அம்மாவுக்குத் திலகம் - உமா குருமூர்த்தி

பண்டிகையாம். பருவமாம்! யாருக்கு வேண்டும் இதெல்லாம்? குழந்தைகளுக்கு ஒரு குறையும் வைக்கக் கூடாது என்று அம்மா பார்த்துப்பார்த்து எல்லாம் தான் செய்து வைத்திருக்கிறாள். அண்ணா வேறு ஹாஸ்டலில் இருந்து வரப் போகிறான். ஆனாலும் எனக்கு என்னவோ மனசு சந்தோஷப்படவில்லை.

முன்பெல்லாம் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம்தான். ஒவ்வொன்றுக்கும் வீடு திமிலோகப்படும்.

பட்டை பட்டையாய் விபூதி தரித்து பஞ்ச கச்சம் வேட்டி கட்டி, தொந்தி குலுங்க அப்பா பூசை செய்வார். அம்மா ‘பட்டு மாமி’ புடவை கட்டிக் கொண்டு பாதி ராத்திரியிருந்தே வேலைகளைத் தொடங்கிவிடுவாள். ‘கோடாலி முடிச்சும், கொசுவப் புடவையும் உனக்கு ரொம்ப ஜோராய் இருக்கு உமா! தினமும் இப்படியே கட்டிக் கொள்ளேன்!’ என்பார் அப்பா. ஆமாம்! உண்மையிலேயே அந்த உடை அம்மாவுக்கு அழகாய், மிகவும் பொருத்தமாய் இருக்கும்.

ஆனால் இனிமேல் அம்மாவை அந்த மாதிரி எங்கே பார்க்க முடியும்?

இப்போது அம்மாவின் தோற்றம் தூய வெண்ணிற ஆடை; முறுக்கிக் கொண்டையிடப்பட்ட கூந்தல். இடக் கையில் கடிகாரம். கழுத்திலும் வலக்கையிலும் இருக்கிறதோ இல்லையோ என்னும் படியாகப் புல்லுப் போல மெல்லிய அணிகள். காதுகளிலே சுடர் விடும் வெண்முத்து நட்சத்திரங்கள். எடுப்பான மூக்கின் வெறுமையை நிரப்பி எடுத்துக் காட்டுவது போல மூக்குக் கண்ணாடி.

அம்மாவை இந்தக் கோலத்தில் பார்க்கும்போது அப்பாவை இழந்த வேதனை, அனலை அள்ளிக் கொட்டினாற் போல் நெஞ்சைத் தகிக்கிறது.

உல்லாசம் பொங்க, இன்பம் செழிக்க வந்து போன பண்டிகைகள் இப்போது, ஏங்கித் துடிக்கும் வேதனை விளைவுகளாய் மாறி நெஞ்சில் கொப்புளங்களாகி நிற்கின்றன.

தீபாவளி, பொங்கல் இந்தப் பண்டிகைகள் எல்லாம் அப்பா இருந்தால் எப்படி தடபுடல் படும்!

தீபாவளி சொல்லப் போய் விட்டேனே? பொங்கல் அன்று எங்கள் வீட்டில் பாலுடன் சேர்த்து இன்பமும் பொங்கும்; அப்பா வாங்கி வரும் கரும்பின் ருசியே அலாதி.

பட்டை பட்டையாய் விபூதி தரித்து, பஞ்சக் கச்சம் வேட்டி உடுத்தி, தொந்தி குலுங்க அப்பா சூரிய நமஸ்காரம் செய்வார். முப்பது வயசுக்குக் கூட ஒன்றிரண்டு தான் ஆகியிருந்தாலும் அப்பாவுக்குச் சற்றே வயசான தோற்றம்.

அப்புறம்…நோன்பு-

இவை மட்டும் தானா? சித்திரை வருடப் பிறப்பிலிருந்து மாதாமாதம் பண்டிகை தான்; வீடு திமிலோகப் படும். சித்திரையில் வருஷப் பிறப்பு, வைகாசியில் விசாகம், ஆடி ஆவணியிலும் புரட்டாசி ஐப்பசியிலும் ஒரே குஷிதான். ஆடிப் பெருக்கு, கிருஷ்ண ஜயந்தி, விநாயக சதுர்த்தி, ஆவணி அவிட்டம், நவராத்திரி, தீபாவளி என்று அடுக்கு அடுக்காய் பண்டிகைதாம்!

கார்த்திகையில் திரு கார்த்திகை, மார்கழியில் திருவாதிரை, தையில் பொங்கல், பங்குனியில் உத்திரம் நோன்ப்ய் என்று வருஷம் பூராவும் வடை பாயசம் தான்.

முக்கியமான பண்டிகைகள் இல்லாத மாசியிலும் ஆனியிலும் கூட எங்கள் வீட்டில் அதி முக்கியமாய்க் கொண்டாடும் வைபவம் இரண்டு உண்டு.

ஆனியில் அப்பா அம்மாவின் ‘வெட்டிங் அனிவர்சரி’ மாசியில் அப்பாவின் பிறந்த நாள்!

செலவு செய்ய அஞ்சமாட்டார் அப்பா! ‘இறைக்கிற கிணறுதான் ஊறும்’ என்பார்.

இப்போது தாத்தாவும், மாமாவும் குறையின்றிச் செய்கிறார்கள், பட்டுப்பட்டாய்த் துணிமணிகளும் அனுப்பியிருக்கிறார்கள். அண்ணாவின் சட்டை ‘டாப் மோஸ்ட்’!

அண்ணாவுக்கென்ன? அவனுக்கு எப்போதுமே தாத்தா பாட்டி ‘சப்போர்ட்’ அதிகம். இப்போது மாமாவும் சேர்ந்து கொண்டு விட்டார். அவனைக் கல்லூரியில் மட்டும் சேர்க்கவில்லை! ஹாஸ்டலிலும் சேர்த்து அந்தச் செலவையும் தானே ஏற்றுக் கொண்டு விட்டார்.

அதிகமாய் பிறர் உதவியை நாடாமல் ‘செல்ஃப் சப்போர்ட்’டிலேயே வாழப் பழக வேண்டும் என்று அம்மாவின் ’பிரின்ஸிபிள்’ – அதனால் அவளுக்கென்று ஒரு வேலையைத் தேடிக் கொண்டு தாத்தாவின் வீட்டை விட்டு வந்தாயிற்று.

பட்டண வாழ்வில் படுத்தால் ஒருவர்; இருந்தால் இருவர் என்கிற நிலையில் தானே வீடு கிடைக்கிறது. வீட்டில் இருந்தால் அண்ணாவின் படிப்பு கெட்டு விடுமாம்; மாமாவின் ஏற்பாடு.

தினமும் பள்ளி விட்டு வந்ததும், அம்மாவின் வரவுக்காகக் காத்திருக்க வேண்டியதை மனம் ஏனோ மறந்து விடுகிறது. அம்மா எங்கே போனாள்? அதுவும் அப்பா வரும் இந்த நேரத்தில்? ஆபிசிலிருந்து அப்பா வரும் சமயம் – ஏன் மற்ற நேரங்களில் கூட அம்மா எங்கும் போக மாட்டாளே! அப்பா இன்றைக்கு ஏன் ‘லேட்?’

இவ்வாறெல்லாம் உள்ளம் ஏங்குகிறது.

பள்ளியிலே ஆங்கில வியாசப் பிரிவு வேளை சமயம் – சில புத்தகங்கள் வாங்குவதற்காகப் பணம் கேட்டு, உன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுது’ என்று உபாத்தியாயர் கூறும் போது …உள்ளம் குமுறி, அழுகை வெடிக்கிறது.

அவளை இந்த நிலையில் பார்க்கும் போது…

திலகமில்லாதது ஒன்றைத் தவிர அம்மாவின் தோற்றத்தில் எந்தவித மாறுதலுமில்லை. ஆனால் ஒளியிழந்த விழிகளைப் போல அந்த வெறுமை தான் வேதனையை அள்ளி அள்ளி இறைக்கிறதே!

நாங்கள் குடியிருக்கும் ஸ்டோரில் முதல் போர்ஷனில் ஒரு குழந்தை…அது ஒரு வெள்ளிக்கிழமையன்று சுபாஷிணியை வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொள்ள அழைக்க, குங்குமச் சிமிழுடன் வந்தது. எனக்கு இதயம் ‘ரோடு ரோலரைப் போல அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

‘…போ! போ! சுபா!...சீக்கிரமாப் போடி! அந்தப் பெண் கூப்பிடறது பார்…! வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொள்ளப் போ. நீ போம்மா பாப்பா….அவள் பின்னாலேயே வருவாள்…’ என்று அவசரமாக அந்தக் குழந்தையைத் துரத்தினேன். அம்மாவுக்கு அது குங்குமம் கொடுக்க வருவதற்குள்.

அப்பாவுக்கு அப்புறம் தாத்தாவின் வீட்டிலிருக்கும் போது கூட, யாராவது ஏதாவது விசேஷத்துக்கு அழைக்க வந்தால், அவர்கள் வாசலில் வருகிறார்கள் என்று தெரிந்ததுமே அம்மா புழக்கடைப் பக்கம் சென்று மறைந்து விடுவாள்.

கோவிலுக்குப் போனால் அம்மன் சந்நிதிப் பக்கம் வராமல் எட்ட நின்றே வணங்கி வருவாள்.

அப்போதெல்லாம் என் மனதில் வேதனை புயல் வீசும். ஆனால் ஆச்சரியகரமாக, அந்தக் குழந்தை குங்குமத்தை சுபாஷிணிக்கு மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றது.

மாலையில் அதன் தாய் வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது தான் விவரம் விளங்கிற்று. விஷயத்தை விளக்கித்தான் அனுப்பினாளாம்.

‘அப்பா இல்லை என்றால் எப்படி அம்மா அவர்கள் சாதம் சாப்பிடுவாரக்ள்? மாசாமாசம் சம்பளம் யார் கொண்டு வந்து தருவா? சாமான் எப்படி வாங்குவாங்க? யார் கடைக்குப் போவா?’ என்று கேள்விக்கு மேல் கேள்வியாகக் அடுக்கிய தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தையும், அறிவுத் திறனையும் பெருமிதம் பொங்கக் கூறிக் கொண்டே போன அந்த மாமி, ‘அவர்கள் அம்மா வேலை பார்க்கிறாள். சம்பளம் வாங்குவாள்..’ எனத் தான் விளக்கியதையும் கூறிக் கொண்டாள்.

நீண்ட பின்னலில் கறுப்பு ரிப்பன் கட்டி, கட்டுப் பூ சூடி, நெற்றியில் மூன்று திலகங்கள் மெருகிட, கரும் பச்சைப் புடவையும், சந்தன நிற ஜாக்கெட்டும் தரித்து அப்பாவுடனும், அருமை குழந்தைகளுடனும் அம்மா வெளியே கிளம்பும் காட்சி என் கண் முன் விரிந்தது.

ஐயோ! இனி அம்மாவை அந்த மாதிரி எப்போது பார்க்க முடியும்?

எனக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது. அம்மா திலகம் இட்டுக் கொள்ளும் விதமே அலாதி. ஆச்சரியக் குறியை அழகாக நிறுத்தினாற்போல சிவப்புச் சாந்துக்கு கீழே கறுப்புச் சாந்தின் மிளகுத் தோற்றம்; மேலே அதே அளவுக்கு வெண்ணிற விபூதி. அம்மாவின் முகத்துக்குத் தனி அழகு தருவதே அந்தத் திலகம்தான்.

வெள்ளிக்கிழமைகளில் பள்ளியில் இருந்து வரும் போது, பூக்கடையில் கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது, ‘அம்மாவுக்குப் பூ’ என்று அரைக் கணம் நெஞ்சில் ஒரு அலையடிக்கும். அப்புறம் தான், அலை நனைத்துச் சென்ற பின் பளீரிடும் வெண் சங்கு போல அந்த உண்மை பளிச்சிடும்.

அப்பாவுக்கு அப்புறம் அம்மாவின் அழகிய முடி; முடி என்ன, உருவம் கூட இளைத்துவிட்டது.

ஐயோ! அம்மாவை இனி முன் போலப் பூவும் பொட்டுமாய் எங்கே பார்க்க முடியும்?

ஏன் முடியாது?

சட்டென என் நெஞ்சில் ஒரு கேள்விக்குறி.

எப்படி முடியும்?

சட்டசபை விவாதம் போல உடனே அதற்கு ஒரு எதிர்ப்பு. அம்மாவின் பாழ் நெற்றியைப் பார்க்க பார்க்க என் வயிற்றில் ஏதோ ஒன்று ‘திகுதிகு’ வென்று எரிந்தது. துடைத்து விட்டாற் போன்ற அதன் வெண்மையும் வெறுமையும் என்னை என்னவோ செய்தன.

முன்போல் அம்மாவை அரைக் கணமேனும் கண்டு களிக்க, அடிமனத்தில் அடக்க முடியாத ஆவல் எழுந்தது. உந்தித் தள்ளும் ஆசையின் வேகம் உள்ளத்தில் உடனே ஒரு ‘ஐடியா’ வை வரவழைத்தது.

ஆ! அப்படிச் செய்தால் என்ன?

செய்யத்தான் வேண்டும். ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேறு வழியேயில்லை.

அண்ணாவிடம் சொல்லி, இந்த யோசனைக்கு ‘அங்கீகாரம்’ பெறலாமா?

ஊஹூம்! அவன் ஒத்துக் கொள்ள மாட்டான். உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் ஓட்டுக்குள் நத்தை போல உள்ளுக்குள்ளேயே இருப்பான் அவன்! உனக்கு எப்போதுமே படபடப்பு அதிகம் என்று என்னையும் ஏதாவது சொல்லுவான். ஹாஸ்டலில் ‘ஹாய்’யாக இருக்கிறான். அவனுக்கென்ன தெரியும்? இப்போது கூட பண்டிகைக்கு முதல் நாள், மாப்பிள்ளை போல ‘ஜம்’மென்று வந்து இறங்குவான்.

அப்பா இருந்தால் இப்போது எப்படி அமர்க்களப்படும்? அம்மா இப்படியா இருப்பாள்! அப்போதும் வேலை அதிகம் தான். ஆனாலும் அந்த முகத்தில் ‘அதீத ஒளி’ மின்னுமே!

வேலைகளையெல்லாம் முடித்து விட்டு அம்மா படுத்துக் கொள்ளும் போது மணி பதினொன்றுக்கும் மேலாகியிருந்தது. எனக்குத் தூக்கமே வரவில்லை. பாசாங்கு செய்தபடியே கண்களை மூடிக் கொண்டு படுத்தவனாய் என்னுடைய ஐடியாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்!

‘அம்மா! ’

‘அம்மா!.....’

’அம்மோவ்!’

‘அம்மா தூங்கிட்டயா?’

ஐந்தாறு முறை உரக்க குரல் கொடுத்தும் அம்மா எழவில்லை. அலுப்பு பாவம்! அயர்ந்து தூங்குகிறாள்.

மெல்ல எழுந்தேன்.

நான் செய்யப் போகும் இந்தக் காரியம் சரியோ தவறோ; எப்படியானாலும் சரி; ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இது ஒன்றுதான் வழி.

மனம் படபடவென அடித்துக் கொண்டது. பெரிது செய்யப்பட்டிருந்த அப்பாவின் படத்துக்கு எதிரே விழுந்து வணங்கினேன். அதிலிருந்து உதிர்ந்த வாடிய மலர்களை கண்களில் ஒற்றிக் கொண்டேன். கரங்கள் நடுங்கின. கால்கள் தள்ளாடின.

சுபாஷிணியின் அலமாரியைத் தட்டித் தடவிக் கண்டுப்பிடித்து அதிலிருந்து சில பொருள்களைத் தேடி எடுத்துக் கொண்டேன். சிம்னி விளக்கின் மெல்லிய ஒளியில் அம்மா அயர்ந்து உறங்குவது தெரிந்தது. அருகில் சென்றேன். என் கையில் இருந்த பொருள்கள் அதன் நடுக்கத்தில் கீழே விழுந்து அம்மாவின் தூக்கத்தைக் கலைத்து என்னைக் காட்டிக் கொடுத்து விடாதபடி அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என் வேலை முடிவடையும் சமயம், வாசற் கதவைத் தட்டும் ஒலி. இடைவிடாத தட்டல்…என் அங்கமெல்லாம் பதறியது. அவசரமாகச் சென்று கதவைத் திறந்தேன். என் கையிலிருந்த பொருட்கள் ‘தடால்’ எனக் கீழே விழுந்தன! மங்கிய அந்த விளக்கொளியில் வாசற்படியில்…அப்பாவே நின்று கொண்டிருப்பது போல என் மெய் சிலிர்த்தது. அதே நீல நிற டெரிலின் சட்டை; உள்ளே தெரியும் ‘இண்டர்லாக்’ பனியன், மூக்குக் கண்ணாடி, அலை அலையான கிராப்புத் தலை. இடது கையில் வேட்டியின் நுனியை லேசாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையில் அப்பா வைத்திருக்கும் அதே போன்ற ‘ஊதுபத்திக் காரன் பை.’ (ஆமாம், அப்பாவின் பையைப் பார்த்து என் சித்திகள் எல்லாரும் அப்படித்தான் கேலி செய்வார்கள்!)

‘என்னடா இது? பேயறைந்தவன் போல நிற்கறே? கையிலே என்ன? எதைக் கீழே போட்டாய்?’

குரல் கூட….அதே குரல்!

ஆனால்….அப்பா இல்லை! அண்ணா!

ஹாஸ்டல் சோறு அண்ணாவை எப்படி மாற்றி விட்டது. அப்பாவே மறு உருவம் எடுத்து வந்தது போல வாசற்படியை அடைத்துக் கொண்டு வந்து நிற்கிறானே!

இதற்குள் அம்மாவே விழித்து எழுந்து அங்கு வந்து விட்டிருந்தாள்!... ‘வாடா ரமேஷ்! இத்தனை நாழியாகிவிட்டதா!’ என்றாள் மகனை வரவேற்றபடி,

அம்மாவின் முகத்தையும் கீழே விழுந்து சிதறிக் கிடந்த பொருள்களையும் என் கையையும் கண்டு அண்ணா திகைத்து போனான். விஷயத்தை ஊகித்துக் கொண்ட அவன் விழிகளில் கண்ணீர் குளம் கட்டியது!

‘சுரேஷ்!....’

உணர்ச்சி வசப்பட்ட அவன் குரல் நடுங்கியது. பார்வை அம்மாவின் முகத்துக்கும் என் கரத்துக்கும் பாலமிட்டது. அம்மா விழித்தாள்! தடால் என அவள் கால்களில் வீழ்ந்தேன்.

‘என்னை மன்னிச்சுடு அம்மா! நான் செய்த காரியம் சரியோ தப்போ….என்னாலே மனசை அடக்கவே முடியலே…அம்மா! உன்னை மறுபடியும் பொட்டு இட்ட முகத்தோடு பார்க்கணும் என்ற மனசு கிடந்து அடிச்சிண்டது. அந்த வேகத்திலே…நீ தூங்கற போது…..சுபாஷிணியின் சாந்து பாட்டில்களை எடுத்து….கொஞ்ச நேரம் அப்படியே இரு அம்மா! ஆசை தீர ஒரு தரம் பார்த்து விடறேன்…..’

விம்மி விம்மி உடல் குலுங்க அழுத என்னைத் தூக்கி முகத்தோடு முகம் சாய்த்துக் கொண்டு முதுகை வருடிக் கொடுத்தாள் அம்மா. நான் அழுத கண்ணீரும் அதைக் கண்ட அவளுடைய கண்ணீரும் அவள் கன்னப் பிரதேசத்தில் சங்கமமாயிற்று.

வாசலுக்கு நேராக பெரிது செய்யப்பட்டு ஜரிகை மாலை சூட்டி மாட்டப்பட்டிருந்த அப்பாவின் படத்துக்கு எதிரே அப்போது அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஒரு விநாடி அதையே வெறித்து நோக்கினாள் அம்மா. என் பார்வை அவளைப் பின் பற்றியது. அப்பாவின் படத்தின் கண்ணாடியில் அம்மாவின் பொட்டிட்ட வட்ட முகம் மின்னியது.

முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டே என்னை நோக்கி ஒரு கேள்வி கேட்டாள் அம்மா.

’திலகம்னா என்ன சுரேஷ்?...’

‘பொட்டு.’

‘சரி, திலகம் என்ற பதம் ‘உயர்வு’ என்கிற அர்த்தத்தைக் கொடுக்கிறது, அல்லவா?...’

‘ஆமாம், அம்மா!’

‘திலகம் அம்மாவுக்கு உயர்வைக் கொடுக்க வேண்டும், சிறப்பைத் தர வேண்டும்…இல்லையா?’

நான் வெறுமனே தலையசைத்தேன்.

‘குங்குமம், சாந்து, விபூதி என்று நான் ஒரே சமயத்தில் மூன்று பொட்டு இட்டுக் கொள்வேன் இல்லையா, சுரேஷ்?’

பதில் சொல்ல முடியாமல் எனக்குத் தொண்டையை அடைத்தது.

‘இப்போ, இனிமேல் அந்த மூன்று திலகங்களும் சுபாஷிணி, சுரேஷ், ரமேஷ் ஆகிய மூன்று திலகங்களும் தான் இனிமேல் அம்மாவுக்கு உயர்வைக் கொடுக்க வேண்டும்; மகிழ்வைக் கொடுக்க வேண்டும், தெரிஞ்சுதா சுரேஷ்! இந்த மூன்றினுடைய வாழ்வின் மணம் தான் இனி அம்மாவுக்கு மல்லிகையில் மணம்….என்ன நான் சொல்றது புரிஞ்சுதா?’

‘நன்றாகப் புரிகிறது அம்மா!....’

‘…..பூவும் பொட்டும் பெண்களுக்கு புருஷன் தந்தது இல்லே…பிறந்தது முதலே உரியவை தான். ஆனால் புருஷன்னு ஒருவன் வந்ததும்தான் அதற்கு மகத்துவம் ஏற்படுகிறது. அவன் போய் விட்டால் அந்த மகத்துவம் தான் போய் விடுகிறது. இழந்துவிட்ட அந்த மகத்துவத்தைத் தன் செல்வங்களின் உயர்வால் இட்டு நிரப்ப, மனத்தைத் தயார் செய்துகொண்டு அவள், பூவுக்காகவும் பொட்டுக்காகவும் ஏங்காமல் தன் குழந்தைகளின் நல் வாழ்வே மணம் தரும் மலராகவும், அவர்களுடைய உயர்வுச் சிறப்பே தனக்கு மதிப்புத் தரும் திலகமாகவும் எண்ணித் தியாக வேள்வியில் தன்னைப் புடமிட்டுக் கொள்ள வேண்டும். தன்னுடையவரின் பெயரை நிலைநாட்டும் தன்னலமற்ற எண்ணம் கொண்டு உழைக்க வேண்டும்…..’

தன்னை மறந்தவளாய் அம்மா பேசிக் கொண்டே போனாள். சில விநாடிகள் மெளனம் அங்கே தன் கரிய சிறகுகளை விரித்துக் கொண்டு இறங்கியிருந்தது.

‘அடாடா! வந்த பிள்ளையை ஒரு வாய் சாப்பிடுகிறாயா என்று கூட கேட்காமல் நான் பாட்டுக்கு என்னென்னவோ பேசிக்கொண்டே போகிறேனே!.....ரமேஷ்! வா…கை கால் அலம்பிக் கொண்டு சாப்பிட வா!..’ என்று அம்மா தன் நிலைக்கு வந்தாள். அண்ணா உதடுகள் சற்றே பிதுங்க, அப்பாவைப் போலவே மெல்லச் சிரித்தான்.

‘பாதி ராத்திரி பனிரெண்டு மணிக்குச் சாப்பாடா, அம்மா! இன்னைக்கு எங்க ஹாஸ்டலிலேயே விருந்து, நன்றாகச் சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன். அது கிடக்கட்டும், இந்தா இதையெல்லாம் எடுத்து வை. சுரேஷ்! சுபா! இங்கே வாருங்கள்…’

அண்ணா எடுத்து வைத்த பொருட்களை வியப்புடன் பார்வையிட்டேன். எங்களுக்கு இஷ்டமான பொருட்களை அப்பாவைப் போலவே இவனும் தெரிந்து கொண்டிருக்கிறானே!

பொங்கலுக்குப் புதுச் சட்டை, கோதுமை அல்வாப் பொட்டலம், சுபாவுக்குக் கனகாம்பரம்….ஸாடின் ரிப்பன்….இப்படிப் பல பொருட்கள்.

‘பொங்கலுக்காவது நீ புதுப் புடவை கட்டிக்கொள்வாயா அம்மா? உன்னைக் கேட்டுக் கொண்டு தான் வாங்க வேண்டும் என்று வாங்கி வரவில்லை…’ என்று அம்மாவிடம் அவன் வினவியபோது மறுத்துத் தலையசைத்த அம்மாவின் முகத்தில் பெருமை. ஆமாம்! இவையெல்லாம் வாங்க இவனுக்கு ஏது பணம்?... நான் நினைத்ததை அம்மா கேட்டுவிட்டாள்.

‘மாமா, தாத்தா, ‘பாக்கெட் மணி’ அனுப்பிச்சதையெல்லாம் சேர்த்து வைச்சேன் அம்மா!...’

‘தந்தைக்குப் பின் தமையன் என்பதை அண்ணா மெய்ப்பிக்க ஆரம்பித்து விட்டான்! அவனுடன் இனி நான் சண்டையிட மாட்டேன். ‘அவன் மட்டும் பெரிய இதுவோ’ என்று அம்மாவிடம் வாதாட மாட்டேன்.

‘நன்றாய்ப் படி, அம்மாவைப் படுத்தாதே; சுபாவை அடிக்காதே!’ என்று அவன் கூறும் அட்வைஸ்களை மறுக்காமல் ஏற்றுக் கொள்வேன். உருவிலும் உள்ளத்திலும் அப்பாவைப் போலவே ஆகிவிட்ட அவனுக்கு இனி எப்போதும் மதிப்பும் மரியாதையும் தருவேன்.

புதுச் சட்டையைப் போட்டுக்கொண்டு அண்ணாவை நமஸ்கரித்த போது, அம்மாவின் முகத்தில் பழைய பிரகாசம் – ‘அந்த ஒளி’ சுடர்விட்டது போலிருந்தது.

ஆம்! நாங்கள் தான் அம்மாவுக்கு திலகங்கள் ஆகி விட்டோமே!

(தினமணி கதிர் 28.2.1969)

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-May-16, 10:29 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 203

மேலே