தமிழ்நாட்டு சாதி அரசியல்

தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்று சொல்வது ஒருவகையில் ஏற்புடையது என்று சொன்னாலும் உண்மை நிலையை சொல்லியாக வேண்டும். யார் ஆண்டால் என்ன, நாம் ஆறறிவு கொண்டு வாக்களிக்கிறோமா என்பது எனக்கு புரியாத புதிராக உள்ளது.
காமராஜர் முதற்கொண்டு தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவில்லையா?
காமராஜர் காலத்தில் என்ன குறை.? ஆரம்பத்தில் கல்வி என்பதை கற்க முடியாத அந்த மகான், பிறரது கல்விக்காக நினைத்தவை, அதற்காக செய்தவை கொஞ்சமல்ல. கல்விக்கு மட்டுமல்ல அந்த கல்வி கற்க உணவுதான் பிரதானம் என்பதையும் நடைமுறை வாழ்க்கையில் அறிந்து கொண்டு அதற்கும் வழி வகுத்த பெருந்தலைவர் அவர். உலகத்துக்கே முன்னுதாரணமாக நின்ற அந்த பெருந்தலைவருக்கும் தோல்வியைத்தானே தந்தோம். இறுதிவரை அவரை ஆளவிட்டிருந்தால் கல்விக்கும், அது சார்ந்த தொழிலுக்கும் பல முன்னுதாரணங்களை காட்டியிருப்பார். அப்போது அவருக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு சிந்தனை அறிவு இல்லாமல் போனதெப்படி..? தமிழரைத் தமிழரே ஆணிவேர் அகற்றி அழித்துவிடும் காலங்கள் வரலாற்றில் இன்னும் கருப்புப் புள்ளியாய் இருக்கின்றன. இன்றைய வேச அரசியல்வாதிகள் பெருமைக்காக வெள்ளப் பணிகளை பார்வையிட்டபோது எந்த சத்தமுமில்லாமல் அவர் காலத்தில் ஏற்பட்ட அன்றைய வெள்ளப் பணிகளை நேரில் ஆராய்ந்து உண்மையாக சாதி மதம் ஏதுமில்லாமல் மக்கள் நலத்துக்கு மட்டுமே முன்னுரிமை தந்து, அவர்கள் துயரம் போக்கிய இந்த தலைவரை எத்தனை முறை வணங்கினாலும் தகும்
இவரைப் போல் இருக்க எந்த தலைவர் இன்று விரும்புகிறார்?. கர்மவீரர் என்றாலும் பெருந்தலைவர் என்றாலும் பொருந்தும் இந்த அடைமொழிகள் காமராஜருக்கே உரித்தானவை.
எல்லா சாதியினருக்கும் ஏன் ஒரு சிறுவனுக்குக்கூட மதிப்பளிக்கும் அந்த தலைவர் எங்கே... காலம் காலமாய் அடிமையாய் கட்சிக்கு உழைப்பவனையே உதைத்து துவைக்கும் சாதி அரசியலார் இவர்களெங்கே.?
அதே போல திரு கக்கன் அவர்கள் விவசாயத்துக்கு நீராதாரமும், விவசாய கல்வியும் தேவை என்றுணர்ந்து அமைச்சராக இருந்த காலத்தில் மேட்டூர்,வைகை அணைகளைக் கட்டியும். விவசாயப் பல்கலைக் கழகங்களை உருவாக்கியும் பாடுபட்ட அவரும் வேறு ஒரு சாதியே. தன் சாதியை மட்டுமே பார்த்திருந்தால் அவரை இன்றளவும் விவசாயிகளால் மறக்க முடியாது. இவர்களைப் போன்றோர் இல்லாமலிருந்தால் தமிழகம் நிச்சயம் முன்னேறி இருக்காது.
இன்றைய அரசியல் தலைவர்களுக்கு ”தம் நலம்” மட்டுமே ”முதல் நலம்” என்பது தாரக மந்திரமாக இருக்கிறது. அதே போல் ”ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லடா தம்பி” என்ற இரட்டை அரசியல் வேசங்களெல்லாம் இப்போதுதானே வந்தது.
இப்போது சாதிக்கு வருவோம். அன்றே சாதி இருந்தது. சாதி என்பது நல்லவர்களை அழிக்கவும், தீயவர்களை வளர்க்கவும்தான் என்பதை இன்றளவில் புரிந்து கொள்பவர்கள்தான் சாதி அரசியல்வாதிகள். இதுதான் நாட்டின் ஒற்றுமைக்கும், நாட்டின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும் பங்கம் விளைவிப்பவை.
எப்போது அரசியலுக்கு சாதி சாயம் மட்டுமே வாக்குகளாக மாறும் என்று பட்டதோ அப்போதிருந்தே நல்ல அரசியலுக்கு சாவுமணி அடிக்க ஆரம்பித்து விட்டது. இப்போதெல்லாம் கொள்கைகள் இல்லை. கொள்கைகள் இருந்தாலும் கூட்டணி என்று வரும்போது கொள்கைகள் மாறிடும் அவலம். இன்னும் சில நேரங்களில் கூட்டணியே மாறிடும் தலைவர்கள்.
தேவைப்படும்போது. குடிமகன்களாய் இல்லாமல் ”குடி” மகன்களாய் வாழும் நாம் ஒரு நாள் ஓட்டுப்பதிவுக்கு முன் ஏன் சிந்திப்பதில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் ஆள்வதில் எந்த முரண்பாடும் இல்லை. எவர் ஆண்டாலும் சாதித் தீயில் மக்களை விறகாக்கி குளிர்காயும் தலைவர்கள் வேண்டாம். மக்கள் நலம் பேணும் அரசியல் தலைவர் வேண்டும். இந்த குடியரசுக்கு தேவை குடிமகன்கள். ”குடி”மகன்கள் அல்ல.