ப்ளீஸ் இதை படிக்காதீங்க
ப்ளீஸ்.... இதை படிக்காதீங்க....
(இது கவிதையல்ல, கதையல்ல, கட்டுரையல்ல. வெறும் பிதற்றல் அல்லது வெறும் புலம்பல்)
விவசாய பிரச்சனை
வேலையின்மை
வறுமை
தொழில் வளர்ச்சி இல்லாமை
அரசியல்வாதிகளின் ஊழல்
எல்லாவற்றையும் பேசுகிறார்கள்
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பல ஆண்டுகளாக.
குளுகுளு அறைக்குள்
சுற்றிலும் கேமராக்கள் பார்க்க
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
சமூக அக்கறையாம்...
பேசுகிறார்கள்
எழுதுகிறார்கள்
எந்நேரமும் பேசுகிறார்கள்
எப்போதும் விவாதிக்கிறார்கள்
உடனுக்குடன் அலசுகிறார்கள்
பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
எங்கே பிரச்சனை?
எங்கே பூகம்பம்?
எங்கே புயல்?
எப்போது கட்டிடம் தீபிடித்து எரியும்?
எப்போது கட்டிடம் இடிந்து
தரைமட்டமாகும்?
எங்கேயாவது தீவரவாதி வந்துவிட்டானா?
எங்கே வெடிகுண்டு வெடித்தது?
எத்தனை பேர் உயிரிழப்பு?
யார் காரணம்?
எப்படி நடந்தது?
பேசி தீர்க்கப்போகிறார்களாம்,
கேமராவில் (மட்டும்) முகம் காட்டி...
சிலர்
உலகின் எல்லா நாடுகளுக்கும்
சென்று வருகிறார்கள். எதற்கு?
அந்நாட்டின் வளர்சித் திட்டங்களை
அறிந்து வந்து
நமது அரசிடம் எடுத்து சொல்லவா?
இல்லை... இல்லை....
சொல்வதுபோல் எழுதுவதற்கு...
நாமும் அப்படி செய்ய வேண்டும்
இப்படி செய்ய வேண்டும் என்று
பக்கம் பக்கமாய் எழுதுவதற்கு...
பொது நலனாம்.
வாழ்நாள் முழுவதும் சிலர்
எழுதி எழுதியே குவிக்கிறார்கள்,
எழுத்தாளர்களாம்...
"நம் நாட்டில்
கண்டபடி அறிவுரை சொல்ல
ஆட்கள் ஏராளம்,
சொன்னபடி செயல்படத்தான்
ஆட்கள் இல்லை" என்று
எங்கோ படித்த வரிகள்
நினைவுக்கு வருகிறது.
ஒவ்வொருவரும்
படைப்பாளிகளாக (மட்டுமே)
இருக்க நினைத்தால் எப்படி?
சிலரோ
விதவிதமான பிரச்சனைகளை
காட்சிப்படுத்துகிறார்கள்.
அலசி ஆராய்ந்து
தீர்வு காண்கிறார்கள்.
எவ்வளவு பிரச்சனை என்றாலும்
தீர்வு சொல்கிறார்கள்.
எங்கே?
நிஜ உலகில் இல்லை,
நிழல் உலகில்.
அதாவது பெரிய திரையில் மட்டும்.
பதிவாம்...
"தண்ணீர் இன்றி
நா வறண்டு
ஒரு முதியவர் மயங்கி
கீழே விழுந்தால்
என்ன செய்ய வேண்டும்?"
இதை கேள்வியாக நினைத்துக் கொள்ளுங்கள்,
போட்டித் தேர்வுக்கான கேள்வியாக கற்பனை
செய்துகொள்ளுங்கள்.
நான்கு பதில் இருக்குமல்லவா?
அதில்கூட இந்த பதில் இருக்காது...
"படம் பிடித்து சமூக வலைத்தளத்தில்
பதிவேற்றி சமூக அக்கறை என்று
பெயர் வாங்கிக்கொள்ள வேண்டும்" மண் தரையில் கால் பட்டிருக்குமா?
கை விரல் நக இடுக்குகளில்
மண் படிந்திருக்குமா?
சூரிய ஒளியை
உடல் சந்தித்திருக்குமா?
பேருந்தின் கூட்ட நெரிசலில்
ஒரு நாள்,
ஒரே ஒரு நாள்
அந்த உடல்தான் பயணித்திருக்குமா?
என்றோ ஒரு காலத்தில்
வறுமையை சந்தித்தார்களாம்?
கால் வயிற்றுக் கஞ்சிக்கு
வழியின்றி
அலைந்து திரிந்தார்களாம்.
பிறகு,
அவர்களது உழைப்பு
உயர்வைத் தந்துவிட்டதாம்,
அந்த உயர்வு உழைப்பை மறந்து
சொகுசு வாழ்க்கையைக் கொடுத்துவிட்டதாம்,
"பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு
பாதுகாப்பாய் பொதுநலம் பேசு" என்று
இவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது?
எல்லாம் விளம்பரம்,
எல்லாவற்றிலும் விளம்பரம்,
சுய விளம்பரம்,
போலியாய் ஒரு சமூக அக்கறை.
தான், தன் பெயர், தன் முகம்
எந்நேரமும் தெரிய வேண்டும்,
எந்நேரமும் தன்னைப் பற்றியே
பேச வேண்டும்.
பரம்பரை வியாதியான இது
தற்போது தேசிய வியாதியாய்
மாறிவிட்டது
என்ன யோசிக்கிறீங்க?
இது மாறாது,
மாற்றவும் முடியாது,
அதனால்தான் அப்பவே சொன்னேன்
இதை படிக்காதீங்கனு.
நீங்கதான் கேட்கலை.
இன்னும் பேசிக்கிட்டே போகலாம்தான்.
நமக்கு இது மட்டுமா வேலை?
சொல்லுங்க?
----------------------------------