வேறு நிலாக்கள் -41
நாள்பட்ட மௌனங்களில்
நடத்தைச் சான்றிதழ்
கைச்சாத்து இட்டவருக்கு
கையூட்டு கொடுத்து
காளாம்பிக பிரவேசம் செய்து குளிரும்.
எண்ண படிமங்களில்
இருள்தேச வனாந்திரங்கள்
சங்கிலி கோப்பு
சரடுகளில் புரண்டெழுந்து
சரித்திரம் இதுவென்று சாகசத்தில் மிளிரும் .
வளர்பிறைகள் தேய்வதும்
தேய்பிறைகள் போவதும்
இனியாண்டுக்கு ஒருமுறையென்று
ஆகாசத் தேவதைகள் கூடிச்சொல்ல
அக்னிப் பிரவேசம் செய்தார்கள்
அந்திமச் சூரியர்கள் .
தூரிகை துப்பிய வண்ணங்களில்
தூசு நிறைந்த உள்ளக்காட்டில்
ஒருமானுட முக ஓவியத்தில்
ஒரு காட்டு விலங்கு தோன்றி நிற்க
திக்கற்று நின்றார்கள்
தூரிகை தூக்கிய ஓவியர்கள்
நாளைக்கு விடுமுறையென்று
இன்றைக்கே இருமுறை
கடலில் விழுந்தெழுந்து இறந்தான்
காலம் காலமாய் பொய்சொல்லி நீதி சொன்ன
காளப் பைரவச் சூரியனும் ....
இனி அவர்களுக்கு
அஷ்டமத்தில் சனியென்று
அவர்களுக்கு சொல்ல
சூழ்ந்திருக்கும் மணி அடிச்சான்களுக்கு
ஏனோ மனம் ஒப்பவில்லை .