வாக்கு உன் வாழ்க்கை

நல்வாக்காய் ஆக்கு உன் வாக்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்

வலம்வந்து வலம்வந்து தொழுது நிற்பர்
வாயினிக்க வாயினிக்கப் புகழ்ந்து நிற்பர்
பலப்பலவாய் வாக்குறுதி தேனில் தோய்த்த
பலாச்சுளையாய் காதினிக்கச் சொல்லி நிற்பர்
இலவசமாய்ப் பொருள்களோடு பணமும் ஈய
இரவினிலே உறவைப்போல் வந்து நிற்பர்
அலங்கார நடிப்புதனை நம்பி வாக்கை
அளித்தாலோ வாய்க்கரிசி போட்டுக் கொள்வாய் !

அடியாட்கள் கூட்டத்தை அழைத்து வந்தே
அச்சத்தை மனமூட்டி அதட்டிக் கேட்பர்
அடிஉதைகள் கண்முன்னே நடத்திக் காட்டி
ஆதரவை மதப்பெயரில் மிரட்டிக் கேட்பர்
தடிகளுடன் தெருக்களிலே சுற்றி வந்து
தம்சாதி எனக்கூறித் தட்டிக் கேட்பர்
கொடியவர்க்குப் பயந்துவாக்கைப் போட்டால் நாடு
கொலைகளமாய் மாறிவாழ்வு சுடுகா டாகும் !

நல்லவிதை விதைத்தால்தான் பயிர்வ ளர்ந்து
நல்மணிகள் வீட்டிற்கு வந்து சேரும்
நல்லவரா என்றாய்ந்து தேர்வு செய்தால்
நல்லாட்சி அமைந்துவாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்
பொல்லாத கயவர்க்கே அஞ்சி டாமல்
பொருள்பணத்தில் மனம்மயங்கி விழுந்தி டாமல்
செல்வாக்காம் உன்வாக்கைச் சிறப்பாய் இட்டால்
செம்மையாக வீடுநாடு ஒளிரும் நன்றாய் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (5-May-16, 1:03 pm)
பார்வை : 96

மேலே