உடல் தானம் மரண படுக்கையில்

மரண படுக்கையில்

புல்லுக்கட்ட தூக்கிக்கிட்டு
புள்ளைகள அள்ளிகிட்டு
சல்லிக்கட்ட பூட்டிக்கிட்டு
சந்தைவழி போகயில
கரிசகாட்டு ஓரத்துல
கள்ளிச் செடி குத்திடுச்சே
விரிசல் விட்ட வயல்காடு
வாய்காஞ்ச வரப்பினிலே
வெள்ளம் வந்து பாய்கயிலே
காக்கை வந்து கத்துதிங்கே
கரையான் வந்து ஊறுதிங்கே
பொட்டல் காட்டு புழுதியில
புல்லு பூச்சி மொளைக்கயில
கரட்டுக்காட்டு மனுசன் மக்கா
கோமனத்த கட்டிகிட்ட கோவன்
மகன் நடக்குறானே வயல்ல
நாத்த பாவி அறுக்குறானே
நாய்க்கும் சோத்த ஊத்துறானே,
சொரனை கெட்ட சாதி சனம்
சொல்லாமலே போகு திங்கே
எள்ளாமலே வாழுதிங்கே

மரணத்து படுக்கயில மூச்சடச்சா முழிக்கனுமே
மக சேத்தனச்ச உள்ள களிக்கனுமே
புடிச்சு வச்ச ஒரு உசுரும்
காத்தடிச்சா பறந்துடுமோ
சோதனையா இருக்கிறதே
வேதனையில் கட்ட தவிக்குறதே

நெத்திக்கு ஒத்தகாசு
பத்தரமா வச்சு வையி
சத்திரமும் கட்டி வையி
சனம் உம்பேர முணு
முணுக்கும் கோடி சனம்
மனம் வெழுக்கும்,
சேலை கட்ட அவுக்கயில
முந்தானையில் முடிஞ்ச காச
பேரன் முட்டாசு வாங்க
மகன் சட்டமா வாங்கிடுவான்

பிச்சையிட்ட சோத்த தின்னு
ஊமைவெயில் நெழலுக்குள்ள
ஒருக்கனிச்சு படுக்கயில நெனப்பு
சாக்கடைய கெளறுதிங்கே
வேப்பெண்ணையா கசக்குதிங்கே
முக்குளிச்சா போகுமுன்னு
எக்குலமும் தேடிப்போனேன்
சக்களத்தி சண்டையும் இங்க
சாமி குத்தம் ஆயிடுச்சாம்

சும்மா கெடந்த நெலத்தினிலே
ஆறடி கெடங்க வெட்டி ஆருக்குனு
கேக்கயிலே யாருக்குமே நெலச்சதிது
மனசோடு கூறுகையில்
சாதி சனம் கலவரத்தில் நெலத்த
கூறுபோட நினையாதிங்க
ஆசையில நனையாதிங்க

நெல்லாடிய வயலுக்குள்ள
நீராடிய சேத்துக்குள்ள
வரப்போரம் குழியதோண்டி
வேப்பமர நெழலுக்குள்ள
பலர் வேரறுத்த உறுப்புகள
கானாத பொணத்தோட
களையோட அறுக்காம
மணி மணியா உறுப்புகள
கொத்தோட அறுத்தெடுத்து
குருடனுக்கு சாத்திடுவோம் இதை
பல செவிடனுக்கும் சேர்த்திடுவோம்

விடியாத பொழுதுகள
விடியவச்ச நெனப்போட
ஒருசேர வாழ்ந்திடுவோம்
உசுர்போக கண் நீர்தருவோம் -நீர்
தொண்டக்குழி எறங்கயில
தொத்தினி பயலேனு
யாருக்கும் தெரியாம
உயில் எழுதி வாங்காதே
புள்ளகுட்டி வாழுரத
புருவந்தூக்கி பாக்காதே

சோத்தோட கூழசேத்து
கூரை எரியும் வயித்துக்குள்ள
குளு குளுன்னு ஊத்தயில
ஒரு பாத்திக்கு பத்ததாதிது
நாகுடிச்சா சத்தானது
மண்டியிட்டு குளிக்காம
தொண்டனுக்கும் ஊத்திப்பாரு
நெருப்பெரிஞ்ச வயிறுகூட
அவன் சிரிப்புலயே போகிடுமே

வாயிலயும் வார்த்தை உண்டு
வம்பிழுக்க ஆளுமுண்டு
அனாத பயலேன்னு ஆரையும் கூராதே
ஆளுக்கொரு ஆளும் உண்டு
அவன் தோலுக்குள்ள வீரமுண்டு
ஆண்டவனின் அடிமை நீயே
ஒருநா ஆட்டிவச்சு பாத்திடுவான்

சோலிக்கு போகயில கரட்டானயும்
பார்த்துப்புட்டு கரும் பூனையயும் பார்த்துப்புட்டு
தாழிகட்டி அறுத்துப் புட்ட
எந் தங்கச்சியயும் பார்த்துப்புட்டேன்
இது வெளங்காத காரியன்னு
அஞ்சறிவு சீவனையும்
கலங்காத மனம் கொண்ட
கள்ளிச் செருக்கியயும்
பழி சொல்லித் தீராதே
கருவேலம் முள்ளால குத்தாதே

பட்டி தொட்டி படபடக்க
சட்டி முட்டி கிடு கிடுங்க
பாச மாலை மரம் நெறைய
உறவுகள சேத்து வையி
ஊரு ஒருசேர போகயில
ஒன்ன ஒய்யாரம தூக்கிசெல்ல

உன் மரணத்து படுக்கையில.

எழுதியவர் : இலக்கியன் அகல்யன் (25-Apr-16, 6:24 pm)
பார்வை : 130

மேலே