காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 22

எதிர்பாராத ஸ்பரிசத்தில் பயந்து அலறிய திலோத்தமாவின் இதயத் துடிப்பின் ஓசை அவள் எதிரில் நின்ற யசோதம்மாவிற்கே கேட்கும்படி இருந்தது.


பயந்திட்டியாம்மா ஏதோ சத்தம் கேட்டது போல் இருந்தது அதான் பார்க்கலாம் என்று வந்தேன் என்றபடி அங்கு மேசை மீது வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அவளிடம் குடிக்க சொல்லி கொடுத்தார்.


அதை வாங்கி மடக் மடக் என்று முழு டம்ளர் நீரையும் குடித்து முடித்தபின் தான் அவளின் சுவாசம் ஒரு நிலைப் பட்டது.


மன்னிச்சிடும்மா, இங்க ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது அதான் என்று அவர் ஆரம்பிக்கும் போதே....


ஐய்யய்யோ ஆண்டி நீங்க ஏன் மன்னிப்பு எல்லாம் சொல்லிட்டு என்று கூறியபடி யசோதம்மாவின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிய அந்த சின்னஞ்சிறு பெண்ணின் கைகளின் நடுக்கமே அவள் மனதளவில் எவ்வளவு பயந்து இருக்கிறாள் என்பதை இது போன்ற பல சூழ்நிலைகளை தன் வாழ்நாளில் கடந்திருந்த யசோதம்மாவிற்கு தெள்ளத்தெளிவாக உணர்த்தியது.


திலோத்தமாவின் விழிக் கசிவு உணர்த்தியது அவள் மனதில் விதைந்து உள்ள துயரின் ஆழத்தை.


அவள் விழிகளை கூர்ந்து நோக்கிய யசோதம்மா ஆதரவாக தட்டிக் கொடுத்தபடி அருகில் இருந்த சோஃபாவில் அமரவைத்து அவளருகில் தானும் அமர்ந்தார்.


அனுபவ அறிவற்ற மென்மையான இச்சிறு பெண் உணர்ச்சி வசப்பட்டு எடுத்த இந்த முடிவு அவளின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்று எடுத்துக் கூறும் கடமை தனக்கு உள்ளதாக உணர்கிறார்.


மனதிற்குள்ளாக திலோவிடம் பேச வேண்டிய வார்த்தைகளை அலசி ஆராய்ந்து பார்த்தபடி கனிவுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தார்.


தனக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒன்றும் பேசாமல் அமைதியாக தன் முகத்தை பார்த்திருந்தவரிடம், கேள்வியாக அவரை நோக்கியவாறு இருந்தாள் திலோத்தமா.


ம்கூம் என்று தொண்டையை செறுமியபடி அவர் பேச ஆரம்பிக்கவுமே....


ஏதோ பெரிய விஷயம் தான் கூறப் போகிறார் என்று அனுமானித்து விட்டாள் திலோ.


என்னவாக இருக்கும் என்று யோசனை உடனே எதிர்ப்பார்த்து காத்திருந்தாள்.


இங்க பாரும்மா , அந்த குழந்தைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பார்த்த உடனே
நீ உணர்ச்சி வசப்பட்டு அவனை தூக்கியது தவறு இல்லை ஆனால் நானே வளர்க்க போறேன்னு சொல்றது தான் சரியில்லை என்று வார்த்தைக்கும் வலிக்காமல் அவள் மனதையும் காயப் படுத்தாத வகையில் மிக மென்மையாக எடுத்து கூறினார்.


அவள் தயங்கியபடி எதோ கூறத் தொடங்கும் முன்னர் இப்ப எதுவும் பேசாதம்மா பொறுமையா நான் சொல்றதை கேளு பின்ன நல்லா யோசிச்சு பார்த்து பதில் சொல்லு என்று அமைதிப்படுத்தினார் யசோதம்மா.


பின்னர் நிதானமாக யோசித்து அவளுக்கு புரியும் வகையில் பேச ஆரம்பித்தார்...


நீ , உங்க அப்பா அம்மாக்கு உன்னிடம் இருக்கும் எதிர்பார்ப்பு பற்றி, உன்னோட எதிர் காலம் பற்றி, உனக்கு நிச்சயம் செய்து இருந்த அந்த பையனைப் பற்றி இப்படி எதையாவது யோசித்து பார்த்தியா இதெல்லாமும் உன் கடமை இல்லையா என்று கேள்வியை எழுப்பினார்.


இந்த சிறு குழந்தையோட தனியா இந்த வாழ்க்கையை எப்படி வாழ போற நீ இன்னும் இந்த சமூகத்தில் கைக் குழந்தையோட தனியா ஒரு பெண் பாதுகாப்பா இருக்க எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கனும் தெரியுமா?


படித்த ஆனால் உலகம் அறியாத சிறு பெண் நீ, உணர்ச்சி வேகத்தில் ஒரு முடிவு எடுத்து விட்டு காலம் கடந்த பிறகு விளைவுகள் ஏற்படுத்தும் வலியை தாங்க முடியாமல் ஆரம்பித்த இடத்துக்கு திரும்பவும் முடியாமல் இழந்ததை மீட்க இயலா நிலையில் வலியோடு பயணிக்கும் நிலை உனக்கு வேண்டாம் திலோ என்று உணர்ச்சி வேகத்தில் பேசியவரின் கலங்கிய கண்களை பார்த்து பதற்றத்துடன் ஆன்டி நீங்க ஏன் வருத்தப்படுறீங்க என்றவாறு அவர் கரங்களை ஆதரவாக பற்றினாள்.


சிறு பிள்ளைகள் நீங்கள் தவறான முடிவு எடுக்கும் போது அதை சுட்டிக்காட்டி திருத்தும் பொறுப்பு பெரியவர்களுக்கு இருக்கு திலோ அதான் நிதானமாக யோசித்து முடிவு பண்ணு என்றவாறு அவர் மெல்ல எழுந்து அவருடைய அறையை நோக்கி சென்றார்....


வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர் கூறியவற்றை மனதில் அசை போட்டபடியே விடியலை எதிர் நோக்கி காத்திருந்தாள் பெண்ணவள் பாவம் அவள் அறியவில்லை விதி அவளுக்கு காட்டப் போகும் புது உலகைப்பற்றி.




***************


புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையின் போர்டிகோவில் வந்து நின்ற காரிலிருந்து விரைந்து இறங்கிய டாக்டர் பாரதிதாசன் அதிவேகமாக மருத்துவமனையின் உள்நுழையவும் எதிரில் வந்து கொண்டிருந்த கமிஷனரை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.


அவனையும் அறியாமல் மனதில் இனம்புரியாத படபடப்பு எழுவதை தடுக்க முடியவில்லை. அவன் மனம் ஏனோ இந்த நோயாளியையும் திலோத்தமாவையும் இணைத்து முடி இட விளையவும் அவ்வாறு இருக்க கூடாது என்று அவன் இஷ்ட தெய்வமான விநாயகரை வேண்டினான்.


வாங்க டாக்டர் என்று பாரதிதாசனை வரவேற்ற கமிஷனரை கண்டு வார்த்தை வராமல் அவர் விழிகளை கூர்ந்தான்.


கமிஷனரின் விழிகளில் இருந்த கசிவே அவன் காண வந்துல்ல நோயாளி யார் என்று தெல்லத்தெளிவாக எடுத்துரைத்தது.


புத்திக்கு உரைத்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் உருவான தடுமாற்றத்தை அவனுள் இருக்கும் டாக்டர் தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்த தன்னைத்தானே சமாளித்து முன்னேறினான் கமிஷனரை நோக்கி.


கமிஷனரின் பின் வந்த அந்த தனியார் மருத்துவர், வெல்கம் டாக்டர் பாரதிதாசன் உங்களை சந்திக்க ரொம்ப நாளா ஆசை ஆனால் இந்த மாதிரி சூழ்நிலையில் அது அமைந்துவிட்டது என்று கூறி அவரை நோயாளியிடம் அழைத்துச் செல்ல விரைந்து பின் தொடர்ந்தான் தன் கடமைக்காக.


ரூமில் நுழைந்த உடன் கேஸ் சீட்டை எடுத்து பார்த்து நோயாளியின் உடல் நிலையைப் பற்றி தெரிந்து கொண்டவன் இந்த 'நிலை' எந்த சூழ்நிலையில் நடந்தது என்பதும் அவன் மனக்கண்ணில் படமாகவே விரிந்தது.



மீண்டும் சந்திப்போம்......


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (18-Dec-24, 9:29 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 22

மேலே