காட்டு வளங்களும் காடழிப்பும் - ஓர் சூழலியல் பார்வை, சுத்தமான காற்றும் சுகந்த நிழலும் தாவரங்களை தழுவி வரட்டும்

தெற்காசிய நாடுகளோ ஆசிய நாடுகளோ ஜரோப்பிய நாடுகளோ இல்லை அமெரிக்க நாடுகளோ சரி நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் எல்லா பிரதேசங்களுமே இன்று எதிர்கொள்கின்ற பாரிய தாக்கம் பூகோள வெம்மை அதிகரிப்பும் அதன் தொடர் சங்கிலிகளாக தொடர்கின்ற வரட்சி நீர்ப்பற்றாக்குறை கடல்மட்டம் உயர்வு வெள்ளப்பெருக்கு போன்ற சூழல் அழிவுக்காரணிகளுமே..

சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் எத்துணை அவலம்? இவற்றில் எல்லாம் இருந்து எங்களை நாங்கள் பாதுகாப்பது தொடர்பாக சிந்தித்திருக்கின்றோமா?


அறிமுகம்

புவியில் காணப்படும் மூலவளங்களில் புதுப்பிக்கக்கூடியதும் மீள் உருவாக்கம் செய்யக்கூடியதுமான இயற்கைவளமாக காட்டு வளம் காணப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் மூன்றில் ஒருபகுதியில் வளமற்ற மண் கரடுமுரடான கல்லியல் சார்ந்த அம்சங்கள் காணப்படுவதால் ஏனைய பகுதிகளிலேயே தாவரப் போர்வைபரம்பியுள்ளது. உலக உணவு விவசாய நிறுவனத்தின் அறிக்கையின் படி 1950 களில் புவியின் மொத்த நிலப்பரப்பில் 30% காடுகளாக இருந்தது. தலா ஒருவருக்குரிய காட்டு வளம் 1.6 கெக்ரயராக இருந்தது. (அன்ரனி நோர்பேட்.2003).

ஊலகளாவிய ரீதியில் காடுகள் ஒரேசீரான பரம்பலைக் கொண்டிருக்கவில்லை. இடத்திற்கு இடம் காடுகளின் செறிவு மாற்றம் அடையும் போக்கினைக்காணலாம். அநேக நாடுகளில் காட்டு வளர்ப்புத் திட்டங்களின் மூலம் காடுகள் செறிவாக்கப்பட்டுள்ளதுடன் அதிகரித்துவரும் காடழிப்பு நடைமுறைகளினை மட்டுப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன. குறித்த சில குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு உலகில் காணப்படும் காடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. காலநிலை அடிப்படையில் அயனக்காடுகள், ஊசியிலைக் காடுகள், இலையுதிர் காடுகள் என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நிர்வகிக்கும் முறையின் அடிப்படையில் பழையகாடுகள், இரண்டாம் தர காடுகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.



காட்டு வளங்களின் முக்கியத்துவம்

மனித வரலாற்றின் ஆரம்பகாலங்களில் இருந்து இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்புகள் இரண்டற பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகின்றது. மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து தனக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான் என்பது மானிடவியலாளாளர்களின் வாதம். தொன்றுதொட்டு இன்றுவரை காட்டு வளங்களின் முக்கியத்துவம் இன்றியமையாததாக இருந்து வருகின்றது.

காடுகள் மண்வளத்தை பாதுகாத்தல், மேற்பரப்பு நீரை சேமித்தல், காலநிலையின் நுண் நிலமைகளை கட்டுப்படுத்தல் போன்றனவற்றில் முக்கியகாரணியாக விளங்குகின்றன. காடுகளின் உற்பத்தி முக்கியத்துவம், பயன்பாடு என்பன தொடர்பாக உலககாட்டுத் தொழில் ஸ்தாபனத்தின் ஏழாவது காங்கிரஸ் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

• காடுகள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன
• விவசாயத்தைப் பாதுகாக்கின்றன
• வெள்ளப்பெருக்கினை குறைக்கின்றன
• சிறந்த நீரினை வழங்குகின்றன
• கவர்ச்சியையும், பொழுது போக்கினையும் அளிக்கின்றன.
• வன விலங்குகளிற்கு புகலிடம் அளிக்கின்றன
• சூழல் அழுக்காவதை தடுக்கினறன
• காடுகள் பச்சைவீட்டு வாயுவின் தாக்கத்தை குறைப்பதில் பெரிதும் உதவுகிறன
• உலக வெப்பமயமாதலை தடுக்கின்றன

இவ்வாறாக அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்வளத்தின் மீது இன்று மனித செல்வாக்கு அதிகரித்துள்ளதன் காரணமாக காடழிப்பு நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. காடழிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுவரும் துரித முன்னேற்றத்தினால் புவியில் பல்வேறுவகையான பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. இது இயற்கைச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் அவ்வளத்தின் மீது ஒரு பாரிய தாக்கத்தினையும் பற்றாக்குறையினையும் எதிர் கால சந்ததியினருக்கு ஏற்படுத்துகின்றது.



தெற்கு ஆசிய நாடுகளில் காடுகளும் கட்டமைப்பும்

உலக வங்கியின் 2011 ம் ஆண்டு அளவீட்டின் படி இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஸ் நேபாளம் மாலைதீவு போன்ற தெற்கு ஆசிய நாடுகளில் மொத்த நிலப்பரப்பில் 17% த்தில் மட்டுமே காடுகள் பரம்பியுள்ளன. அதாவது 816590 Sq Km இல் காணப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை இங்கு மொத்த நிலப்பரப்பில் 6.56 மில்லியன் Ha நிலப்பரப்பில் 1.94 Ha மில்லியன் காடுகளாக காணப்படுகிறது. இங்கு காணப்படும் காடுகளினை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

• Mountain forest
• Sub-mountain forest
• Low land rain forest
• Moist monsoon forest
• Dry monsoon forest
• Reverie dry forest
• Mangrove forest


இலங்கையில் காடழிப்பானது துரிதமாக நடைபெற்று வருகின்றது. 1990 இற்கும் 2000 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதயில் ஒரு வருடதத்திற்கு சராசரியாக 26800 Ha காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் காடழிப்பானது 1.14 % மாக இருந்தது. இது 2000 – 2005ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில 1.43% ஆக அதிகரித்துள்ளமையை காணலாம்.
20 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து குறிப்பாக 1980 களிற்கு பிற்பட்ட காலங்களில் காட்டழிப்பு வேகமாக அதிகரித்துச் செல்வதை காணலாம். இதற்கு பின்வரும் காரணிகள் அதிக செலவாக்கு செலுத்துகின்றன எனலாம்.


• நீண்டகாலமாக நிலவி வந்த யுத்த சூழலினால் பாதுகாப்புக் கருதி தாவரப்போர்வை ஐதாக்கப்பட்டது
• குடியிருப்பிற்கு நிலங்களைப் பெற்றுக் கொள்வதும், அடாத்துக் காணிகளை சுவீகரித்தலும்
• எரிபொருள் தேவையை நிறைவேற்றல்
• வனங்களைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் குடியேற்றச் செயற்பாடு
• சேனைப் பயிர்ச் செய்கை செயற்பாடு
• காடுகளிற்குரிய எல்லைகள் முறையாகஎல்லைப்படுத்தப்படாமையினால் ஏற்படும் இடர்பாடுகள்
• சட்ட விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருத்தல்
• பொழுதுபோக்கு ரீதியான செயற்பாடுகள்

காடழித்தல் செயல்முறையானது உயிர்ப்பல்கைமையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துவதுடன் மழை வீழ்ச்சியிலும் மண்ணரிப்பிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் கைத்தொழில் சமூகபொருளாதார மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எனவே காடுகளை பாதுகாக்கவும், காடழிப்பை குறைக்கவும் அவற்றின் மீள் உருவாக்கத்தின் தேவையினையும் கருத்தில் கொண்டு பல செயற்பாடுகள் தேசிய, மாவட்ட மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.

• மீள் காடாக்கல் திட்டங்கள்
(1960 இல் கூட்டுறவு காடமைப்புத் திட்டத்தின் கீழ் தேக்கு மற்றும் மரமுந்திரிகை நடுகை)
• ஒருங்கைணைந்த கிராமிய அபிவிருத்திதிட்டம் (1970, 1980 களில் உலகவங்கி அனுசரனையில் மீள்காடாக்கல்)
• காட்டியல் பெருந்துறை செயற்திட்டத்தின் ஊடான செயற்பாடுகள் -
• காடுகளின் உயிரியல் முறைமைகளை பாதுகாத்து முகாமை செய்தல்
• நாட்டின் பொருளாதாரத்தில் காட்டின் பங்கினை அதிகரித்தல்
• தேசியரீ தியிலான காட்டியல் கொள்கைகள், வீட்டுத் தோட்டங்களை ஸ்தாபித்தல்
• வனப்பரிபாலன திணைக்ளத்தினூடான மாவட்டமட்ட செயற்பாடுகள்
• தாவரமுகாமைத்துவம்
• மர நடுகைத் திட்டங்கள்
• வன உற்பத்திகள்
• விழிப்புணர்வு செயற்பாடுகள் (2011ம் ஆண்டு உலக வன ஆண்டாக பிரகடனம்)

காடுகளின் முக்கியத்துவத்தினை உணர்த்தி அவற்றினைப் பேணிப்பாதுகாப்பதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் அவற்றின் வினைத்திறனான செயற்பாடுகள் இன்னும் அதிகரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்திலேயே எமது வளத்தின் நீண்டகால இருப்பினை உறுதிசெய்யமுடியும்.


தெற்காசிய நாடுகளோ ஆசிய நாடுகளோ ஜரோப்பிய நாடுகளோ இல்லை அமெரிக்க நாடுகளோ சரி எல்லா பிரதேசங்களுமே இன்று எதிர்கொள்கின்ற பாரிய தாக்கம் பூகோள வெம்மை அதிகரிப்பும் அதன் தொடர் சங்கிலிகளாக தொடர்கின்ற வரட்சி நீர்ப்பற்றாக்குறை கடல்மட்டம் உயர்வு வெள்ளப்பெருக்கு போன்ற சூழல் அழிவுக்காரணிகளில் இருந்து நாம் வாழ்கின்ற சூழலை பாதுகாக்க முனைகின்ற போதே எம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நாம் நகரத்தில் வாழ்ந்தால் என்ன கிராமத்தில் வாழ்ந்தால் என்ன எங்கு வாழ்கின்றோமோ அந்த சூழலிற்கு ஏற்ப எங்களின் இயலளவுக்கு ஏற்ற தாவரங்களை வளர்த்து இயற்கையுடன் இணைந்த சூழலில் வாழ முயற்சிப்போம்

சுத்தமான காற்றும் சுகந்த நிழலும் தாவரங்களை தழுவி வரட்டும் !!

எழுதியவர் : திவினோதினி (6-Apr-16, 3:38 pm)
சேர்த்தது : சர்மிலா வினோதினி
பார்வை : 8015

மேலே