இப்போதும் பாடத் தயார் ----கின்னஸில் இடம்பெற்ற பாடகி சுசிலா நெகிழ்ச்சி

இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று கின்னஸில் இடம்பிடித்த பாடகி பி.சுசிலா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் சுசீலா நாற்பதாண்டுகளாக பாடிவருகிறார்.

பத்மபூஷன் , தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.

திரைப்படத் துறையில் முன்னணிப் பாடகியாக திகழும் பி.சுசிலா 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதால் அதிக பாடல்களைப் பாடியவர் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்தக்கதில் இடம்பிடித்துள்ளார்.

இதைப் பகிரும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

எனக்கு முதல் தேசிய விருது எம்.எஸ்.வி இசையில் வெளியான 'நாளை இந்த வேளை பார்த்து' பாட்டுக்கு கிடைத்தது. பாடல் கம்போஸிங் போதே இந்தப் பாட்டுக்கு உனக்கு விருது கிடைக்கும்னு எம்.எஸ்.வி சொன்னார். அதேபோல கிடைத்தது. எம்.எஸ்.வி இசையமைப்பில் பாடி தேசிய விருது பெற்றது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.

இயக்குநர் கோபாலகிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை.

இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்.

இவ்வாறு பி.சுசிலா பேசினார்.

எழுதியவர் : (30-Mar-16, 12:36 am)
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே