அழுகைக் குரல்கள்
எங்கும் புகை மண்டலம்
ஈனசுரத்தில்
எனக்குக் கேட்கிறது
தூரத்தில்
மரணித்துக் கொண்டிருக்கும்
ஒருவனின் முனகல்
என் உடலைத் தொடும்
உயிரற்ற ஒரு பறவையின்
மெல்லிறக்கை உணர்கிறேன் !
தட்டுத் தடுமாறி எழுந்து
கருகிய புல் தளத்தில் நடக்கிறேன் !
பரவிக் கிடக்கும் மனித ரத்தம்
ஈரமாக்குகின்றது என் பாதங்களை
ஓரிடத்தில் பார்வை குத்திட்டு
நிற்கிறேன்
மயானமாகிவிட்ட நகரத்தின்
மனிதர்களின் ஆன்மாக்கள்
அழைப்பைக் கேட்டு !
நேற்றுவரை ..
பேதங்களும் பொறாமைகளும்
பொய்களும் கபடங்களும்
செய்து இழிநிலை
விளிம்புகளில் வாழ்ந்த
ஆன்மாக்களின் கூட்டம் ..
நகரத்தின் மேற்கில்
மலைப் பகுதியி லிருந்து
பறந்து வந்த போர்விமானங்களின்
குண்டு மழையில்
இன்று காலை மயானமாக்கப்பட்ட
போலியான அமைதிப் பூங்காவில்
இந்த ஆன்மாக்களின்
குற்றவுணர்ச்சி கூடிய
அழுகைக் குரல்கள்
எவர் காதிலும் விழாது ..
என்னைத் தவிர ..
யாருமில்லா இந்த
அழிந்து போய்விட்ட நகரத்தில்
நித்திய இரவு தான் இனி !
வான மண்டலம்
வெறிச்சோடி என் மண்ணிலிருந்து
எழுகின்ற புகை மூட்டத்தை
வாங்கிக் கொண்டிருக்க
மரணத்தின் ஓலங்கள்
அடங்கிய நகரம் நரகமாய்
நிசப்தம் கடைபிடிக்க
நான் சிரிக்கிறேன்..
யாரை எண்ணி அழுவது
என்று நினைத்தபடி
“ஹோ” வென்று
பெரும் சப்தம் எழுப்பும்
கடலின் முன்
மணலில் சாய்ந்து விழுகிறேன்..!