மானசீகமாக ஒரு மவுன அஞ்சலி

மானசீகமாக ஒரு மவுன அஞ்சலி.
இன்று
அந்த -
பெட்டிக்கடை
கிழவியை...
தன் -
பதிவேட்டில்
பற்றுவைத் தென்
மௌனம் கலைத்த
மகுடமே..!
ஏ..! மரணமே..!
நீ...
சருகுகளை உதிர்க்கையில்
சலனமேற்படுவதில்லை...
எனினும் -
சருகாய்...
ஓரிரு தருவினை
வீழ்த்தும்போது...
தவிப்பு ஏற்படுகின்றதே..!
பஞ்சு நூற்சேலைக்குள்
பஞ்சடைத்தாற்போல்
பழகிய...
பால் முகமதி வதியே..!
உன் -
உதடுக் கூடுகளின்
உச்சரிப்புத் தேனாய்,
'ராஜா' என்கிற போது...
தர்பார் -
நடத்திய...
இந்த -
கனவுக் குழந்தை
பள்ளி செல்ல...
காலதாமதமானாலும்
'ஹால்ஸ்' வாங்காமல்
சென்றதில்லையே...
இன்று
நீ...
புதைகுழியின்
புதைய லானது கண்டு...
மரணத்திற்குரிய -
வயதுதானே என்று
வாளாய் செல்ல...
வழியில்லையே தாயே..!
காசு தந்து -
பொருள் கொண்ட
பொழுதெல்லாம்.....
ஓசியாக அல்லவா
உனதன்பை -
வாங்கிச் சென்றோம்.
எப்பொழுதும்
உன்கடையில் -
இருந்த இதயங்களே...
இன்றுன் -
இ றுதி யாத்திரையிலும்
இருந்தன...
வருந்தின...
உன் சாவுக்கு
'குரான்' ஓதினார்களோ
இல்லையோ...
இதோ நான் -
தேவாரம் சில
பாடுகிறேன்...
மரணத்திற்குப் பின்
இந்த மனித மதங்கள்
எதைக் கட்டுப்படுத்தும்...
பூத உடல் நீத்த
புகழ் உயிரே...!
மானசீகமான
மவுன அஞ்சலியாக...
எனது -
மனதின் துளிகளே...
மலர்களாகட்டும்.