காலச்சுவடுகள் 13 - சிற்பி
பௌர்ணமி நிலவு
பழுக்காத அந்தி !
சௌந்தரி யமுனைச்
சாரலில் நின்று...
வாடாத வெள்ளைத்
தாமரை -- 'தாஜ்மகல்'
தேடிய வண்டாய்த்
திரிந்துநான் பார்த்தேன்
ஆயிரம்கால்களில்
அசைந்த கற்பனை
பாயிர ஏடுகள்
படபடத் திட்டன !
மேகம் தொட்ட
மோக மொட்டு
கொள்ளைக் காதலின்
வெள்ளைக் கனவு
மன்மதக் கலைஞனின்
இன்னிசை நல்யாழ்
இதய யமுனையின்
அதிசய சங்கமம்
கண்முன் மறையும்
பெண்மை எழிலுக்கு
மாய உருத்தரும்
ஓயாக் கவிதை
நூலிடைக் காணா
நூலிடைக் காரிக்குப்
பாலிடைக் குளிக்கும்
பளிங்கு மண்டபம்
பேசா நேசப்
பாசறை வெண்குடை
இமையில் இதழில்
இடையில் ஊறிச்
சமைந்த பசிக்கு
அமைந்த 'சுரபி'
இந்திரா போகச்
செந்திரு 'மும்தாஜ்'
மந்திரக் காதலில்
மலர்ந்த தாரகை
ஆசையின் மடியில்
ஷாஜகான் கொட்டி
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசு!
சந்தன அழகு
செந்தா மரையாள்
விந்தைப் பவனியின்
தந்தச் சிவிகை
நழுவிய நழுவிய
நாத உல்லாசம்
மெழுகிய மெழுகிய
மெல்லிசை ராகம்!
சோலைப் பச்சையில்
சொக்கிய யமுனையின்
நீலக் கூந்தலில்
நிகரிலா வைரம்
பனிமலை இமயத்
தனிமையை எதிர்த்து
மனிதன் விடுக்கும்
அழகு அறைகூவல்
சில்லிடும் சலவைக்
கல்லறை யன்றிது
முல்லைக் கோட்டை;
முத்துப் பந்தல்
நினைவைக் கலக்கிய
கனவுக் கோட்டத்தைத்
தினவெடுத்த கண்கள்
தின்று ருசித்தன !
சரிந்தது பலநாள்
சமைந்த கற்பனை
ஒ ! நான்
காதலிக்கு மனதில்
கட்டி முடித்ததும்
மாது சலித்ததும்
நானே இடித்ததும்
இதனைக் காட்டிலும்
மதுரக் கோபுரம்!
இதனைக் காட்டிலும்
அதிசயக் காவியம் !
-சிற்பி