காலச்சுவடுகள் - 14 - விவேக்பாரதி

கண்ட பொழுதிலே காரிருளை நீக்கிடுவாய்
அண்டத்தை ஆள்ஈசா ! ஆலாலம் - உண்டவனே
உன்றன் புகழ்பாட உன்னதமாய் வெண்பாவில்
கன்றும் கவிசெய்தேன் கற்று !

கற்றுன்னை எண்ணிடக் காராய் வரங்கள்யான்
பெற்றே உலகுசொலும் பேறடைவேன் ! - நெற்றிவிழி
சேர்ந்த அழகுடையாய் ! சேயெனக்கும் இன்பங்கள்
நேர்ந்திட வந்திடுவாய் நீ !

நீராடும் நெற்றியொடு நீள்சடையில் கங்கையும்
பேரோடே ஓடப் பிறைநிலவு - சீராகக்
கொண்டை மிசையில் குதித்து நடனமிட
வண்டார் குழலியொடு வா !

வாயுள் இனிக்கும் வளமான செங்கனியே !
ஆயுள் நிறைய அருள்செய்வாய் - தாயுறவே
தந்தையும் ஆனவனே தங்கச் சடையோனே
சந்தமிகு செந்தமிழ்த்தேன் சிந்து !

சிந்து நிகர்த்த சிகையுடைய கங்கைநதி
முந்தி விசும்பிடை வந்துவிட - தந்தையே !
பொற்சடையில் கட்டிவைத்தாய் ! பொன்மலை யானேஎன்
கற்பனையில் வந்து கனி !

கனியால் நிகழ்த்தினாய் காலவிளை யாட்டை
நனியழகுப் பெற்றோரை நன்றாய் - மனத்திருத்தி !
காலாதி காலனே ! காற்படிந் திட்டேனே
ஏலாதி தாராய் எனக்கு !

எனக்குமோ ரூறென்றால் ஏழ்மலை தாண்டி
தினந்தொறும் நீவந் தருள்வாய் - தனமோடு
நல்லறமும் சேர்ந்திங்கே நல்கிடுவாய் ஈசனேநீ
தில்லை நடமிடும் தீ !

தீயொரு கண்கொண்டாய் தித்திக்கும் பல்சுவையில்
நீயொரு இன்சுவையாய் நிற்பாயே - வாயொருசொல்
சொன்னால் அதுமிங்கே சோதிப் பழம்பொருளே
உன்பேர் நமச்சிவாய மாம் !

மாம்பழம் தந்திட்ட மங்கைக்கு நீபிள்ளை
பூம்பொழில் பூத்த புதுவனத்தில் - காம்பேந்தும்
அல்லி மலரொத்த அம்பிகையின் ஆண்டவனே
அல்லல் அறுத்தெனை ஆள் !

ஆள்கின்ற மன்னா அடிமை எனைஇங்கே
நீள்கரத்தால் தூக்கி நிறுத்துவாய் - நாள்பலவாய்
மேதினியில் வாழ்வோரும் மன்றாடும் வீடுபேற்றை
சோதியே எனக்குச் சொடுக்கு !

-விவேக்பாரதி

_____________________________________________________________________________________

புகழந்தாதியைத் தேர்ந்தெடுத்துப் பதியச்சொல்லி என்னையும் காலச்சுவட்டில் கால்வைக்கச் சொன்ன கவித்தா சபாபதி அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

எழுதியவர் : விவேக்பாரதி (14-Apr-16, 12:21 pm)
பார்வை : 387

மேலே