சாக்லைட் பூக்கள்

சாக்லைட் பூக்கள்
***************************

பின் புலத்தை
யாரோ தட்டியதைப் போன்ற
என் தோன்றலுக்கு
பின்னாலிருந்தது ம்ம்
அந்த சாகலைட் அரும்புகளின் வாசம்

வெள்ளியோடையில்
எல்லா பௌர்ணமி போலில்லாமல்
அதிக எழில் சொரிந்தபடி வீற்றிருந்தது
அன்றைய நிலாமுற்றம்

ஒற்றை மரத்தின்
அப்பாவி அரும்புகள் உடைய
பிரம்மாண்ட மைதானம் அது
அடிக்கல்லில், கால் நெக்கி, கிளை உலுக்கி
கீழே உதிரும் அரும்புகளை
ஒவ்வொன்றாக பொறுக்கிக்கொண்டிருந்தேன்

சிறுநேர சிரிப்பை
அங்கேயே தொலைத்துவிட்டு
வந்தவழி மறந்துவிட்டேன்
இந்தக் குட்டிக்குட்டி சந்தோஷங்கள்
நீட்சிப்பெறவேனும்
என் கனவுகளில்
ஓராயிரம் மரங்களை
நட்டுவைக்க வேண்டும்போல் ஆசை ம்ம்

உறக்கம் விழித்த பிந்தைய நாட்களில்
வீதி முனை மேடையில்
அவ்வழியே
அந்த அரும்புகளின் வாசம்
கடந்து போனதாகவும்
மனித முகமுடைய
கூடுசுமந்த
நத்தை தேவதைகள்
அதன் பின்னால் விரைந்ததாகவும்
சுருள் சிகையுடைய
கருத்த மனிதர்கள்
இசை வாத்தியங்களுடன்
பறைசாற்றிக் கொண்டிருந்தார்கள்

என்னிடமிருந்து தப்பிச்சென்று
காற்றழுத்ததிற்குள்
காலாவதியாகவிருக்கும் வாசத்தை
எதிர்வாக்கில் நின்று
இழுத்துக்கொண்டிருக்கிறேன்
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (16-Apr-16, 3:24 am)
பார்வை : 107

மேலே