ஒத்தையில நிற்கிறியே

ஒத்தையிலே நிற்கிறியே ஒளிவிளக்காய் மின்னுறியே
அத்தமக கற்பகமே அடிமனசை வருடுறியே
உத்தமியே உள்ளத்திலே உன்நினைப்பு கொல்லுதடி
முத்தழகே கிட்டவந்து முத்தமிடச் சொல்லுதடி !

அன்னநடை கொஞ்சுதடி அச்சுவெல்லப் பேச்சழகி
சின்னநடை கெஞ்சுதடி சிக்கனமா ஆடுதடி
பின்னலிட்ட கூந்தலிலே பிச்சிப்பூ மணக்குதடி
புன்னகையில் சொக்கிவிட்டேன் பொன்மகளே பூத்திடடி !

கால்கொலுசு மீட்டுமொலி காதலிலே கட்டிடுதே
வேல்விழியால் பார்க்கையிலே வேதனையும் ஓடிடுதே
பால்முகமும் வெண்ணிலவாய் பாங்காக ஒளிர்கிறதே
நூல்பிடித்து வரைந்தாற்போல் நுதலழகாய்த் தெரிகிறதே !

மருதாணி இட்டக்கை மன்னனெனை வளைத்திடுமோ
கருவேலங் காட்டுக்குள் கதைபேசிக் களித்திடவோ
குருத்தோலைப் பந்தலிட்டு குந்தவச்ச மாமனிடம்
நெருப்பான வார்த்தைகளை நெஞ்சிலள்ளிக் கொட்டலாமோ ?

வாசலிலே கோலமிட்டு வரவேற்பு தந்திடடி
மீசவச்ச அத்தானை வேகமாக கட்டிடடி
பேசவரும் போதினிலே பெண்ணழகே அச்சமேனோ
பாசமுடன் பையவந்து பனிமலரே பாட்டெழுது !

வாக்களிக்கும் வயசாச்சு வாக்கப்பட பயமெதற்கு
ஏக்கமுடன் காத்திருக்கேன் ஏமாற்றம் தரலாமோ
மூக்குத்தி போட்டவளே முடிவோட நானிருக்கேன்
ஊக்கமுடன் வாடிபுள்ள ஊரறிய தாலிகட்ட ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Apr-16, 10:28 pm)
பார்வை : 225

மேலே