காலச்சுவடுகள் 11 மதிபாலன்

மாரி மனங்கொண்டு வாரித் தரும்போது
மண்ணில் புதுவெள்ளம் ஓடிவரும்!
ஏரி நிறைந்தோட நீரின் பரப்போடு
ஏறும் புதுமீன்கள் ஜாலமிடும்!

சேவல் அதிகாலை கூவி எழுமுன்பு
சீறும் இளங்காளை ஏரில் உழும்!
தூவும் பனிமூட்டம் தோலில் குளிரேற்ற
தூய மண்வாசம் நாசிபெறும்!

சேற்று வயலாடி நாற்று நடும்போது
சேர்ந்து களைப்பாற பாட்டுவரும்!
காற்றில் கலந்தோடும் பாட்டின் ருசிதேடி
காட்டுக் குயில்கூடக் கேட்க வரும்!

சாணி உணவூட்டி அமுத நீர்பாய்ச்சி
தாகம் தணித்தாலே பயிர்வளரும்!
பேணிப் பயிர்காத்துப் பூச்சிப் பிணிநீக்க
பிரிந்து சரமாகக் கதிர்மலரும்!

கொல்லும் வெயிலென்றும் கொட்டும் மழையென்றும்
காலம் பார்க்காமல் பணிநடக்கும்!
நெல்லை உணவாக்கி நிற்கும் விவசாயி
நிஜத்தில் பசியாற எதுகிடைக்கும்?

வாங்கும் கடனோடு வட்டி யதுசேர்ந்து
வாழ வழியின்றிக் கதவடைக்கும்!
தூங்க முடியாமல் துடிக்கும் அவன்வாழ்வு
துளிர்க்க எப்போது வழிபிறக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------
வாய்ப்புக்கும் கவிதைத் தேர்வுக்கும் நண்பர் திரு.கவித்தா சபாபதி அவர்களுக்கு நன்றி

எழுதியவர் : மதிபாலன் (29-Mar-16, 8:20 pm)
பார்வை : 178

மேலே