புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்
-- ரா.கார்த்திக் தமிழ் பேராசிரியர் ஈரோடு .

தோழா
கூப்பிடும் தூரத்தில் தான்
வாழ்க்கை
ஏன் வர மறுக்கிறாய்...?

இது உன்னுடைய வாழ்க்கை
மட்டும் அல்ல தான்..
ஆனால் உன்னுடையதும் தான்..

கால வெள்ளத்தில் நீ
சுயநலமாய்
தொலைந்து போவது என்ன..?

நீ பிறந்த மண்ணில்
செங்குருதியைப்
பாய்ச்சியவர்கள் யாவர் ?

உன்தாய் மண்ணில்
அறுவடை செய்யப்பட்டவை
யாருடைய உயிர்கள்?
தோழா
நாம் தோற்கவில்லை
ஏன் எனில்
போருக்கு நாம் இன்னும்
புறப்படவே இல்லை.

வாயிற்படியில்
வாக்குவாதம் என்றால்
வாசற்கதவை சார்த்துவதை
நிறுத்து..!
முதலாளித்துவத்தின்
ஆதிக்க கால்கள்
பாலத்தீனத்தில்
என்றாலும்
அதை எதிர்..

வலிமையே வல்லமை என்று
உலகின் எந்த பகுதியிலும்
மானுட உரிமைகள்
மறுக்கப் பட்டாலும்
போர்க்கொடி உயர்த்தி
உடனே உன் போராட்டத்தை நடத்து.

இவ்வுலக பரப்பில்
உரிமைகள் பெற்றவர்கள்
மனிதர்கள் மட்டும் அல்லர்..
அக்றிணை உயிர்களும் தான்.

அதனால் தோழா
விடுதலை வாழ்க்கையை
மானிட இனத்திற்கு
மட்டும் அல்ல...
எல்லா உயிர்களுக்கும் உண்டு
என்ற உறுதி கொள் !
வாழத்தான் பிறந்தோம் என்றால்
அழிக்கும் தொழில் எதற்கு.?
போரிடும் நாடுகளுக்கு எதிராக
போராட்டம் நடத்து..
பேதம் தகர்!
மனிதம் வளர் !
ஆக்கம் தரும்
ஆயுதங்களின் அறிவியலையே கொள்.!

இந்த புவியின்
இறுதி மனிதனுக்கும்
வறுமையை மிச்சம் வைக்காதே ...!!!
மானுட தேவைகளோடு
உயிரினங்களின் தேவையையும் தீர்வு செய்!

தோழா உலகின் அமைதிக்கு
இக்கருத்து
ஒத்த மனிதர்களை அறிந்து கொள்.

இவர்கள் உன்னையும்
நீ இவர்களையும்
இணைத்து கொண்டால்
புதியதோர் உலகம் செய்வோம்
புறப்பட்டு வா எழுந்தே ...!!!

எழுதியவர் : ரா.கார்த்திக் ஈரோடு (5-May-16, 11:42 am)
பார்வை : 256

மேலே