வெளிச்ச வானம்

ஒரு தடாகத்தின்
குளிர்ச்சி பொங்க
வரவேற்கிறது
கருமை நிழலை
மறைக்கும் உன்
சொல்லின் தாளகதி!

தாகத்தினால்
களைப்புற்று மயங்கி
சற்றே சரிந்து விழுகிறேன்
உன் பொய்மை நிழலில்

இளந்தளிரை – கொடியை
இரும்பு முள் வேலி மீது
படர விடுகிறேன்
இலைகள் கிழிபட
சர்ச்சைகளின்றி
நொடியில் வீழ்கிறேன்

வெட்டுப்பட்ட என்
பச்சைச் சிறகுகள்
முளைக்கத் துவங்குகின்றன
தத்தளிக்கும் கொடியும்
துளிர்க்கிறது -நல்ல மரத்தினில்
சில இலைகள் கிழிபட்டும்
சிறகுகளில் குருதியின்
ஈரம் சொட்டினாலும்
உயிர்த்துடிப்பை
நிறுத்திட முடியாது
எதனாலும்

மண்ணில் வீழ்ந்து
மக்கியே போனாலும்
உரமாகும்..
எஞ்சிய
பச்சையமும் நச்சு அல்ல
என்பதால்
உயிர்த்தெழும்
கொடியும்
இருள் நீங்கி
பறக்க எழுகின்ற
பறவையின் சிறகுகளும்
பூபாளம் இசைக்க

வெளிச்ச வானம்
தெரிகிறது ..
அங்கே முட்கள் இல்லை
சிறகொடிக்கும் கைகளும் இல்லை
பொய்மையின் நிழலும் இல்லை ..!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (26-Apr-16, 10:16 am)
Tanglish : velicha vaanam
பார்வை : 48

மேலே