10 செகண்ட் கதைகள் - அறிவிருக்கா
"யோவ் ..உனக்கு அறிவிருக்கா..? " இப்படி இயக்குனர் இளங்கோவன் ஆத்திரத்தில் கேட்டதும் , என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்
ஆடித்தான் போனான் ஆதிகேசவன்.
சற்று நிதானித்து சிறு புன்னகையால் பம்மி வைத்தான்.
ஆனால் , பணமும் புகழும் கொடுத்த திமிறில் வளர்ந்திருந்த இளங்கோவனுக்கு அந்த பரிதாப புன்னகை எந்த அனுதாபத்தையும் உண்டாக்க வில்லை .
மீண்டும் கேட்டான்
"உனக்கு அறிவிருக்கா சொல்லு.."
கூட்டத்தில் எல்லோரும் அவனை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஆதிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை .
இளங்கோவன் வீம்பு பிடித்தவன்.
"இருக்கு ஸார்.." என்றால்
"உனக்கு அறிவிருக்குன்னு எந்த அறிவை வச்சு சொல்றே..?" என்று கேட்பான்.
தன்மானத்தை விட்டு " இல்லை ஸார் " என்றால்
"அப்புறம் எந்த தகுதியை வச்சு இந்த வேலைக்கு வந்தே..?" என்பான்.
ஆதிக்கு இது இக்கட்டான நிலை.
இம்மாதிரியான சோதனை நேரங்களில் மனைவி மல்லிகாவை மனதில் நினைத்துக்கொள்வான்.
எல்லா விசியத்திலும் ஆதிக்கு உறுதுணையாக இருப்பவள் அவளே.
இதோ இளங்கோவன் திரும்பவும் கேட்டான்.
இந்த முறை ஆதி சற்றும் யோசிக்க வில்லை . பட்டென்று பதில் சொன்னான்.
"ஸாரி ஸார் ..இது பர்சனல் விசியம்..
சில விசியங்களை மனைவியை கலந்து ஆலோசித்து தான் சொல்ல முடியும் .." என்கவும் ,கூட்டத்தில் கடுமையான சிரிப்பொலி.
இது இளங்கோவனுக்கு எரிச்சலை உண்டாக்க,
"முட்டாள் " என்று கத்தினான்.
ஆதி தன் தொப்பியை கழற்றி மேஜையில் வைத்தான்.
அது அந்த கம்பெனிக்கு சொந்தமானது.
" சுதந்திரமா சிந்திக்க கூட விடாத இடத்தில் வேலை பார்க்க கூடாது ன்னு என் வைப் சொல்லுவா ஸார் ..நான் முட்டாள் தான் .." என்றவாறே
வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
அந்த இடம் நிசப்தமானது.
வீட்டுக்கு போனவுடன் இந்த சம்பவத்தை மல்லிகாவிடம் சொன்னான் ஆதி.
அவள் வயிற்றுப் பிள்ளைக்காரியாக இருந்தாள்.
விசியத்தை கேட்டதும் அவள் முகம் சற்று மாறியது .
ஆதிகேசவன் அவள் முகத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.
"இன்னொரு வேலைய ரெடி பண்ணிகிட்டு அப்புறமில்லே நீ இந்த வேலைய உதறியிருக்கணும்..
யோவ்..உனக்கு அறிவிருக்கா..? என்றாள் அவள்.