வாழ்க்கை பாடம்
பள்ளியில் படித்தேன்....
அது படிப்பல்ல ...
கல்லூரியில் கற்றேன்..
அது கல்வியல்ல ...
காலம் என்னை
மடியிலிட்டு
பயிற்றுவித்த பயிற்சியே
என் முதிர்ச்சி!!
என் கால ஏட்டில்
ஒன்று முதல் 133 வரை
எதுவும் பொருந்தவில்லை திருக்குறளில்
"புற"நானூறு நிறைய உண்டு
அகநானூறு எதுவுமில்லை
ஐந்து திணைகளில்
"பாலை" மட்டுமே மனதில்
சீதையை பிரிந்த ராமனாய்
கம்பனிடம்,
பத்ம வியூகம் பலி வாங்கிய
அபிமன்யுவாக பாரதத்தில்,
களவாத சிலம்புக்காக
உயிர் விட்ட கோவலனாக,
நானும் ஒரு "ராஜபார்ட்"தான்
வாழ்க்கை கூத்தில்
பலவும் உண்டு
பசுமரத்தாணியாக...
மனதில்...
உக்கிர நெருப்பு....
விழியில்...
மனதின் கசப்பு ....
புன்னகையில் ...
இத்தனையும் மறைத்து நடிக்கும்...
நானும் ஒரு "ராஜபார்ட்"தான்...
நம்பாதே நண்பனே!!
நல்ல மாணவன் நானில்லை..
காலத்தின் வகுப்பறையில்
கடைசி வரிசையில் நான் மட்டும்...
இன்னும் எதையோ
எதிர்பார்த்து.... ஏமாந்து...
வெறிச்சோடிய வகுப்பறைகளில்...
ஒவ்வொன்றாய் தேறி...
தனியனாய் வெளி வந்த போது...
அந்தி காலத்தின் மணி அடிக்கிறது...
காலனாவது கொடுப்பானா
களங்கமில்லா வாழ்வை?
காலன் பின்னால்
கட்டிய கையில்...
கத்தியின் நிழல்...
அடுத்த பாடத்திற்கு தயாராய் ...
தனியனாய்..
நிழல் கூட இல்லாமல் ...
மேல் நோக்கி நான் மட்டும்....
அஸ்தமனம் அதோ அடிவானில்....
அடுத்த ஜென்மத்தையாவது நம்பி... ஆனந்த்.வி

