உயிரில் கரைந்துவிடு

இரு விழி தேய்கிறதே
எங்கே தோழியே!
இதயமும் வேகிறதே
உன்னைத் தேடியே!
காதலே ஓர் வரம்...
கனவுகள் சுயம்வரம்!
இதயங்கள் இணைகையில்
இடைவெளி
விழுந்ததேன்?!
நேற்று என் வானில்
காற்றாய் சுவாசம்
தேடினாய்!
உந்தன் இமைக்குள்
கருவாய் என்னை
மூடினாய்!
சோர்ந்த என்
தேகக்கூட்டில் உயிராய்
ஓடினாய்!
உடைந்த தூரிகை
இவனில் ஓவியம்
நாடினாய்!
கனவில் தீ
வைத்து இன்று எங்கே
ஓடினாய்?!
வாசல் தெளித்திடும்
கொலுசொலி
சென்ம சாபம்
தீர்க்காதோ?!
தடவிப் போகும்
கடைவிழிப் பார்வை
காயம் ஆற்றாதோ?!
மௌன பாஷையில்
உன் குரல்
நிதம் கவிதை தீட்டாதோ?!
நீயில்லா வாழ்வை
தனிமை தின்றுத்
தீர்க்கிறதே!!
கரைந்த மையல்
பார்வைகளை
சன்னல் கம்பிகள் மறந்திடுமோ?
அலைந்த காதல்
நாட்களதும்
வெறுங்கனவாய்
கலைந்திடுமோ?
சேர்த்து வைத்த
ஆசைகளெல்லாம்
சருகாய் கருகிடுமோ?
இரு கரங்கள் கோர்த்து
நடக்கையிலே
புது யுகங்கள் பிறந்திடுமோ?!!
நகரும் கணம்
ஒவ்வொன்றும்
யுகமாய் கணக்கிறது!
உன் கண்மை எழுதிய
கவிதைகளை
தினம் இதயம்
படிக்கிறது!
கைவளை சிதறிய
துகளதிலும்
உன் முகமே தெரிகிறது!
வழிந்திடும் கண்ணீர்
துளி வழியே
புது காதல்
பூக்கிறது!!
பழகிடும் நாட்கள்
சொல்வதில்லை
பிரிந்திடும் நொடியின்
மெய்காதல்!
இதயங்கள் மீண்டும்
இணைகையிலே
கசிகிற துளி சொல்லும்
அன்பாழம்!
உன்னை தொலைத்த
தினமன்றே
குருடனாகினேன்!
பாலை வெளியில்
ஏனோ
பன்னீர் தேடினேன்!
அனலை நாடி
அடியிங்கே
தீயில் மூழ்கினேன்!
தரையில் ஒதுங்கிய
மீனதுவாய் தனியே
வாடினேன்!
உயிரும் மெல்ல
விடைப்பெறும்
நிமிடம்
உயிரே வந்துவிடு!
கல்லறை மீதினில்
வேண்டவே வேண்டாம்
இதழ்கள் பருக கொடு!
மறு சென்மம் கொண்டே
எழுந்திடுவேன்
உயிரில் கரைந்துவிடு!!!
**********************