கவிதை

உன்னைச் சுருக்கி
உள்ளிருக்கும்
உணர்வினைச் செதுக்கி
கன்னல் தமிழ் தரும்
கவிதையே

கண்ணைத் திறந்துயிர்க்
கருத்தினில் நிலைத்த பின்
என்னில் உன் சுவாசம்
மறந்திலன் ஓர் நொடியும்

முன்னெப்போதும் வாசிக்காத
முடிவுறா நேசத்தின்
முழு நீளப் புத்தகத்து
அத்தியாயம் நீ

அந்தி வான் சூரியனின்
அழகுறு வர்ணங்களில்
அணி வகுத்துக்
கொள்கிறாய்

ஆழிப்பேரலையாய்
அவ்வபோது அசை
சீர் அடி கொண்டு
அள்ளிச் சுருட்டிக்
கொள்கிறாய்

உன் சொற்களின்
பிரவாகத்தில் ஏதுமற்ற
ஒற்றைச் சருகென
இருப்பிழந்து போகிறேன்

புரிதலற்ற சொற்பதங்கள்
எதிர்ப்பதமாகும் போது
பொய் முகம் காட்டி
மறைந்து போகிறாய்

காணாமல் போவதும்
கண்டுபிடிப்பதுமான உன்
படிமங்களின் புதிர்களில்
எல்லையற்று நீளும் உன் மீதான
எனக்கான புரிதல்கள்

இடைவெளிகள் நீண்டு செல்லா
ஏதுமற்ற எம் உறவுகளின்
நீட்சியில் உள்ளே ஒளிந்திருக்கும்
உவமைகளும் உருவகங்களும்

கரைந்தும் கரையாதும்
நிறைந்தும் நிறையாதும்
நாம் கொள்ளும்
அன்பின்ஆழத்தில்
எழுந்து அலையெனப்
பிரவகிக்கும் உறவின் இலக்கணம்
எதுவென இன்னமும் அறியேன்...

எழுதியவர் : சிவநாதன் (11-Apr-16, 12:44 am)
பார்வை : 114

மேலே