உழைப்பே உயர்வு-பாரதிதாசனுக்கு பாமரனின் வாழ்த்து

தமிழன்னை ஈன்றெடுத்த
தனித்தமிழே...!
தரணியெல்லாம் தமிழமுதை
தந்துசென்ற மலைத்தேனே..!

பா உழைப்பில் உயர்ந்தவரே,,!
அந்த உயரத்துக்கே
உயர்வு தந்த
பார் போற்றும் பாவலனே..!

மலைத்தேன்
உன் பாடல்களில்...
மயங்கினேன்
உன் மென்தமிழில்....

உழவு முதற்கொண்டு
உயர்தொழில் அத்தனையும்
உன் பாடல்களில்....

மயில், குயில் பறவைகள்
காட்டுக்கோழி, வீட்டுக்கோழி
எனத்தொடங்கி
மாட்டையும் கன்றையும்
பாட்டில் படைத்து
காளையையும்
மாட்டு வண்டியையும்
எங்கள் இதயப் பாதையில்
இன்றும் ஓட்டிவரும்
இறப்பிலா இசையமுது நீயே...

கவிபடைத்து
இருள் நீக்கிய
உன் உழைப்பை உயர்வென்பேன்
அந்த உழைப்பே
என் உயிர் என்பேன்..

அறியாமையெனும்
இருண்ட வீட்டில்
குடும்ப விளக்கை
ஏற்றி வைத்தாய்.....
எதிர்பாரா முத்தத்தை
உலகோர்க்கு நீ தந்தாய்.

ஆறு, கடல், காடு, தென்றலுடன்
சிற்றூர், பட்டணமென
அழகின் சிரிப்பு தந்தாய்
அதற்கெல்லாம் ஒவ்வொன்றாய்
சிறப்பும் செய்தாய்.

நெயதல் கடலலையும்
நாடி வந்து பார்த்திருக்கும்
குறிஞ்சித்திட்டு தந்தாய்
பாண்டியன் பரிசும் தந்தாய்

பாடுவதும் தொழில் என்றாய்
தொழில் அதுவும் உழைப்பென்றாய்
உழைப்பில் நீ உயர்ந்து நின்றாய்
அந்த உழைப்பில் உயர்வானாய்
அதில்
எங்கள் நேசனானாய்..

பாரதிக்கு தாசன் ஆனாய்.
ஏரோட்டும் எங்களுக்கும்
ஆசான் ஆனாய்...

சாதி பேதமில்லாத
சம உலகை பாட்டில் தந்தாய்
பெண்ணடிமை போக்கிடவே
பெரும்முயற்சி நீ செய்தாய்
உன் உழைப்பெல்லாம் உயர்வாகி
உன்னதம் பல
சொல்லி நிற்கிறது..

செங்கான் குடும்பம் நானாகி
கூனல் அவரைப்பிஞ்சு பொறித்து
சுரைக்காய் கூட்டோடு
கருணைக்கிழங்கும்
நான் உமக்குத் தருவேன்
வரவேண்டும் மீண்டும் இங்கே.

தமிழ்மறுக்கும்
மாளிகை வீதிகளில் நீ நடந்து
சுழற்றிடவேண்டும் சாட்டைதனை.

உழைப்பை உயர்வென்றாய்
தமிழ் வளர்த்த உன் உழைப்பும்
கவிபடைத்த உன் உழைப்பும்
என்றுமென்றும் உயர்ந்திருக்கும்.

பாரதிதாசனே,
பாடுபொருள் கவியழகே
வாழ்க நின் புகழ்....
வாழ்க நம் தமிழ் புகழ்...!
என்றும் நிலைத்திருக்கும்
உங்கள் உழைப்பு தந்த கவிதை புகழ்..!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (29-Apr-16, 9:35 am)
பார்வை : 659

மேலே