பனை மரம்
பனையே முது பெரும் பனையே
உன்னை நீர் ஊற்றி வளர்க்கவில்லை
நிலத்திற்கு பசளை இட்டதில்லை
நிரை நிரையாய் வளர்வதற்கு
உன் விதையை ஊன்றி விட்டனர் மக்கள்
அதுவும் தங்கள் வயலின்
எல்லையைக் காப்பதற்கு
மக்கள் எதிலும் சுயநலம்
ஆனால் சுயநலமே இல்லாத
பனைமரம் நீ உன்னால்
நாங்கள் அடையும் பயன்
எண்ணற்றவை பனை என்றால்
பனை காடு என்றால் இழிவாகவும்
எளிமையாகவும் நினைப்பதுண்டு
ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும்
உன்னிடம் கிளைகள் இல்லையே
உன்னிழலில் தங்க இடம் இல்லையே ,
நெடு நெடுவென்று வளர்ந்து
உச்சியிலே ஒரு முடியைப் போல்
அழகான குருத்தோலை காவோலை
குண்டு குண்டு பழங்கள் எல்லாமே
அத்தனையும் மக்கள் தேவைக்கு
ஏற்றாப் போல் தலையாலே சுமக்கின்றாய்
அண்ணார்ந்து பார்த்தால் ஆச்சரியம்தான்
எவ்வளவு உயரம் கன்னங் கரேலென்று
எதற்கும் அச்சமின்றி வளர்ந்து நிற்கின்றாய்
உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய
கற்பகம் எனும் அழகிய பெயர்
உனக்கு மிகவும் பொருத்தமே
எத்தனை புயல் அடித்தும் பனை வீழ்ந்ததாக
சரித்திரமே இல்லை
அத்துணை உறுதி உன்னிடம்
நீ நிலைத்தாலும் ஆயிரம் பொன்
உன்னை வெட்டி வீழ்த்தினாலும் ஆயிரமே