சம்பளப் பணம் காலி- ஒரு பக்க கதை
அலுவலகத்தில் அன்று சம்பள தினம்.
வழக்கம் போல பார்த்தசாரதியை சூழ்ந்து
கொண்டார்கள் சக ஊழியர்கள்.
அவர் சிக்கனமாக செலவு செய்பவர்.
அதனாலேயே ‘இந்த மாதம் அவசரச் செலவு…
அத்தியாவசியச் செலவு…’ என்று எதையாவது
சொல்லி அவரிடம் கைமாற்று கேட்டு
மொய்ப்பவர்கள் அதிகம்.
இவர்களுக்குக் கடன் கொடுத்துவிட்டு மாசக்
கடைசியில் பார்த்தசாரதி அல்லாட வேண்டியிருக்கும்!
‘‘என்னோட ஏ.டி.எம் கார்டை என் மகனும் மகளும்
மனைவியும் சேர்ந்து பிடுங்கி வச்சிக்கிட்டாங்கப்பா!’’
என்றார் பார்த்தசாரதி. அனைவருக்கும் அதிர்ச்சி!
ஒரு வாரம் சென்றிருக்கும்… ‘‘பார்வதி, செலவுக்குக்
கொஞ்சம் பணம் கொடு!’’ – மனைவியிடம்
கேட்டார் பார்த்தசாரதி.‘‘ஏதுங்க பணம்..?’’
‘‘என்னது! ஒரு வாரத்துக்குள்ள என் சம்பளப் பணத்தை
எல்லாம் செலவு பண்ணிட்டீங்களா?’’ – அதிர்ந்தார்
பார்த்தசாரதி.
‘இல்லங்க… ஏன்தான் வீட்டைக் கைகாட்டினீங்களோ!
இப்ப உங்க நண்பர்கள் எல்லாம் வீட்டுக்கே வந்து எங்க
மூணு பேர்கிட்டயும் கெஞ்சிக் கேட்டு கைமாத்து
வாங்கிட்டுப் போயிடுறாங்க. நீங்களாவது ஒரு அளவோட
நிறுத்திக்குவீங்க. உங்க ரத்தம்… உங்க மகனும் மகளும்
எல்லாருக்கும் இரக்கப்பட்டு ‘கொடுங்கம்மா’னு
சொல்லிடுறாங்க.
அதனால வீட்டுச் செலவுக்குக் கூட இப்ப காசில்லை!’’
பார்த்தசாரதி வாயடைத்து நின்றார்.
–
——————————
– இளங்கோ