உழவன்

நாங்கள்
உப்பு விவசாயிகள்
உப்பளங்கள் தான்
எங்கள் விளை நிலம்
கடல் தான்
எங்கள் காவேரி
தெப்பங்கள் தான்
எங்கள் கிணறுகள்
உப்புகள் தான்
எங்கள் நெற்மணிகள்
தட்டுமேடு தான்
எங்கள் களஞ்சியம்
கொளுத்தும் வெயில் தான்
கதிரவன் எங்களுக்காக
செய்யும் கருணை

உப்பை விளைவிப்பது
கடல் நீர் மட்டுமல்ல
எங்கள்
கண்ணீரும் , வியர்வையும் தான்

படிக உப்பு
பார்வையை
மங்கச் செய்யும்
தெரிந்தும்
பாத்திகளில்
எங்கள் வேலை
தொடரும் ...

சூரியன் அடிக்கும்
செஞ்சூரியிலும்
நாங்கள் விடாது
வேலை செய்ய வேண்டும்

உப்பு நீர்
உடலுக்குள் புகுவதை
காலுறை தடுக்கலாம்
உப்புக் காற்றை ?

எங்கள் வேலைகளுக்கு
காலில் கொப்பளங்கள் தான்
உப்பளங்கள் தந்த
முதற் பரிசுப் பொருட்கள்

கார் மேகம்
பார்த்தவுடன்
கனத்துப் போகும்
எங்கள் மனது

ஒற்றை மழையில்
கரைந்துப் போகும்
எங்கள்
உப்பும் , ஊதியமும்

உப்பு உற்பத்திப்
போக மிச்சமுள்ள
நச்சு நீரில்
ஜிப்சம் ஒதுங்கும்

எப்போது எங்கள்
பைகளில் மிச்சம்
பணம் தங்கும் ?

ஒரு காலத்தில்
உப்புக்காக
போர்கள் நடந்திருக்கின்றன
இன்று ,
எங்கள் வாழ்க்கையே
போர்களமாக இருக்கிறது

பாடுகள் நிறைந்ததானாலும் .
இது எங்கள் பாரம்பரியம்

நாங்கள் வேண்டுவது
மாற்றுத் தொழில் அல்ல ;
மாசற்றக் காற்று!

உங்களுக்காக
அயோடின் உப்பு
உற்பத்தி செய்யும்
எங்கள் சுவாசக்
காற்றில் ஏன்
ஆலைகளின் கந்தகத்தைக்
கலக்குகிறீர்கள் ?

எழுதியவர் : அனுசுயா (7-May-16, 1:13 pm)
Tanglish : uzhavan
பார்வை : 149

மேலே