மீண்டும் திரும்புமா அந்த காலம்

நினைவுகளுள்
மூர்ச்சையாகி
நித்திரையில்
சுவாசமாகி...
எண்ணிப்
பார்க்கிறேன்
இதய அரங்கத்தில்
கலைந்துச் சென்ற
கனவுகளை
ஏக்கத்தின் வேர்பற்றி!...
கடந்துச் சென்ற
காலங்கள்
கானல் தந்த
தாகங்கள்
மேருவை ஒத்த
மேகங்கள்
கண்ணீர் விளைத்த
காவியங்கள்!
அசைந்தாடும்
புதருக்குள்...
அதனுள் இயற்கை
அரணுக்குள்
எளிமையாய் வாழும்
எறும்பொத்த ஏக்கங்கள்!
நிகழ்கால சோகம் மறக்க...
மனத்துள் பசுமை
விதைக்க...
கரைந்துச் சென்ற
காலத்தின் கண்முன்னே
கரைகிறது
நினைவின்
பொற்காலம்!..
உள்ளத்தில் உதித்த
தனிமையகற்றி
உறவுகள் சூழ்ந்து
உல்லாசமாய்...
சிறு பிணிவுறினும்
ஆலமர விழுதெனவே
அணைத்துக் காக்கும்
அன்புறவுடன் வாழ்ந்த
அக்காலங்கள்
என்னுள் ஏக்கத்தை
நிறைத்தன!
பண்பாடு மரபெனும்
பாசத்துள் மூழ்கி
பாரம்,வறுமை அறியாமல்
பம்பரமாய் சுழன்று
காணும் அனைத்தையும்
வஞ்சமின்றி யதார்தமாய்
காணும் பருவம்
எனை கடந்து சென்றது
இத்தருணம்!
சோகம்,தாகம்,பேதமறியா...
சாதி,மதம் சட்டை
செய்யா...
சகோதரத்துவ
தோழமையுடன்
விளையாடி கழித்தப்
பொழுதுகள்... !
மனத்தின் காயங்களுக்கு
தற்போதைய களிம்புகள்!
அப்பொழுது
அறியவில்லை...
அனுபவமற்ற
சிறு பிள்ளை மனம்!
உண்மை உறவுகளை!
உறவின் பெருமைகளை!
உணர்வின் அருமைகளை!!
அறிந்த நொடி யான்
அத்தனையும்
மலர்ந்து,கமழ்ந்து,கருகும்
அரும்பென ஆனது
எங்ஙனம்?!
பத்து வயதுவரை
பருவத்தின்
விளையாடல்கள்...
பண்ணிரண்டை
தொட்டவுடன்
படிப்பின் பாரங்கள்!
பதினாறை அடைந்தபோது படர்ந்தன
வறுமையின் சாயல்கள்!
நான் கண்ட
சமுதாய கோரங்கள்!!
தன்னலத்தை
தட்டிக் கழித்து தன்மையுடன்
மகிழ்ந்து களைத்து
பிறருடன்
பிண்ணிப் பிணைந்து பிதற்றி திரிந்து பித்தனைப் போல்....
கவலைகள் அணுகாத...
பக்குவப்படாத
அச்சிறுப் பால்யத்தை
வேண்டுகிறேன்
மீண்டும் இறைவனிடம்!
கொடுத்துவிடு
அக்காலத்தை!
எரித்துவிடு
மனத்தின் சோகத்தை!
புதைத்துவிடு
ஏக்கத்தின் தேம்பல்களை!
அளித்துவிடு
எனக்கு மீண்டும் அப்பிள்ளை
பிராயத்தை!!
பகைவருடனும்
பாசத்துடன்
பழகிடத் துணியும்
ஓர் மனம்!
பகட்டைத் தவிர்த்து
பகலவன் ஒளியில்
பாடித்திரிந்த அந்நிமிடம்...
செல்வ செருக்கற்ற
செம்மையான
குணம் செறிந்த
உணர்வின் வசந்தகாலம்
வந்ததற்கு அடையாளமாய்
சில வடுக்களை
விடுத்துச் சென்றது
எனக்குள்ளும்!!
அறிவியல் அற்புதங்கள்
புரிந்து அவனியிற்
புகழோடு திகழ்ந்திடும்
அறிஞர்காள்!
மானுடர் மீண்டும் மழலையாகும்
அரிய மருந்தினை
நீரும் அறியீரோ?!
வீடு,பணம்,பொருளென்றே
இவையெல்லாம்
வாழ்வின் மிடுக்கென்றே
பணத்தில் மட்டும்
நாட்டங்கொண்ட
மூடர்களே கேளுங்கள்!
எதிர்காலம்
எண்ணியெண்ணி
நிகழ்காலம் தொலைத்து...
இத்தருண இன்பங்களை
எதிர்காலம் மடைமாற்றி
ஏமாளியாகும்
எஜமானர்களே!
கூறுங்கள்!
அமைதியில் திளைத்து
அனுபவத்தில்
தழைத்து
மனிதரை யான்
மதித்து
மனிதநேயத்தை
நாளும் துதித்து
மடமையை தீயில்
எரித்து
உள்ளதை பகிர்ந்தளித்து
உறவுகளுள் பிண்ணி
குழைந்த அக்காலங்களை
என்னிடம்
மீண்டும் தாருங்கள்!
என்றோ
கிட்டபோவதெண்ணி
நிகழ்கால ஆசை கருக்கி
கானலிடை அமிர்தம்
தேடும் ஏக்கத்தை
உருவாக்கி...
நிகழ்காலம்,எதிர்காலம்
ஒருசேர பறிகொடுக்கும்
மூடர்களே!
அக்காலத்திற்குரியதை
அப்போதே நிறைவேற்றி
அனுபவத்தின்
பாதைதனில் பயணிக்க
முயலுங்கள்!!!
********************

எழுதியவர் : Daniel Naveenraj (4-Apr-16, 4:15 pm)
பார்வை : 291

மேலே