வந்தது வான்தமிழ் வாழ்த்து

காந்தியார் காவியம் கேட்டவர் கேட்டவரே
சாந்தியாய் மாநிலச் சங்கத்தில் - ஏந்திவிழி
கண்டவரும் கண்டவரே கம்பமொழி காந்திவழி
கொண்டவரின் கொட்டும் கவி

பேடை எழில்தானோ பேசும் நிலவொளியோ
மேடை தனையடைந்த வானவில்லோ - வாடைப்
பொழிவோ பனிமலையில் பொன்மழையோ என்னே
விழிக்கும் வியப்பின் விழி!

ஞாலச் சடந்துறந்த ஞானக் கவிக்குயிலும்
காலம் பொருள்கடந்தே காணவரும் - தூலமும்
தாண்டிய சூக்கமமாய் தன்கவியை மெச்சிடும்
மன்றத்தில் தென்றலாய் மாறி!

ஆறை இயக்கியே ஆறைத் தமிழாக்கி
ஆறை நிகரென ஆக்கினார் - ஆறை
இகத்தழித்து பாதைகள் ஆறையும் காட்டி
அகத்திலும் ஆற்றினார் ஆறு

கதிரில் உதித்தான் கயமை எரித்தான்
எதிரில் இராமன் எனவே - மதியில்
மகாத்மா பதித்தார் புலவர் வடித்தார்
மகாநதியில் சேர்ந்தீர் மகிழ்ச்சி!

வளமாம் குரலால் வளர்தமிழ்ச் சீரால்
வளனார் அரசானார் வாழ்க - உளமாரத்
தந்தார் திறனாய்வுத் தென்றலார் சிந்தையில்
வந்தது வான்தமிழ் வாழ்த்து

கோதைப்பா கோலோச்சும் காவியக்கோ சேய்பேசும்
மேதைப்பா தான்காட்டும் மால்பொழில் - கீதைப்பா
சாரமாகும் ஆரமாகும் சொன்னவர்க்கு தீவினை
தூரமாகும் சொல் துணிந்து!

[நெல்லை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் இன்று நிறைவு பெறும் பெரும்புலவர் இராமானுசக் கவிராயர் எழுதிய 'மகாத்மா காந்தி காவியம்' பற்றிய உரைகள் நிறைவு விழாவிற்கான வெண்பா வாழ்த்து]

எழுதியவர் : புதுயுகன் (12-May-16, 10:12 pm)
பார்வை : 136

மேலே