வர்ஷலாவிற்கு வாழ்த்துக்கள்

நாளை 6.4.2016 அன்று பிறந்த நாள் காணும் என் குட்டி தேவதை வர்ஷலாவிற்கு வாழ்த்துக்கள் !

பொன்னில் வார்த்த சித்திரமே - என்
பூவிதழில் நொதித்த விக்கிரமே - நீ
இத்திரை வந்து மூவாண்டு - மனம்
இச்சையில் இசைக்குது களி கொண்டு

கால் முளைத்த இளந் தளிராய் - என்
இல்லம் முழுதும் ஓடுகிறாய்
கவனம் சற்றுப் பிசகினாலும்
கையில் கிடைத்தததை வீசுகிறாய்
சீராய் வைத்த பொருள்கள் எலாம்
சிதைத்து இறைத்துப் போடுகிறாய்
சீரமைக்கும் பணியில் நானிருந்தால்
சிறு நகைப் புரிந்து எனை மயக்குகிறாய்

கடமைகள் பல காத்திருந்தும்
கருத்தில் மேலோங்கி நிற்கின்றாய்
கண் மூடி நான் அயர்ந்தாலும்
கனவிலும் என்னில் விழிக்கின்றாய்

இன்று உனது பிறந்த நாள்
இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்
நோய் நொடி இன்றி நீடூழி வாழ
இறைசேவடி பணிந்து வேண்டுகிறேன்

சித்திரம் ஒத்த உன் கண்கள் -மக்கள்
சீரமைக்கும் பாதையே நோக்கட்டும் !
சிற்றடி வளர்ந்து அதன் வழியே
போராடி வென்றிட நடக்கட்டும் !
பிஞ்சு விரல்கள் வலு பெற்று -சமூக
நஞ்சுகள் நீக்கத் துடிக்கட்டும் !
எதுவும் முடியும் எண்ணம் போல்
என்ற தன்னம்பிக்கை வளரட்டும்!
கண்டு உகந்த உலகம் உன்னை
நூறாண்டு வாழ வாழ்த்தட்டும்!

அன்பு பாட்டி
கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (11-Apr-16, 9:54 am)
பார்வை : 44

மேலே