கவிதை தொக்கு - 4 - மணி அமரன்

தடுக்கி விழுந்தால் சாதிக்குழி
******* ************ *********
கவனமாக செல்லவும்
அடிக்கொரு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்
ஆமாம்
தடுக்கி விழுந்தால் சாதிக் குழி
அதோ...
சாதிக்கப் பிறந்தவன் விழுந்து கிடக்கின்றான் சாதிக் குழிகளுக்குள்...

கத்திகள் தீட்டப்படும் உலகில்
மழுங்கியே கிடக்கிறது புத்திகள்
மண்டையோட்டு பரண்களுக்குள்....

சங்கம் வைத்து வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
தமிழை மறந்து சாதியை

மனிதம் மறந்த மன வயலெங்கும்
வெட்ட வெட்ட கிளை பரப்புகிறது
சாதிக் களைகள்...

படியப் போவது இரத்தக் கறைகள்தான்
ஆனாலும் அணிந்து திரிகிறான்
அளவெடுத்து தைத்தது போல்
சாதிச் சட்டைகளை...

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்
எப்படி புரிந்தார்களோ தெரியவில்லை
ஆமாம். .
தீண்டப் படாமல்தான் செல்கிறது
பாட நூல்களின் முதல் பக்கம்...

"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று
எட்டுத்திக்கும் முழங்கியவனின் வாரிசுகள்
விண்ணப்பித்துக் கொண்டிருக்கலாம்
எங்கோ ஒரு அரசு அலுவலங்களில்
சாதிச் சான்றிதழ் கேட்டு...

"சாதி இரண்டொழிய வேறில்லை" என்று
காலையில் பாடம் நடத்திய ஆசிரியர்தான்
வாசித்துக் கொண்டிருக்கிறார் சுற்றரிக்கையை
மாலையில் இப்போது
ஆமாம்..
மாணவர்கள் அனைவரும்
சாதிச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டுமென்று...

வெட்டப்பட்டு கிடக்கின்றான்
மேல்சாதி என்று சொல்லப் பட்டவனும்
கீழ் சாதி என்று சொல்லப் பட்டவனும்
இதோ பாருங்கள் மடையர்களே
சாதி சொல்லிப் பிரித்து வெட்டியதால்
மரித்துப் போனவர்களின் தெறித்த இரத்தங்களை
வறுமையின் நிறம் மட்டுமல்ல
இதோ இந்த பாழாய்ப்போன
சாதியின் நிறமும் சிவப்புதான்....

பிள்ளையில் இரண்டு செட்டியில் இரண்டு
தேவரில் இரண்டு யாதவரில் இரண்டு
நாடாரில் இரண்டு தலீத்தில் இரண்டு
இப்படியாக இருக்கும் சாதிகளிலெல்லாம்
ஆணிலொன்று பெண்ணிலொன்று என்று ஆதியில் இரண்டிரண்டாகவாடா படைத்தாய்..?
அடத்துக் கூட கேட்டு விட்டேன் அவனை
அவனோ கல்லாகவே இருக்கின்றான்
கடவுள் என்ற பெயரோடு...

அடப் போங்கடா
நீங்களும் உங்க சாதியும்..

எழுதியவர் : மணி அமரன் (13-Apr-16, 11:24 am)
பார்வை : 301

மேலே