வெடிகுண்டு
பாறை உடைக்க பிறந்தாய்,
படி படியா ஊர்ந்துவந்து ,இன்று
ஊரை அழித்து விட்டாய் !
தீபாவளி திருநாளில் உன்னை
தெருவெல்லாம் சிதற விட்டோம்,
தீவிரவாதி மூலமா நீ ,
திரும்ப வந்து பழிதீர்த்தாய் !
துப்பாக்கி குழலில் புகுந்து,பல
அப்பாவிகளின் தூக்கம் கெடுத்தாய்!
எவனோ செய்த பிழைக்கெல்லாம்
எங்களிடம் கோவமாய் பேசினாய்!
பள்ளி என்று கூட பார்க்காமல்,
துள்ளி விளையாடும் குழந்தையை
தூரத்தில் தள்ளி வீசினாய்!
அமைதி தேடி வருவது போல் நடித்து
ஆலயத்திலும் குருதியை பூசினாய்!
நாளும் புகழ் பெற வேண்டி,
நாளிதழில் முதல்பக்கம் ஆனாய் !
அளவில் சிறிதாக இருந்தாலும் ,
அழிவை மட்டுமே காட்டினாய்!
உன் தலையில் கொள்ளி வைத்தால்,
ஊரையே உலையில் ஏற்றினாய்!
இலை மறை காயாக இருந்து,பல
தலைமுறையை தீர்த்து கட்டினாய்!
விலைகொடுக்க முடியா உயிரைக்கூட,
விற்று தீர்த்து வீடு திரும்பினாய் !
பணத்தை தேடி ஓடிய எங்களை
பிணத்தை தேடி ஓட வைத்தாய் ,
இனபடுகொலை என்ற சொல்லில்
இலக்கியம் ஒன்றை எழுதினாய்,
முற்று புள்ளி வைக்க மறந்து
தொற்று வியாதி போல் தொடர்ந்தாய்!
அன்பெனும் தடுப்பூசி போட்டு உன்னை,
அகிலத்தை விட்டு ஓட செய்வோம்!
மறுபடி எங்களை தேடி வந்தால் ,
மண்ணுக்குள் புதைத்து மூடி வைப்போம்!