு - அரை நேரம் குடும்பத் தொழில் என்று குல்லுகபட்டர் இராசகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து - கல்விச் சோலை மலர காமராசரும் காரணமானார். உள்ளம் கொதித்து அவர் கொட்டிய வார்த்தைகள் இதோ, இது ஒரு பைத்தியக்காரத் திட்டம். இதை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என்றார்.
நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை . . .
கடையர் எனப்படுவோர் எவ்விதம் கடைத்தேற முடியும்? கல்வி பெற்றுச் சிறந்தால்தான் தேறுவார்கள். படிக்கிற கல்வி மூலம் நல்ல அறிவும் திறமையும் வளர்ந்தால் நிச்சயமாகப் பிழைத்துக் கொள்வார்கள். ஆம்., அவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவார்கள். ஆனால் பலருக்கு எழுத்தறிவே கிடையாது. ஊர்களில் பள்ளிக் கூடம் இல்லாத போது எப்படி எழுத்தறிவைப் பெற முடியும்? ஆகவே முதல் வேலையாக எல்லா ஊர்களிலும் பள்ளிக் கூடங்களைத் திறக்க வேண்டும். கல்வியை எல்லார்க்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வியை இலவசமாகப் பெற வேண்டும். இன்னொன்று நிலம் ஈரமாக இருந்தால் தான் பயிரிட முடியும்; காய்ந்து கிடந்தால் விதை எப்படி முளைக்கும்? பிள்ளைகளின் வயிறு எந்தக் காரணம் கொண்டும் காயவே கூடாது. அவர்களின் வயிறு காய்ந்திருந்தால் அவர்களுக்கு எவ்விதம் படிப்பு ஏறும்? இந்த நாட்டில் ஏழைகள் மலிந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு அங்கேயே, பள்ளிக் கூடத்திலேயே சோறிட வேண்டும். இதுதான் நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, இனிமேல் வரும் தலைமுறையினராவது பெற்றுப் படித்து வளர்ந்து வாழட்டும் . . . எல்லாருடைய கண்களையும் திறக்கும் பள்ளிகளைத் திறப்பதை விடவும் முக்கிய வேலை இப் போதைக்கு இல்லை. எனவே மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஊர் ஊராக வந்து பகலுணவுத் திட்டத்திற்குப்பிச்சை எடுப்பதற்கும் சித்தமாக உள்ளேன் - காமராசரின் எட்டையபுரம் பேச்சு இது. படிப்பை மக்கள் - குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் நுகரச் செய்ய தலைவரின் எண்ணம் எப்படி இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.
ஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக . . .
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப் பில் இருந்தபோது பெரியாரின் எண்ணக் கனவை ஈடேற்றும் வண்ணம் பெருந் தலைவர் காமராசர் அற்புத சாதனைகளை நிகழ்த்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயில் கதவுகள் திறக்க மறுத்தன - திமிர்வாதம் பேசினர் ஆதிக்க வாதிகள். பரமேசுவரன் என்ற தாழ்த்தப்பட்டவரை இந்து அறநிலையத் துறை அமைச்சராக்கியதன் மூலம் பூரணகும்ப மரியாதை கொடுத்து அழைக்க வேண்டிய உரிமைப் பிரகடனமாயிற்று. போலீஸ்துறை அமைச்சராக கக்கன் அவர்களை நியமனம் செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட வழியாயிற்று.
ஏழை எளிய மக்கள் வாழ்வில் மாற்றமும், ஏற்றமும் பெற கல்வி வள்ளல் காமராசர் தமது ஆட்சியைப் பயன்படுத் தினார். எளிமையாக, நேர்மையாளராக தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது. அவர் சொல்றார் - நாம் செய்கிறோம்! இது 1952லே துவங்கின சிக்கல் இல்லை. அய்யாயிரம் ஆண்டு களாக இருக்கிறதாச்சே!
தெய்வத்தின் பேராலேயும், மதத்தின் பேராலேயும் நம்மை ஒதுக்கி வைச்சுட் டானுங்க! இதை தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! யார் கவலைப்பட்டா?
பெரியார் ஒருவர்தானே தலையில் எடுத்துப் போட்டுக் கிட்டுப் பண்ணிக் கிட்டிருக்கார். அவரில்லேன்னா, நம்ம பிள்ளைங்க கதி என்னவாயிருக்கும்? அத்தனை பேரும் கோவணத்டே வய லிலே ஏரோட்டிக்கிட்டிருப்பான்! இன் னைக்கு டெபுடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரெட்டிரியாகவும் உட்கார்ந்திருக்கான். நம்ப கிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார் நினைச்சதிலே ஏதோ கொஞ்சம் பண்ணிக்கிட்டிருக்கோம்.
அவர் எந்த அதிகாரமும் இல்லாமே, நமக்காக ஊர் ஊரா அலைஞ்சு சத்தம் போட்டுக்கிட்டே வர்ராரு! அவராலேதான் நமக்கெல்லாம் பெருமை.
தந்தை பெரியாரை - அவர்தம் உழைப்பை - அதனால் விளைந்த பயனை நன்றி உணர்வோடு பெருந்தலைவர் காமராசர் பகன்றுள்ளதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அய்யாவின்மீது காம ராசர் வைத்திருந்த மதிப்பை உணர முடியும்.
குலக்கல்வித் திட்டம் என்ற பேரால் - தமிழினத்தின் எதிர்காலத்தையே சூனிய மாக்கிடவும், ஒரு இனத்தின்அறிவுக் கண்ணை ஊனப்படுத்தவும், இராச கோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டத்தைப் பெரியார் எதிர்த்து முறியடித்தது ஒரு புறம் - அதனால் இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண் டது இன்னொரு புறம் - பெருமைக்குரிய காமராசர் தமிழ்நாட்டின் ரட்சகராக - முதல் அமைச்சராக அரியணை ஏறியது என்பது மற்றொரு புறம் தமிழ்ச் சமுதா யத்திற்குக் கிடைத்திட்ட பெருவாய்ப்பு. இவற்றிற்கெல்லாம் தந்தை பெரியார் தான் காரணம்.
இராசாசியால் மூடப்பெற்ற 6000 பள்ளிகளை மீண்டும் காமராசர் திறந் தார்- மேலும் 14000 பள்ளிகள் என ஆக் கினார். 300 பேர் கொண்ட கிராமத்தில் எல்லாம் பள்ளிகள் திறப்பு. 14 வயதுக் குட்பட்ட அனைவரும் படித்திட வேண்டும் என்ற கட்டாய இலவசக் கல்வி. 1954 இல் தமிழகத்திலிருந்த தொடக்கப்பள்ளிகள் 30,000 இதர உயர் நிலைப் பள்ளிகள் 2,200. தமிழக வரலாற்றில் காமராசர் காலம் கல்வி வளர்ச்சியில் பொற்காலம்.
இருக்கு இல்லைங்கறது பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையா துன்னேன். நாம் செய்யறது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்கியனா இருக் கனும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிக்கிட்டுக் கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா?
மேல்சாதி, கீழ்சாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுகப் பண்ணின ஏற்பாடுன்னேன். சுரண்டித் திங்கறதுக்காகச் செய்ததுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்திலே பத்துமாதம் இருந்துதானே பிறக்குறோம். அதுவே என்ன பிராமணன்-சூத்திரன், ரொம்ப அயோக்கியத்தனம்.
நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி, ஆத்திகவாதி எல்லோருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்ரவனை மனுஷன்னுதான் பார்க்குறேன். பிராமணன்- சூத்திரன்னு பார்க்குறதில்லை.
தனிப்பட்ட முறையிலே நான் கோயில், பூசை, புனஸ்காரமுன்னு பைத்தியம் பிடிச்சி அலையறதில்லே. மனிதனோடே அன்றாடக் கடமைதான் முக்கியமுன்னு நினைக்கிறவன் நான்.
மனிதனை மதிக்க வேண்டும். மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை களை சரிவர செய்ய வேண்டும். மக்களைப் பிரித்து வைக்கும் ஜாதியின் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது. யோக்கியப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதிலே அழுத்தமான நம்பிக்கை உள்ளவராக தலைவர் காமராசர் வாழ்ந்தார் என்பது மேலே அவன் பதில்கள் பறைசாற்றுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களின் ஒருவரும் முன்னாள் மேலவை உறுப்பினரும், சீரிய பகுத்தறி வாளருமான சீர்காழி பெ.எத்திராஜ் எழுப்பிய வினாக்களுக்கு தலைவர் காமராசர் அளித்திட்ட பதில்கள்தான் இவை. இவற்றுக்கும் மேலாக நம்மை சிலிர்க்க வைக்கும் சிந்தனை பதில்களைத் தொடர்ந்து பாருங்கள்.