தவறாகப்புரிந்துகொள்ளுதல்---ப்ரியா

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன;உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. ஒரு வெற்றிடமே விரிகிறது. மிகவும் தொலைவில் தூரதேசத்தில் இருப்பதாக உணர்ந்து கொள்கிறோம்.

சில சமயம் நம் மனதிற்கு பிடித்தவர்களின் ஒரு நிமிட சந்தேக பேச்சால் நம் ஆயுள் சந்தோஷத்தையே இழக்கிறோம்..இதற்கு காரணம் நம்மீது தவறா? அவர்களின் சந்தேக மனப்பான்மையா?புரிதல் குறைபடா?இல்லை அதீத அன்பா?என்று பலமுறை யோசித்து யோசித்து தோற்றுப்போகிறேன்....காலத்தாலும் காதலாலும் புரிந்து கொள்ளமுடியாத ஒரு கட்டத்துக்குள் சென்றுவிடுகிறேன். கோவத்தாலோ இல்லை வருத்தத்தாலோ வார்த்தைகளை வீசிவிட்டு.....இறுதியில் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையால் முடித்துக்கொள்கின்றனர். ஒருபக்கம் மனதிற்கு பிடித்தவர்களின் மன்னிப்பு நம் வருத்தத்தை மறைத்தாலும் மறுபக்கம் எவ்வளவு ஆழமாக ஒரு முள்ளால் நம் இதயத்தில் குத்தி கிழித்திருப்பார்கள் என்பது அன்றைய இரவில் வடிந்த கண்ணீர்த்துளிகளும் தலையணையும் மட்டுமே அறிந்த ரகசியம்.அன்புக்குரியவர்கள் சந்தேகத்தால் பேசிய அந்த ஒருசில வார்த்தைகள் மரணவலியிலும் கொடியது என்பதை உணரமுடிகிறது அவ்வேளை.......

தவறாகப்புரிந்துகொள்ளுதல் பற்றிய ஒரு வியட்னாமியக்கதை....

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி.....சரியாக 4 ஆண்டுகள் கழித்து போர்வீரர் திரும்பி வருகிறார்....

மனைவியையும் மகனையும் ஆசையோடு கட்டியணைத்துக்கொள்கிறார்......தன் கணவனுக்கு பிடித்த சமையல் செய்வதற்காக பொருட்கள் மனைவி மார்க்கெட்டுக்கு செல்கிறாள்.....அச்சமயம் வெட்கத்துடன் ஒதுங்கி ஒதுங்கி நின்ற தன் மகனை அழைத்து "ஏன்பா அப்பாக்கிட்ட பேசமாட்டியா?" என்று கேட்க? சந்தேகத்துடன் அவரைப்பார்த்த மகன்.....நீங்கள் என் அப்பா இல்லை என்று சொல்லிவிட்டு செல்கிறான்.

வருத்தத்தோடு அந்த வீரர் அப்போ யார்தான் உன் அப்பா?என்று கேட்கிறார்?

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"என்று மகன் சொல்ல உறைந்து போனார் அந்த வீரர்.

அந்நொடி முதல் தன் மனைவியை வெறுத்தார். அவள் சமைப்பதை சாப்பிடுவதில்லை, அன்பாய் பேசுவதில்லை அவளருகிலேயே செல்வதில்லை. கணவரிடம் இந்த மாற்றத்தைக்கண்ட மனைவி பொறுத்து பொறுத்து பார்த்து அந்நிலை தொடர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுக்க செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ இதுதான் என் அப்பா"என்று.

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார்? என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

மகன் சொன்னதைக்கேட்ட வீரன் மனைவியிடம் தெளிவாய் கேட்டிருந்தால் இன்று இப்படி தன் காதல் மனைவியை இழந்திருக்கவும் மாட்டான் குற்ற உணர்ச்சியோடு இருந்திருக்கவும் மாட்டான்....தன் கணவனிடம் மாற்றத்தைக்கண்ட மனைவியாவது அவனிடம் நேரடியாக கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.....வாய் விட்டு கேட்காமல் மனம் விட்டு பேசாமல் ஒரு குடும்பமே நிலை குலைந்து போனது.

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். கண்ணில் எப்பொழுதும் சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எந்த சந்தர்ப்பங்களிலும் முடிவு இப்படித்தான். இந்த சந்தேகத்தால் இழப்பது நம் உறவுகளையும் நட்புகளையும் , மகிழ்ச்சியையும்தான்.

நம் மனதிற்கு பிடித்த உறவுகளிடமிருந்து ஒரு விஷயத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடியாத போது மனதிற்குள் சந்தேகப்படாமல் முதலில் வாய் திறந்து கேளுங்கள். திருப்தியான பதில் இல்லையென்றால் ஏன்? என்று வெளிப்படையாகக் கேளுங்கள். மனம் விட்டு மனதிலிருப்பதை கேட்டுவிடுங்கள். நீங்களாக தீர்மானிக்காதீர்கள்.அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.மனதிற்கு பிடித்தவர்களிடம் தான் எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும் என்பதை நீங்களும் புரிந்து அவர்களுக்கும் புரிய வையுங்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் அன்புக்குரியவர்களிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். மறைமுகமாக பேசுவதை தவிர்த்து நேரடியாக சுட்டிக்காட்டுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன. இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

உண்மையான அன்புக்குரியவர்களின் மனதை புண்படுத்தும் வண்ணம் சந்தேகம் என்ற எண்ணத்தை விதைத்து தூய உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடாதீர்கள். நீண்ட ஆழமான உறவுகள் நீடிக்கவேண்டுமானால்.......எதையும் நேர்முகமாக கேட்டு மனம் விட்டு பேசிவிடுங்கள்.வாழ்க்கை வசந்தமாகும்.

எழுதியவர் : (6-Apr-16, 3:45 pm)
பார்வை : 486

மேலே