எனக்கு வேண்டுமாகி போனாய்
கற்பனை மறந்து காதலும் மறந்து
கழிசலாய் கழித்திருந்தேன்
சுகத்தை மறந்து சோகத்தில் உறைந்து
சூன்யமாய் சூழ்ந்திருந்தேன்.
என் முகம் பார்த்து வாவென்று சிமிட்டி
வசந்தமாய் மாற்றினாயே
என் விழி பார்த்து புன்சிரியொன்று சிரித்து
பூங்கொத்தாய் புனர்பித்தாயே
பல பிறப்பாய் விட்டு போன சொந்தமே
பத்து வருட தவம் நீ
பந்தபாசமற்று அனாதையாய் போன என்னை
தத்தெடுத்த சேய் நீ
உதட்டில் புதையுண்டிருந்த புன்னகையை
புதுபித்த புதையல் நீ
மனதில் மறைந்திருந்த மகிழ்ச்சியை
மீட்டெடுத்த மணிப்புறா நீ.
வாளாயிருந்த வண்ணக் கனவுகளை
வசப்படுத்திய விக்ரகம் நீ
குழம்பிப்போய் சேறாயிருந்த சிந்தையை
சரிப்படுத்திய படிகாரம் நீ
நொந்து நோன்பு நூறு நூற்றாலும்
கிடைத்தற்கரிய வரம் நீ
யாருக்கோ வேண்டாமாய் போன நீ
எனக்கு வேண்டுமாகி போனாய்.