சொர்க்கம்

நடக்கிறேன் நடந்து திரிந்து கொண்டிருக்கிறேன்
ஆனாலும் இன்று ஏனோ
ஒரு அயர்ச்சியும் இல்லை சோர்வும் இல்லை

பாதையில் ஆயிரம் பேர் நடந்தாலும்
எனக்கு தெரிந்த முகம் யாரும் இல்லை

தூரத்தில் ஒரு முகம்,,,,,எனக்கு பிடித்த முகம்
நான் எப்பொழுதும் பார்க்க ஆசைப்படும் முகம்
என் தாயின் முகம்.....
அட அம்மா எப்படி இங்கே.....
அருகே சென்றேன்,,,,,என்னை பார்த்து
புன்முறுவல்...என் கை கோர்த்து அவளும் நடக்கிறாள்.

நடக்கிறோம்......நடக்கிறோம்....
என் சிறு வயது பள்ளி வருகிறது
அம்மா, இங்கு நான் செலவிட்ட ஆண்டுகள்
எத்தனை இன்பக் கனவுகளை தந்தது
கவலை இல்லாத நாட்கள்
பட்டாம்பூச்சியை போல் பறந்து திரிந்த காலம்
இது தானம்மா, என் சொர்க்கம்......
என்றேன்......இன்னும் அதே புன்முறுவல்
ஒன்றும் பேசாதவளாய் என்னோடு நடந்தாள்.

என் திருமணமான மண்டபம் வந்தது
கனவுகளை கண்களில் சுமந்துகொண்டு
பல எதிர்பார்ப்புகளோடு நான் மணவறையில்
உன் உயிர் துணையாய் நானிருப்பேன் என்று
என் அருகில் என் கணவன்......
உற்றாரும் உறவினரும் வாழ்த்த
நான் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில்
அடியெடுத்து வைத்தேன் ......
அன்று நான் கண்டது தானம்மா என் சொர்க்கம்......
என்றேன்......இன்னும் அதே புன்முறுவல்.

இன்னும் நடந்தோம்....
என் பெண் பிறந்த மருத்துவமனை வந்தது
உலகத்தையே தாய்மை உணர்வோடு
வேறு ஒரு கோணத்தில்
பார்க்க வைத்த அந்த நாள்
நான் உயிர் சுமந்த தாயானேன்
வாரி அனைத்து வளர்க்கும் சேயானேன்
இறைவனின் வரம் கிடைக்க பெற்றேன்
இது தானம்மா, என் சொர்க்கம்......
என்றேன்......இன்னும் அதே புன்முறுவல்.

என்னை அறியாமல் என் கால்கள் நடந்த
இந்த பாதையில்தான் .... என் இல்லம்
அதோ மாமரமும் தென்னையும் சூழ
அந்த வீடு......நானும் என் குடும்பமும் வாழ்ந்த இடம்
வாழ்ந்த இடமா......இப்போது யார் இருக்கிறார்கள்?
அம்மாவின் கையை விட்டு வேகமாக நடந்தேன்
வீட்டின் வாசற்படியில் ஒரு நிமிடம் நின்றேன்
குரல்கேட்டது என் மகள் என் மகன்,,,,
,என் கணவரின் குரலும் தான்,....
எல்லோரும் இங்கு இருக்க நான் மட்டும் ஏன்
இப்படி அலைந்து திரிகிறேன்
மனத்தில் ஏதோ பீதி பற்றிக்கொள்ள
அம்மாவை தேடினேன்......
அவள் இப்போது என் கை பற்றி உள்ளே கூட்டி சென்றாள்
அனைவரையும் தாண்டி கூடத்தின் மறுமுனைக்கு
அங்கே அலமாரியில் நான்...
என் படம்....படத்திற்கு மாலை.....
எல்லாம் உணர்ந்தவளாய் திரும்பினேன்
என் கணவர் ஏதோ படிக்க என் மகன் அதை எழுத
என் மகள் பேரன்பேத்திகளுக்கு சோறு கொடுக்கிறாள்
என் சொந்தங்களை விட்டு பிரிந்தேனோ
என் சொர்கத்தை விட்டு பிரிந்தேனோ
வெளியே ஓடி மாமர நிழலில் நின்றேன்
ஆதரவாய் அம்மா என் கை பற்றினாள்
என்னோடு வா சொர்க்கம் போவோம்
என அழைத்து சென்றாள்
பிரிய மனமில்லாமல் வலியோடு உயிர் வளியை
விட்டு பிரிந்து அம்மாவின் கைப்பற்றிஅவள் பின்னே நானும் நடந்தேன்......அவள் சொல்லும் சொர்கத்திற்கு .

எழுதியவர் : சுபா சுந்தர் (11-Apr-16, 12:56 pm)
Tanglish : sorkkam
பார்வை : 473

மேலே