பச்சை முண்டாசு தாத்தா 2
சாப்பிட்டு வேகமாக வந்து அந்த ஜன்னலோரம் நின்றேன். அந்த பமு (பச்சை முண்டாசு) தாத்தாவை காணவில்லை. விடுதி அமைதியானது. நானும் என் பாடத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினேன்.
மாலை நான்கிருக்கும் அம்மா காபியும் வடையும் எடுத்து வந்தாள்.
நான் கோவிலுக்கு போறேன் வரியா...என்றாள். ம், .... என்று எழுந்து உடை மாற்றிக்கொண்டேன். அம்மாவோடு நடந்தேன்.
அம்மாவோடு நடப்பது ஒரு சுகம். அம்மாவிடம் தெரிந்ததை கூட தெரியாதது போல் கேட்டால் அவள் அதை தெரியாவிட்டாலும் தெரிந்தது போல் சொல்வாள். அது தான் தாய். அதிலும் என் அம்மா நிரம்ப பேசுவாள்.
ஒரு வீட்டை காட்டி,...
“இங்கே தையல் கிளாஸ் நடக்குதாம், நானும் சேரலாம்னு இருக்கேன்” என்றாள்.
மற்றொரு வீட்டை காட்டி இதில் மாடியில்
” உன் ஸ்கூல் டீச்சர் இருக்காங்களாம். ஆனா சின்ன கிளாஸ் டீச்சர்”.
அடுக்கு மாடி கட்டிடத்தை காட்டி, “இதில என் பிரிண்டோட பிரெண்டு இருக்கா, போய் பாக்கணும்"....பேசிக்கொண்டே வந்தாள்.
“இதெல்லாம் எப்படி தெரியும் உனக்கு?” என்றேன்,
“வீட்டுவேலை செய்ய ஒரு அக்கா வருதில்ல அவ சொன்ன”....என்றாள்.
ம் , இனி இந்த பகுதி ரேடியோவாக மாறிவிடுவாள் என் அம்மா....மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
தெரு கடைசி வீடு வந்தது அந்த புசுபுசு நாய் குரைத்தது.
கோவிலில் நல்ல கூட்டம், லீவ் நாள் என்பதால் எல்லோரும் சிபாரிசுக்கு கடவுளை தேடி வந்திருக்கிறார்கள்.
என் அம்மா உட்பட. அம்மா என் நெற்றியில் திருநீர் வைப்பதே ஒரு அழகு. வைத்துவிட்டு கையை மூக்கின்மேல் வைத்து ஊதியும் விடுவாள். நல்ல படிக்கணும்னு வேண்டிக்க.... என்று சொல்லிவிட்டு தானும் ஏதோ முனுமுனுத்தாள்.
எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் கோவிலுக்கு போய்தான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லை. அர்ச்சனை செய்த தேங்காயை எடுத்து உடைத்து சாப்பிடலாம் என்று நகர்ந்தேன்.
அம்மாவின் பின்னாலிருந்து
“ஏய், நீங்க மாலதி தானே”....என்று ஒரு குரல்.
“ என் பேரு வைதேகி ரெக்ஸ் ஹௌசிங்க்ல தான் வீடு. நீங்க வேதா வோட பிரெண்ட் தானே, உங்கள அவங்க வீடு விசேஷத்ல பாத்திருக்கேன். என்று கூறிவிட்டு “வீடு மாறிட்டீங்களா? எப்ப வந்தீங்க?......”
அடுக்கடுக்காய் கேள்விகள்.....
அம்மாடியோவ் என் அம்மாக்கு சரியான ஜோடி என்று நினைத்துகொண்டேன். “இவன் என் பையன், அஷ்வின்....9 வது படிக்கிறான்” என்றார் அந்த ஆண்ட்டி.
“அட அஷ்வின்!.... அம்மா நானும் இவனும் ஒரே ஆட்டோ தான் மா”....என்றேன்.
வைதேகி ஆண்டிக்கு ஒரே குஷி. நாம பிரெண்ட்ஸ், நம்ம பசங்களும் பிரெண்ட்ஸ்......'என்று சிரித்தார்.
கோவிலுக்கு வெளியே வந்தோம் செருப்பை போட்டு கொண்டு நடந்தோம்....தெரு முனையில் திரும்புகையில் எதிரே அந்த பமு தாத்தா,..அதே மெல்ல நடை. அம்மாவிடம் காட்டினேன்.
“”அம்மா இந்த தாத்தா பாரேன், எங்கேயோ பாத்த மாதிரி இல்ல,... நம்ம வீட்டு எதிர்ல இருக்கற ஹாஸ்டலுக்கு வந்தாரு மதியம்”.
அம்மாவும் பார்த்தாள், “தெரியலையேடா ....தெரிஞ்ச முகமாத்தான் இருக்கு. ஞாபகம் வரலையே. எங்கேயிருந்து வராரு....எங்கே போறாரு....ம்... இரு... வீட்ல வேல செய்ய வராளே துர்கா, அவள கேட்கலாம் யாருன்னு....”என் எண்ண ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
தெரு கடைசி வீட்டில் அந்த புசுபுசு வெள்ளை நாய் அந்த தாத்தாவை பார்த்து கத்தவே இல்லை...மாறாக வாலை குழைத்து குழைத்து ஆட்டியது. நான் வியந்தே போனேன்.... அந்த தாத்தாவும் அதை ஒருகணம் பார்த்துவிட்டு தன் வழி நடக்கலானார்.
தாத்தாவை தாண்டி நாங்கள் அந்த வீட்டின் அருகே வந்தோம்.....பௌபோவ் தான்....ஒரே சத்தம்....எங்களை பார்த்தும் மற்றும் தெருவில் செல்லும் எல்லோரையும் பார்த்தும் ஒரே குரைச்சல். “அம்மா பாரேன் இந்த நாய் அந்த தாத்தாவை பார்த்து மட்டும் குரைக்காமல் வாலை ஆட்டியது” என்றேன்.
“அட, விடாமல் எல்லோரையும் பார்த்து குரைக்கும் நாய்....அது வாலையெல்லாம் ஒன்னும் ஆட்டல. குறைச்சிட்டே தான் இருக்கு பேசாம வா....அங்கேயே நின்னேன்னா இன்னும் குரைக்கும்” என்று சொல்லி என்னை நகர்த்திக்கொண்டு சென்றாள்......
நான் குழம்பினேன்....ஒரு புதிராக என்னை குழப்பியது அந்த பமு தாத்தா.
தொடரும்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
