சிந்திப்போன காதல் -சுஜய் ரகு

மரத்தை உரசியபடி
சற்று ஒளிந்து கொண்டு அவளும்
பைக்கோடு நெருங்கும்
அவனும்.......
தேர்தல் களேபரம்
வாகனக் கூச்சல்கள்
கொளுத்தும் வெயில்
என எதையும்
பொருட்படுத்தாது
காதலில்
நிறைகிறார்கள்

எங்கோ ஒரு
காதலில்
அரிவாள்கள் தெறிக்க
இங்கொரு காதல்
பூத்துக் கொண்டிருக்கிறது

எங்கோ ஒரு
காதல் தண்டவாளத்தில்
சிதற
இங்கொரு காதல்
சிறகு முளைத்து
எழுகிறது

எங்கோ ஒரு
காதல்
அமிலத்தில் துடிக்க
இங்கொரு காதல்
மழையென
மிதக்கிறது

கடத்திய
மணித்துளிகளின்
குளிர் கணங்களைக்
கண்களில்
தேக்கியவாறு
விடைபெறுகிறார்கள்
பின்
அவனும் அவளும்

அவர்கள்
சிந்திப்போன காதல்
கிளை தழுவி
பூ முகர்ந்து
வேர் சிலிர்க்க
காற்றென அங்கேயே
சுழன்று
கொண்டிருக்கிறது...!!

எழுதியவர் : சுஜய் ரகு (4-May-16, 2:06 pm)
பார்வை : 214

மேலே