சேமித்துச் செழித்திடுவீர்

மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ ஏப்ரல் 2012 திங்களிதழில் மா.இராமச்சந்திரர் என்பவர் எழுதி வெளியான ஓர் அருமையான கவிதையை இத்தளத்தில் பதிகிறேன்.

இவர் முறையான சேமிப்பின் அருமையை ’சிக்கனமே சேமிப்பின் முதற்படி’ என்றும், ’இரட்டிப்பாய்ப் பணம் தருவோம் என்றுரைக்கும் ஏமாற்று நிறுவனத்தை நம்பாதீர்’ என்றும், ’கரப்பில்லா வங்கிதனில் சேர்த்திடுவீர்! களிப்பான எதிர்காலம் கண்டிடுவீர்!’ என்றும் எடுத்து உரைக்கிறார்.

எக்கணத்திலும் அவரவர் தம் குடும்பத்தில் சிரமமான நேரங்களிலும், எதிர்பாராத நோயுற்ற காலங்களிலும் முறையான சேமிப்பிருந்தால் கவலையின்றி வாழலாம் என்பது உறுதி என்று நயம்பட கவிதையில் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகிறார். அனைவரும் வாசித்து மகிழ வேண்டுகிறேன்.

சேமித்துச் செழித்திடுவோம் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆற்றினிலே இட்டாலும் அளந்திடுக!
…..அறிவார்ந்த முன்னோர்சொல் போற்றிடுக!
காற்றுள்ள போதினிலே தூற்றிடுக!
…..கவனமாய்க் காசதனைச் சேர்த்திடுக!
ஏற்றமான எதிர்காலம் அமைந்திடவே!
…..எப்படியும் சேமிக்கப் பழகிடுக!
ஏற்றூண் இல்லாமல் இருந்திடவே
…..இதுவொன்றே வழியென்று கண்டறிக!

ஓட்டைக் கலயத்துள் நீர்போலே
…..ஓட்டைக் கைபணமும் ஓடிடுமே!
தேட்டை முழுவதுமாய்ச் செலவுசெய்தால்
…..தேவை நெருக்கினிலே யார்தருவார்!
வீட்டுள் சேமித்த பணமிருப்போர்
…..வேதை துயரின்றி வாழ்வுறுவார்!
வாட்டம் ஏதுமிலா வாழ்வுபெற
…..வைப்பு நிதிசேர்க்கப் பழகிடுவோம்!

சிக்கனமே சேமிப்பின் முதற்படியாம்!
…..செல்வத்தைச் சிறைப்பிடிக்கும் தனிவழியாம்!
எக்கணத்தில் எதுநேரும் யாரறிவார்!
…..இதையெண்ணிச் சேர்ப்பது பேரறிவாம்!
சிக்கனமே இல்லாமல் சீர்குலையும்!
…..சேர்த்தபணம் இருந்தாலே சீர்பெருகும்!
இக்கணமே சிக்கனத்தின் வழியறிவோம்!
…..இல்வாழ்வை இனிதாக்கி மகிழ்ந்திடுவோம்!

இரட்டிப்பாய்ப் பணம்தருவோம் என்றுரைக்கும்
…..ஏமாற்று நிறுவனத்தை நம்பாதீர்!
புரட்டர்தம் பேச்சாலே பொருளிழந்து
…..புவியினிலே மோசமானோர் பலருண்டு!
கரப்பில்லா வங்கிதனில் சேர்த்திடுவீர்!
….களிப்பான எதிர்காலம் கண்டிடுவீர்!
தரணியிலே தரமுயர்ந்து வாழ்ந்திடவே
.....தவமாகச் சேமித்துச் செழித்திடுவீர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Apr-16, 3:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3052

சிறந்த கட்டுரைகள்

மேலே