மே தின வாழ்த்து

தந்தன தந்தன தான - தந்த
தந்தன தந்தன தந்தன தானா

என்ற வண்ண மெட்டில் "ஆனந்தக் களிப்பு"

ஊரிலி ழைப்பவ ரின்றி - நாமும்
...உண்டுமு டுத்தியும் வாழ்ந்திரு போமோ
பாரில வர்செய லன்றி - இங்கு
...பாங்குடை தேசகங்கள் கண்டிட லாமோ ?
தாரிலு ருக்கிய சாலை - எங்கு
...தாமிருந் தாற்றுவர் யாங்கனும் வேலை
நேரில வர்தமைக் கண்டால் - கையை
...நேரேநி றுத்திவ ணங்குதல் வேண்டும் !

சாக்கடை அள்ளிடும் தோழர் - அந்த
...சாகரம் போல்தொழில் நல்குகின் றாரே
ஆக்களை மெய்த்திடு வோரும் - அன்னை
...அன்புடன் பூமிக்குப் பால்தரு கின்றார் !
காக்கும்நற் காவலர் இல்லை - என்றால்
...கண்மூடி நித்திரை கொளலெளி தாமோ ?
வாக்குள வர்தமை வைத்து - என்றும்
...வாழ்த்திட நாமுமே வாழ்ந்திட லாமே

சேற்றினில் கால்வைத்தி ருப்பார் - தாமும்
...செய்திடும் வேளாண்மை யில்லையேல் இங்கு
சோற்றிலே கைவைக்க லாமோ ? - அந்தச்
...சோதர ரில்லையேல் உண்டிடப் போமோ ?
ஆற்றுக்க ரைகளிற் சலவை - செய்யும்
...ஆட்களு மில்லையேல் ஆடைக ளுண்டோ ?
போற்றுவோம் அன்னவர் தம்மை - செய்யின்
...பொன்னுல கின்புற செய்யுவார் நாளும் !

கையிற்பி டித்திடும் கத்தி - சமையல்
...கலையினி லுதவிடும் பாத்திரம் செய்ய
மெய்யினில் தீயிற்கி டப்பார் - அந்த
...மேலானோ ரில்லையேல் ஆயுத முண்டோ
வெய்யில்த ணிந்திட சாறு - தந்து
...வெம்மைத ணிப்பவர் வேந்தர்க ளன்றோ
தையல்தொ ழில்செயும் ஆட்கள் - இன்றி
...தைரிய மாயுடை அணிந்திட லாமோ ?

வண்ணத்தில் வீடுகள் செய்வார் - அழகு
...வாயில மைந்திட மரத்தையி ழைப்பார்
மண்ணில வர்செய லின்றி - வாழ்வை
...மறைத்துநாற் சுவற்றினுள் நடத்திட லாமோ ?
உண்மை!உ ழைப்பவ ரெல்லாம் - தெய்வம்
...உலகத்தி றங்கியே பணிசெயு தென்பேன் !
எண்ணத்த வர்தமை வைத்தால் - வையம்
...ஏற்றத்தைக் கண்டிடும் என்றுமே வாழும் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (30-Apr-16, 8:23 pm)
பார்வை : 452

மேலே