மார்கழித் திங்கள் -சுஜய் ரகு
வெண்ணிலவில் நீ
உன் முகம் புதைத்திருந்தாய்
இலைமுக உன் நினைவுகள்
உதிரும் காற்றில்
நெருப்பொத்த என்
கனா தெளித்திருந்தேன் நான்
நம்மிடையே அலைபுரளும்
அன்பின் நதிச் சொல்லில்
ஒருநாளில் நீயும்
பின்னொருநாளில் நானும்
கரையேறிப் பிணங்குகிறோம்
உயிர்நாடி துடிக்கும்
நரம்பின் விதானத்தில்
திவ்யம் துளிர்த்த
உன் பெயரை ஒளிரவிட்டு
ரசிக்கிறது
என் தீராக் காதல்
தென்னையின்
காய்ந்த கிளையாய்
பெரும் சப்தமிட்டு
விழுந்து புழுதி பரப்பும்
நம் பிரிவின்
ரணமிக்க கணங்களில்
ஈரத்தில் மிதக்கின்றன
விழிகள்
முன்பனிப் பொழுதின்
இலைகள்
பனித்துளியைக் காற்றில்
சிதறவிட்டு விளையாடும்
நாளின் வரவிற்கு
இந்தக் கோடை தவமிருக்குமோ
என்னவோ
நம் காதல் காத்திருக்கும்
ஏனெனில் மார்கழித் திங்கள்
உன் இதழ் மலர்த்திய
முதல் முத்தத்தின் பிறந்தநாள்