நீல நடுநிசியில்

நடு இரவில் நெடுமலையில்
நீலவண்ண ஒளிச்சேர்க்கை….
நிசப்தத்தின் பேரமைதியில்
நீல நிறப்பிரிகையில் சுற்றுப்புறம்…

அந்திக்கனவுகளுக்கு
விடைகொடுத்து
சாளரம் நோக்கிய கண்களிலிருந்து
தொலைந்து போனது
எனது இருவிழிப்பந்துகள்..

பார்வை பரிதவிப்புகள்
அந்தகக் கண்களில் நிழலாடுகிறது.
உள்ளுக்குள்ளோ
கந்தகத் தாபங்கள்..!

நிலவுக் காதலன்
நீரோடைக் காதலியிடம்
நிதர்சனமாய் கலந்துநிற்க
நான் மட்டும் தனியே..

உடலின் உயிரானவளே..!
ஊமையாய் நான்.
என் உயிரோசையை
இந்த நள்ளிரவு நீலநிசியில்
உணர்வுகளால் மொழிபெயர்க்கிறேன்…
.நம் இருவருக்கு மட்டுமே
புரிந்த சங்கேத மொழிகளில்.

உயிரில் நிறைந்தவளே..!
என் ஆழ்மனம் பாடும்
இரவோசை கேட்கிறதா…?

சற்று நேரத்தில் அது
உன் இதயத்தில்
மையம் கொள்ளலாம்.

உறக்கம் கலையாமல்
உற்றுக் கேள்..
உணர்வலைகள் எழுப்பிடும்
நிறைந்த நாதங்களில்
அசைபிரித்து யாப்பெழுதி.
திருப்பி அனுப்பு….

அதுவே நம்மிருவரின்
இதயகானமாய்
இறவாது இருக்கட்டும்.

அதுவரையில்
இந்த நீலநிசியில்
என் நித்திரையில்லா அகத்திரை
திறந்தபடியே காத்திருக்கும்
இனம் புரியா நெருடலோடு.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (22-Apr-16, 9:50 pm)
Tanglish : neela nadunisiyil
பார்வை : 1052

மேலே