வானமே எல்லை

வானமே எல்லை
பாவலர் கருமலைத்தமிழாழன்

ஊனமாகப் பிறந்தபோதும் வெறுப்பே யின்றி
ஊறுமன்பில் உயிராக வளர்ப்ப வள்தாய்
ஈனமாகப் பெற்றபிள்ளை நடந்த போதும்
இறுகணைத்துத் திருத்துதற்கு முயல்ப வள்தாய்
தேனமுதே கிடைத்தபோதும் பிள்ளைக் கீந்தே
தெருள்பசியை இன்பமாக ஏற்ப வள்தாய்
வானத்தின் எல்லைக்கும் மேலாம் அந்த
வற்றாத தாய்கொட்டும் அன்பின் எல்லை !

பக்கத்தே துன்பத்தில் துடிப்ப வர்க்கும்
பசியென்று கையேந்தி நிற்ப வர்க்கும்
தக்கபடி துணிநழுவும் இடுப்பைக் காக்கத்
தாவிவந்து உதவுகின்ற கைகள் போலத்
துக்கத்தைப் பசிதன்னைப் போக்கு தற்கே
துடித்துவரும் நெஞ்சத்து இரக்க எல்லை
மிக்குயர்ந்த வானத்தெல் லைக்கும் மேலாம்
மிகுமந்த மனிதம்தாம் வாழ்க்கை யாகும் !

பொன்னாலே வரும்புகழிற் கெல்லை உண்டு
பொருளாலே வரும்புகழிற் கெல்லை உண்டு
பொன்பொருள்தான் தீர்ந்ததென்றால் வாழ்க்கை தன்னில்
பொலிந்திருந்த புகழந்தோ மறைந்து போகும்
பொன்பொருள்கள் போலன்றி ஈய ஈயப்
பொழிமழையாய் நீரூற்றாய் பெருகும் கல்வி
தன்புகழோ வானத்தெல் லைக்கும் மேலாம்
தகுகல்வி யால்உலகை உய்விப் போம்வா !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (5-May-16, 12:44 pm)
பார்வை : 119

மேலே