விட்டாச்சு லீவு

ராஜா ராணி விளையாடலாம்
ரகசிய போலீஸ் நாமாகலாம்
கூஜா தூக்கி நடந்துகாட்டி
கட்சித் தலைவராய் நடமாடலாம்
திருடனாய் நடிச்சு திருந்திடலாம்
வாத்திய பழிச்சு சிரித்திடலாம்
பரிட்சை எழுதி லீவுவிட்டாச்சு
கூடி கும்மாளம் போட்டிடலாம்
பம்பரம் கில்லி கலக்கிடலாம்
கோலி குண்டையும் ஒடச்சிடலாம்
வாய்க்கா வரப்புல பந்திவச்சு
கறிசோறு பரிமாறி பசியாறலாம்
கிணத்துத் தண்ணியில் குளித்திடலாம்
நேரத்தை நம்போக்கில் களித்திடலாம்
புத்தகம் டீச்சர மறந்தேவிட்டே
கூடி கும்மாளம் போட்டிடலாம்
பட்டமாய் வானில் பறப்போமே
சிட்டாக சீட்டி அடிப்போமே
எட்டாத மேகத்தை எட்டிப்பிடிச்சு
தலைமாட்டில் வச்சு படுப்போமே
பாட்டாய் எடுத்து விடுவோமே
பகட்டாய் உடுப்பு அணிவோமே
ஊருக்குள் இருக்கிற எல்லோரும்வாங்க
கூடி கும்மாளம் போடுவோமே
புரியாத பாட்டுக்கு ஆடுவோமே
பஞ்சாக பறக்கும்வழி நாடுவோமே
அறியாத மக்களுக்கு கல்விபுகட்டி
விடுப்பத்தான் பயனாகக் களிப்போமே
தெரியாத விஷயங்கள் சொல்லச்சொல்லி
பெரியோரின் காதுகளை கடிப்போமே
எம்பாட்டக் கேட்போரே இப்போதேவாங்க
கூடி கும்மாளம் போடுவோமே