இயற்கையோடு இணைந்து சூழலியல்சார் சுற்றுலா செல்வோமா
சூழலியல்சார் சுற்றுலா செல்வோமா?
.....................................................................
நெடியமரம் போல உயர்ந்துபோகும் பொருளாதார நெருக்கடிகள். அவற்றை சமாளிப்பதற்காக ஓடியோடி உழைக்கும் இயந்திரமயமான ஓய்வற்ற வாழ்க்கை. வீட்டை விட்டு வெளியே வீதியில் இறங்கினால் தகிக்கின்ற சூரிய வெப்பம் தரும் வெம்மையும் வியர்வையும் சேர்ந்து உடலையும் மனதையும் இலகுவில் சோர்வடையச் செய்து இளமையை விழுங்கி விரைவிலேயே வைத்தியசாலைக்கு செல்ல வைக்கின்ற நெருக்கடியான சூழ்நிலையிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்.
இவற்றிற்கிடையே எப்போதாவது எடுத்துக்கொள்ளுகின்ற ஓய்வு விடுமுறை மற்றும் வாரவிடுமுறைகளை நாம் ஆரோக்கியமாக கழிக்கின்றோமா என்றால் அதுவுமில்லை. கிடைக்கின்ற ஓய்வு நாட்களில்கூட தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து ஏதேதோ நிகழ்ச்சிகளை பார்த்து நேரத்தை கழித்து, நான்கு சுவர்களிற்குள்ளே விரிகின்ற பிராணவாயுவை (ஒட்சிசனை) சுவாசித்து உயிரோட்டமற்ற இயல்பு வாழ்க்கையைத்தானே நாம் வாழ்கின்றோம்.
இவற்றில் எல்லாம் இருந்து விலகி கிடைக்கின்ற ஓய்வு நாட்களை ஆரோக்கியமாகப்பயன்படுத்துவதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் சுற்றுலா செல்வது. சுற்றுலா செல்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அது நம் எல்லோருக்குமே பிடித்த விடயம். அதிலும் சூழலியல் சார் சுற்றுலா செல்வதைப்பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? அது என்ன சூழலியல் சார் சுற்றுலா?
சூழலியல் சார் சுற்றுலா – அறிமுகம்
...................................................................
வனங்கள், இயற்கை சரணாலயங்கள், மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், புல்வெளிகள், அழகிய பள்ளத்தாக்குகள், கிராமிய பிரதேசங்கள் அடங்கிய இயற்கை வாழ்விடங்கள் போன்ற இயற்கை சார்ந்த சூழலியல் பிரதேசங்களிற்கு பொழுதை கழிப்பதற்காகவும் அப்பிரதேசங்களைப்பற்றி அறிந்து கொள்ளும் நோக்கிலும் செல்வதனை சுற்றுச்சூழலியல் சார் சுற்றுலா எனலாம். மிக இலகுவாகச் சொல்லப்போனால் இயற்கைப்பிரதேசங்களிற்கான ஓர் பயணமே சுற்றுச்சூழலியல் சார் சுற்றுலாவாகும்.
உள் ஊர் மக்களின் நல் வாழ்வை பாதிக்காத வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அப்பிரதேசங்கள் தொடர்பாக அறிந்து கற்றுக்கொள்கின்ற இயற்கைப்பிரதேசங்களிற்கான ஓர் பயணமே சூழலியல்சார் சுற்றுலா எனப்படும் என்று சர்வதேச சுற்றுச்சூழலியல் சுற்றுலா அமைப்பு குறிப்பிடுகின்றது.
சூழலியல்சார் சுற்றுலாவிற்கு தயாராகுதல்
...............................................................................
நாம் எங்கு செல்வதென்றாலும் ஆயத்தம் செய்வது வழமை அவ்வாறே இங்கும் நாம் எப்பிரதேசத்திற்கு செல்லப்போகின்றோமோ அப்பிரதேசம் தொடர்பாக அறிந்து தெரிந்து கொள்ளுதல் அவசியமானது. அத்துடன் பிரதேசத்தின் காலநிலை, பிரதேச மக்கள் மற்றும் இடப்பண்புகள் பற்றியும் ஆலோசித்து அவற்றிற்கு அமைவாக எமது பயணப்பொதிகள், மருந்து வகைகள் போன்றவற்றினையும் தயார் செய்து கொள்ளுதல் நன்மை பயக்கும்.
இவ்வாறான முன் ஆயத்தங்களுடன் சூழலியல் சார் சுற்றுலாப் பிரதேசத்திற்கு செல்கின்ற நாம் அங்கே சில வழிமுறைகளையும் கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகின்றது. அதாவது இப்பயணம் இயற்கைப்பிரதேசங்களிற்கான பயணம். எனவே எமது பயணமானது எவ்வகையிலும் அங்கு காணப்படுகின்ற இயற்கை சூழ்நிலைத்தன்மைகளில் குழப்பத்தை விளைவிப்பதாக அமையக் கூடாது. உதாரணமாக நாம் இயற்கை சரணாலயப் பிரதேசங்களிற்கு செல்வோமாக இருந்தால் அங்கே காணப்படுகின்ற தாவங்களிற்கு சேதம் விளைவித்தல், விலங்குகளை அச்சுறுத்துதல் வேட்டையாடுதல் மற்றும் பொலித்தீன் கழிவுகளை ஆங்காங்கே வீசுதல் போன்றவற்றினை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.அதுமட்டுமன்றி அங்கு வசிக்கின்ற உள் ஊர்ப்பிரதேச மக்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்களினை மதித்து அவர்களோடு இணைந்து போதல் என்பது அவர்களது மனங்களை வெல்லக்கூடிய ஓர் முக்கிய அம்சமாகும்.
இவற்றுடன் நாம் எந்தப் பிரதேசங்களிற்கு செல்லப்போகின்றோம் என்பது தொடர்பான சிறிய அறிமுகத்தினை சிறுவர்களிற்கு ஏற்படுத்திய பின்பு அவர்களை அழைத்துச்சென்றால் அவர்களது எதிர்பார்ப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியாக மாறி அவர்கள் அந்த சூழலை முளுமையாக அனுபவிப்பார்கள். சதா நகரத்தின் இரைச்சலிலும் வெம்மையிலும் வாழ்ந்து பழகிய அவர்களிற்கு இயற்கைப் பிரதேசங்கள் முற்றிலும் மாறுபட்ட அனுபத்தினை வழங்கும்.
பறவைகளின் கீச்சிடும் ஒலியும் வண்டுகளின் ரீங்காரமும் அருவிகளினதும் ஓடைகளினதும் சலசலத்த சங்கீதமும் சருமத்தை தழுவும் இயற்கையின் தென்றலும் கால்புதையும் மணற்பரப்பும் சிறுவர்களுக்கு மட்டுமன்றி பெரியவர்களிற்கும் மனதோடு மகிழ்ச்சி இழைகளைத்தூண்டி மனதில் கிளர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணும் என்பதில் எதுவித ஜயமுமில்லை.
கோட்பாடுகளும் நன்மைகளும்
........................................................
இப்பயணம் சூழலியல் பிரதேசங்கள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் உள் ஊர் சமூகம் சார்ந்த நிலைத்து நிற்கக்கூடிய ஓர் பயணமாக இருப்பதனால் இங்கு சில கோட்பாடுகளையும் அதனூடான பல நன்மைகளையும் காணலாம்.
• பௌதீக சமூக நடத்தை சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த தாக்கங்களை குறைத்தல்
• சூழல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விழிப்புணர்வினையும் பொறுப்புணர்வினையும் கட்டியெழுப்புதல்
• சுற்றுலா செல்பவர்களிற்கும் உள் ஊர் பிரதேச மக்களிற்கும் நல் அனுபவத்தினை வழங்குதல்
• பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துதல்
• சுற்றுச்சூழல் கலாச்சாரம் காலநிலை அரசியல் போன்றவற்றில் புதிய மற்றும் மறக்க முடியாத சிறந்த
அனுபவங்களை வழங்குதல்
• இணைந்து செயற்படுகின்ற கூட்டு முயற்சியை உருவாக்குதல்
போன்ற பண்புகளின் ஊடாக அவை தொடர்பான நன்மைகளை அடையமுடியும்.
பயணத்திற்கான பொறுப்புவாய்ந்த நிறுவனத்தின் (Center for Responsible Travel CREST- 2014) அறிக்கையின் படி 2014ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 1.138 பில்லியன் மக்கள் சூழலியல் சார் சுற்றுலாவினை மேற்கொண்டுள்ளனர். 1950 களில் இருந்ததை விட அதிகமாக 51மில்லியன் மக்கள் சூழலியல் சார் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளனர்.
முடிவு
............
அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் வசிக்கின்ற நாங்கள் நாடு கடந்து நாடு செல்வதற்கு அதிகரித்த பொருளாதார செலவுக்காரணிகள் மட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம். ஆனால் எமது பிரதேசங்களிலேயே எம்மால் கண்டு கொள்ளப்படாத பல சூழலியல் சார் சுற்றுலாப்பிரதேசங்கள் காண்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றினை தேடிக்கண்டு பிடித்து பிரதேச ரீதியாக மாவட்ட ரீதியாக மாகாண ரீதியாக பயணத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி பயணிக்க ஆரம்பிப்போம்.
கூண்டுக்கிளிகளைப்போல் அடைபட்டு வாழாமல் எங்களது சிறுவர்கள் முதியவர்களுக்கு இசைவான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு இச் சுற்றுச்சூழலியல் சார் சுற்றுலா நிச்சயம் கைகொடுக்கும்.
ஓர் வித்தியாசமான அனுபவத்துடன் சிறுவர்களிற்கு இயற்கையின்மீதான அறிமுகத்தினையும் அக்கறையினையும் கற்றுக்கொடுக்கின்ற அதேநேரம் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து ஆரோக்கியத்தினையும் சம்பாதித்துக் கொள்ளலாமே….
சிந்திப்போம்….
நண்பர்களே உங்கள் பிரதேசத்தில் நீங்கள் அடையாளப்படுத்துகின்ற சுற்றுச்சூழலியல் சார்ந்த சுற்றுலாப்பிரதேசங்களை கருத்து பகுதியில் பட்டியலிட்டு எல்லோரிற்கும் அறிமுகப் படுத்தலாமே….
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
