இன்ஸ்பெகடர் லிங்டோ

தீவிரவாதிகளின் செயல்பாடுகள் அதிகமாக இருந்த காரணத்தினால் தான் இன்ஸ்பெக்டர் லிங்டோவை அந்தப் பகுதிக்கு மாற்றல் செய்து இருந்தார்கள். அவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட உடன், தனது அதிகாரத்தின் கீழ் சிறப்பு கமாண்டோ படை ஒன்றை உருவாக்கி,இரவு பகல் என்று பாராமல் அலைந்து தீவிரவாதிகளின் அட்டகாசத்தை அடக்கி விட்டார். கடந்த ஒரு வருட காலமாக தீவிரவாதிகளின் துன்புறுத்தல்கள் ஏதுமின்றி அந்தப் பகுதி மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அவருடைய திறமையை, தைரியத்தைப் பாராட்டி, மாநில முதல் அமைச்சர் சிறப்பு விருதும் கொடுத்து விட்டார். அப்படிப் பட்ட லிங்டோவின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் ,திடீரென ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் மூன்று கொலைகள். அதுவும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தீவிரவாதிகளின் கைவரிசையா ? இல்லை திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலையா ? மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்டர் லிங்டோ. அவருக்கு எந்தவொரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. எlது தொடக்கம் என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தார். நடந்த சம்பவத்தை மீண்டும் தனது மனத்திரையில் ஓட விட்டார்.
அந்த மலைப் பகுதியில் , சுமாரான வசதிகள் கொண்ட நகரம் அது . அங்கிருந்து புறப்பட்ட அந்த வாடகைக் கார், அந்த மலைப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சாலையின் இருபக்கமும் ஆங்காங்கே ஒன்றிரண்டு குடிசை வீடுகள் தென்பட்டன. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. ஒன்றிரண்டு பேர் ஆடு மாடுகளை ஆங்காங்கே மேய்ந்துக்கொண்டு இருந்தனர் . சாலையின் இரண்டு பக்கமும் இருண்ட காட்டுப் பகுதி வரவே, சடாரென வண்டியை நிறுத்தினார் ஓட்டுநர்.
‘இதற்கு மேல் வண்டி போகாது, இறங்கி நடந்து செல்லுங்கள் ‘ என்று கூறினார் ஓட்டுநர்.
வாடகை வண்டியில் இருந்த அந்த வயதான மலைக் கிராமத்துப் பெண் ‘ ஏம்ப்பா கிராமம் வரைக்கும் போகணுமுன்னுதானே பேச்சு. இப்போ இறங்கிப் போங்கன்னா என்னப்ப நியாயம். பொம்மளைங்க இருக்கோம். இந்தக் காட்டுப்பகுதியில் எப்படிப்பா நடந்து போறது.’ என்றாள்.
‘சாரிம்மா...இந்தப்பகுதியிலே தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமா இருக்குதுன்னு சொல்வாங்க ... அதனால. ரிஸ்க் எடுக்க விரும்பல .....’ என்றார் ஓட்டுநர்.
‘இங்க பாருப்பா உனக்கு பணம் எவ்வளவு வேணுமின்னாலும் தர்றேன் . வண்டியை நிறுத்தாம வேகமா ஓட்டு’.என்றாள்
‘ஆமா ! நாங்க முழுசா இரண்டு ஆம்பளைங்க இருக்கோம். அப்புறம் உங்களுக்கு என்ன பயம். சும்மா ஓட்டுங்க.... ‘ என்றான் .அந்த வண்டியில் இருந்த அந்த வாலிபன். அவனும் அவனது நண்பனும் மலைச்சாதி இனத்தவர் அல்ல. இவர்களைத் தவிர ஒரு மலைச்சாதி இளம் பெண்ணும் இருந்தாள்.
‘என்ன டிரைவர் இவ்வளவு தூரம் என் வீட்டுக்காரர் சொல்லியும் இன்னும் யோசிக்கிறீங்க ..’ என்றாள் தன் பங்குக்கு அந்த இளம் பெண்ணும்.
‘ சரி! சரி ! இவ்வளவு தூரம் எல்லோரும் சொல்றீங்கன்னு வண்டியை எடுக்கிறேன். ‘ என்று கூறிய ஓட்டுநர் ஒருவித அலுப்போடு வண்டியை ஓட்டத் தொடங்கினார்.
இன்னும் அரைமணி நேரத்தில் நம்ம கிராமத்துக்குப் போயிடலாம் என்று பேசிக்கொண்டிருந்த அந்த வயதான மூதாட்டியின் குரல் ஓட்டுநர் காதில் விழவே, அவருக்கு ஏதோ இதயத்தில் ஏறி இருந்த பயம் என்னும் பாரம் இறங்கியது போல் இருந்தது.
அவள் அப்படிச் சொல்லி ஒரு பத்து நிமிடம் தான் ஆகியிருக்கும். எதிர் திசையில் ஒரு லாரி வேகமாக வந்துகொண்டிருந்தது ஓட்டுநர் கண்களில் பட்டது. எங்கே நேரே வந்து இடித்து விடப்போகிறானோ என்று பயந்து போன ஓட்டுநர், தனது வண்டியை சற்று திருப்பி சாலையில் ஓரமாக கொண்டு போனார். ஆனால் லாரி ஓட்டுநர் ஒதுக்கிவிட்ட வழியில் செல்லாமல், லாரியை நேரே காரைப் பார்த்து ஓட்டி வரவே, அரண்டு போன கார் ஓட்டுநர் சட்டென பிரேக் அடித்து நிறுத்தினார். லாரியும் காரினை இடித்து விடுவது போல் முன்னால் வந்து நின்றது. லாரியிலிருந்து முகமூடி அணிந்த நான்கு வாட்டசாட்டமான ஆசாமிகள் இறங்கி வந்து காரினைச் சூழ்ந்து கொண்டார்கள். கார் ஓட்டுநர் வயிற்றில் மெதுவாகப் புளியைக் கரைத்தது. பணத்துக்கு ஆசைப்பட்டு வம்பிலே மாட்டிக்கிட்டோமே என்று உணர்ந்தபோது தன்னைத்தானே நொந்துகொண்டான்.
நான்கு பேர்களில் ,இரண்டு பேர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள். இரண்டு பேர் காரின் முன்னால் நின்று கொள்ள, துப்பாக்கி ஏந்திய இருவரும் காரின் இரு பக்கமும் வந்து நின்று கொண்டார்கள்.வயதான பெண்மணி இருந்த பக்கம் வந்த துப்பாக்கி வைத்திருந்தவன்,
‘ஏய் கிழவி.. மரியாதையா இருக்கிறதை எடுத்துக் கொடுத்திடு..’ என்றான்.
‘இருந்தா தானே கொடுக்கிறதுக்கு..’ என்று கிண்டலாகச் சொன்னாள் அந்த வயதான மூதாட்டி.
‘என்ன கிழவி கிண்டலா? ‘ என்றவன் காரின் கதவைத்திறந்து, கிழவியின் கையைப் பிடித்து வெளியில் இழுத்துத்தான்..பயந்துபோன கிழவி வேறு வழி தெரியாமல், அவனது கையினைப் பிடித்து தன்னால் முடிந்த மட்டும் பற்களால் கடித்தாள். கோபம் கொண்ட அவன், ஓங்கி ஒரு அறை அவளது கன்னத்தில் வைக்கவே ‘ஐயோ’ என்ற அலறலுடன் காருக்கு வெளியில் விழுந்தாள். வாயில் இருந்து இரத்த ஊற்று பொங்கியது.
‘அடா பாவி. .சண்டாளா ..அநியாயமா என் அம்மாவைக் கொன்னுட்டிட்டியே... நீ நல்லா இருப்பியா ? ‘ என்று ஆவேசத்தில் கத்திய அந்த மலைச்சாதி இளம்பெண்ணை, கையைப்பிடித்து வெளியில் இழுத்துப்போட முயலவே, காரில் இருந்த அவளது கணவன் அவனது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தான்.முகமூடியின் கோபம் அதிகமாகவே, வேகமாக காரிலிருந்து அந்தப் பெண்ணை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் கணவனின் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்தான். வெளியில் வந்து விழுந்தவன், அந்த முகமூடி தன்னை தயார் படுத்திக் கொள்ளு முன் விருட்டென எழுந்து ,தனது மனைவின் கையினைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான்.
காரின் முன்னால் நின்றவர்கள் ‘ ஏய் ஓடுறாங்க பாரு... சுட்டுத்தள்ளு.. சீக்கிரம் ‘ என்று கத்தவே, துப்பாக்கியைத் தூக்கி, ஓடுபவர்களை நோக்கிக் குறி பார்த்து சுட்டான். ஓடிக்கொண்டிருந்த, இளம் பெண், முதுகில் பாய்ந்த துப்பாக்கி ரவையால் துடித்து வீழுந்தாள். முதுகில் இருந்து இரத்தம் பெருகி , தரையில் கோலம் போடத் தொடங்கியது. என்னவென்று புரியாமல் திரும்பிப் பார்த்த, அவளது கணவன் மார்பில் அடுத்த ரவை நுழையவே, அப்படியே அவள் மேல் அவனும் விழுந்தான்.இரண்டு உடல்களில் இருந்து பெருகி ஓடிய இரத்தமும் அங்கே ஒரு சிறு கால்வாய் போல் ஓடத்தொடங்கின. இந்த கலவரத்தில், சற்று கவனிக்காமல் விடப்பட்ட, அவனது நண்பன் மறுபக்கக் கதவைத் திறந்து கொண்டு ஓடத் தொடங்கவே, சுதாரித்துக் கொண்ட துப்பாக்கி வைத்திருந்த இன்னொருவன், அவனது முதுகில் சுடவே அவனும் அங்கேயே விழுந்தான்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கார் டிரைவருக்கு பாதி உயிர் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த குண்டு எப்போது தன்மீது பாயுமோ என்று நடுங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் பக்கம் திரும்பிய ஒரு முகமூடிக்காரன் ,
‘ ஏய் எல்லாத்தையும் அள்ளி காரில் போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போ ‘ என்று விரட்டவே, பயந்து போன ஓட்டுநர் , ஒவ்வொருவரையும் இழுத்துக் காரில் நிரப்பினான்.அந்த இளம் பெண்ணும், அவள் கணவனும் அங்கேயே பிணமாகி விட்டார்கள் என்பது ஓட்டுநருக்கு அவர்களைத் தொடும் போதே தெரிந்து விட்டது. அவனது நண்பனுக்கு மட்டும் சற்று உயிர் இருப்பது போல் தெரிந்தது. அவனும் ஆஸ்பத்திரியில் மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு இறந்து விட்டான்.வயதான பெண்மட்டும் தன் மகளையும், மருமகனையும் பலிகொடுத்த துக்கத்தில் புலம்பிக் கொண்டு இருந்தாள்.
ஓட்டுநர் சொல்லி இருந்த நிகழ்ச்சிகளை அசை போட்ட இன்ஸ்பெக்டர் லிங்டோவின் மூளையில் , திடீரென ஒரு மின்னல் வெட்டியது. ‘ஏன் அப்படியும் இருக்கக் கூடாது ? ‘ என்ற ஒரு வினாவுடன், தலையில் தொப்பியை மாட்டிக்கொண்டு, தனது புல்லட்டில் ஏறி ஒரு உதை விட்டார். அது உறுமிக் கொண்டு கிளம்பியது.
“ஏப்பா டிரைவர் சம்பவம் நடந்த அன்று யாரு வந்து உன்னைக் கூப்பிட்டதுன்னு சொன்னே?’
‘அதாங்க ..அந்த வயசாக அம்மா தான் ‘
‘என்ன சொல்லி உன்னைக் கூப்பிட்டாங்கன்னு சொன்னே ?’
‘அவசரமாக ஜோவாய் டவுணுகுப் போகணுமுன்னு வர்றீயான்னாங்க ‘
‘உடனே நீயும் கிளம்பிட்டே....’
‘இல்லை சார் . உண்மையைச் சொல்லணுமுன்னா.... டவுணா இல்லை பக்கத்துக் கிராமத்துக்கான்னு கேட்டேனுங்க.... அவங்களும் பக்கத்துக் கிராமம் தான், எவ்வளவு பணமுன்னாலும் தர்றோமுன்னு சொன்னாங்க... பணத்தாசை யாரை விட்டது. நானும் கிளம்பிட்டேன். ஆனா டவுணைத் தாண்டிய பிறகுதான் தெரிந்தது அது இந்தக் கிராமமுன்னு..உடனே நான் வரமாட்டேன்னு சொன்னேனுங்க...எல்லோரும் கட்டாயப்படுத்தி பணம் நிறையத்தர்றோமுன்னு ஆசை காட்டினாங்க..நானும் வேறே வழியில்லாம ஒத்துக்கிட்டு , தொடர்ந்து சென்ற போதுதாங்க இந்தச் சம்பவம் நடந்தது....’
‘எதிர்தாப்பில லாரி ஒண்ணு வந்து நின்னுதுன்னு சொன்னியே ..வண்டி நம்பர் ஞாபகம் இருக்கா?’
‘பயத்துல வண்டி நம்பரைப் பார்க்கலைங்க...’
‘முகமூடி போட்டிருந்தவங்களைப் பற்றி ஏதாவது அங்க அடையாளங்களைக் கூற முடியுமா?’
‘பயத்துல எதையும் சரியா கவனிக்க முடியலைங்க...’
எதுவும் புரியாத புதிருடன் புல்லட்டில் கிளம்பினார் இன்ஸ்பெக்டர் லிங்டோ.

‘ஏம்மா.. உங்க பக்கத்து வீட்டுல குடியிருந்த டிரைவர் பையனைத் தெரியுமா ?’
‘நல்லா தெரியுமுங்க.. நல்ல பையன் . தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பான். ஆனா அப்பப்போ தண்ணி போடுவான் ‘
‘அவன் மனைவி...’
‘அது கொஞ்சம் ஒரு மாதிரியான டைப்புங்க...’
‘புரியலையே.....’
‘அது அது வந்துங்க.. அந்தப் பொண்ணு அவ்வளவு சுத்தம் இல்லைங்க..அதுவுமில்லாம அது கடத்தல் பொருட்களைக் கொண்டுவந்து விற்குமுங்க...’
‘சம்பவம் நடந்த அன்று,,இங்கே இருந்து எங்கே, எதுக்குப் போறோமுன்னு ஏதாவது சொன்னாங்களா?’
‘குறிப்பாக எதுவும் சொல்லைங்க.. ஆனா அந்தப் பொண்ணோட அம்மா வந்து அப்பாவுக்கு உடம்புக்கு முடியலைன்னு கூட்டிட்டுப் போறதா கேள்விப் பட்டோமுங்க...’
இன்ஸ்பெக்டர் லிங்டோவின் மூளையில் ஏதோ பிராண்டுவது போல் இருந்தது.
‘மலைச்சாதிப் பெண்ணை இந்தப் பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டதுல ஏதாவது தகறாது இருந்ததா?’
‘அதுக்கு அந்தப் பெண்ணோட கிராமத்தில பயங்கரமான எதிர்ப்பு இருந்ததாக அந்தப் பெண்ணே ஒரு தடவை சொல்லிக்கிட்டு இருந்துதுங்க..இந்தப் பெண்ணாலே அவளோட அம்மாவையும், அப்பாவையும் சாதியிலே இருந்து ஒதுக்கி வைச்சுட்டதாகவும் சொல்லிச்சுங்க ‘
இன்ஸ்பெக்டர் மூளையில் ஏதோ ஒரு இழை கிடைத்தது போல் தெரிந்தது.
‘ஐயா எங்களை கேஸ் அது இதுன்னு போலீஸ் ஸ்டேஷன் இழுத்திடாதிங்க ஐயா. அந்தக் கிராமத்து ஜனங்க ரொம்ப மோசமானவங்க.. ‘
‘ரொம்ப நன்றிம்மா. நிச்சியமா உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது ‘ என்ற இன்ஸ்பெக்டர் தனது புல்லட்டில் பறந்தார்.
நீண்ட நாட்களாகத் தூங்கிக் கிடந்த தனது கமாண்டோ படைகளோடு ஜீப்பில் சென்று அந்தக் கிராமத்தில் இறங்கினார் இன்ஸ்பெக்டர் லிங்டோ. கமாண்டோ படையினைக் கண்டதும், அந்த கிராமத்து ஜனங்கள் தங்கள் , தங்கள் குடிசைக்குள் பதுங்கிக் கொண்டார்கள். ஜீப்பின் அருகில் இருந்த ஒரு குடிசைக்குள் , பதுங்கிக் கிடந்தவனை, வெளியே இழுத்து வந்த இன்ஸ்பெக்டர், ‘பளார்’ என்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டார். ஏற்கெனவே வெளிறிக் கிடந்த அவன் முகத்தில் மரணக் களைத் தோன்றத் தொடங்கியது.
‘மரியாதையாச் சொல்லு மாஜா குடிசை எது?’
‘சத்தியமா தெரியாதுங்க..’
இன்ஸ்பெக்டர் சட்டென தனது கைத்துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்தார்.
‘சார் ! சுட்டுடாதிங்க ...அதோ அதுதான் மாஜாவோட குடிசை ‘ என்றான்.
இன்ஸ்பெக்டர் அவனை விட்டுவிட்டு, கதவை உடைக்காத குறையாக உள்ளே புகுந்தார். கூடவே கமாண்டோக்கள்.
‘டேய் மாஜா ! மரியாதையா உண்மையைச் சொல்லிடு இல்லை உன்னையும் உன் மகளை நீ எங்கே அனுப்பினியோ அங்கேயே அனுப்பிடுவேன்’
‘என்னங்க எதைங்க சொல்லச் சொல்றீங்க.. என் மகளையும் மருமகனையும் இழந்துட்டு உயிரோட இருக்கிறேனே அதைச் சொல்லச் சொல்றீங்களா?’
‘ராஸ்கல் ‘ என்றவர், தனது பூட்ஸ் காலால் எட்டி ஒரு உதை விட்டார். புட்பால் மாதிரி பறந்து குடிசையின் ஒரு மூலையில் போய் விழுந்தான். அதற்குள் கமாண்டோக்கள் குடிசையின் இன்னொரு மூலையில் ஒண்டிக் கொண்டு இருந்த அவனது மனைவியை இழுத்து வந்தார்கள். இன்ஸ்பெக்டர் கோபத்துடன் தனது துப்பாக்கியை எடுத்து மாஜாவின் நெஞ்சுக்கு நேராக நீட்டவே,
‘ஐயா ! சுட்டுதாதிங்க உண்மையைச் சொல்லிடுறேன் ‘ என்று கையை எடுத்துக் கும்பிட்டான்.
‘எம் பொண்ணு மலைச் சாதி பையனைத் தவிர, வேறு சாதி பையனைக் கல்யாணம் கட்டிக்கிட்டது எங்க ஜாதி ஜனங்களுக்குப் பிடிக்கலைங்க.. அதாங்க.. தந்திரமா கூட்டிக்கிட்டு வந்து சுட்டுக் கொன்னுட்டோமுங்க...’
அதன் பிறகு யார், யார் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவங்க என்று சொல்லச் சொல்ல,கமாண்டோக்கள் வேகமாக செயல்பட்டார்கள்.
அன்றைய மாலைச் செய்தி தாளில் இன்ஸ்பெக்டர் லிங்டோவை பாராட்டி பக்கம் பக்கமாக செய்திகள் வந்திருந்தன.இவை எதனையும் கண்டுகொள்ளாத இன்ஸ்பெக்டர் லிங்டோ தனது புல்லட்டில் எங்கோ பறந்து கொண்டிருந்தார்.
********************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (4-May-16, 10:25 pm)
பார்வை : 191

மேலே