10 வினாடி கதைகள்
1.வாழ்வியல்
நகரத்திற்கு ஐ.டி வேலைக்கு சென்று நொந்து வந்தவனை ஏளனமாய் பார்த்தது ஊர்க்குளத்தில் மீன் கிட்டிய கொக்கு.
2.இணையப்புலவனின் வறுமை
சங்கப் புலவனின் வறுமையை காவியமாக வடித்து பதிவேற்றம் செய்துவிட்டு தனது வாசகர்களின் எண்ணிக்கையை ஒரு முறை யோசித்து அதிகம் நொந்தான்.
3. விளம்பர அரசியல்
'அர்மானி' கைச்சட்டையும் , 'டாம்மி ஹில்பிகர்' கால்சட்டையும் அணிந்து வந்த பிரபல நடிகர் 'மேக் இன் இந்தியா' விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.
4.நினைவு கனவானது
ஆளும் கட்சியின் ஜாதிய அரசியலை கண்டித்து அதை வெற்றிப்படமாக்கிய இளம் டைரக்டர், ஆட்சியை கவர்னர் கலைக்கும் சமயத்தில் துயில் கலைந்தான்.
5.சாதனை
'வாட் டு யு டூ' என்ற கேள்விக்கு தன்னுடைய வேலையை மட்டுமே அடையாளமாக காட்ட வைத்ததே இந்த சமூகத்தின் மிகப்பெரிய சாதனை.
6.வரம்
எந்நேரமும் சார்ஜர் உடன் இணைந்தே இருக்கும் ஸ்மார்ட்போனின் வரம் வேண்டினாள் காதலனை பிரிந்திருந்த காதலி.
7.வாலிபன்
செல்போனின் 'ப்ரைட்னஸோடு' தனது இரவு தூக்க நேரத்தயும் குறைத்துக் கொண்டான் அந்த வாலிபன்.