கடல்

கடலே கடலே பெருங்கடலே
கண்ணைக் கவர்ந்திடும் அலைகடலே
நீலநிறம் கொண்ட உடைஉடுத்தி
நெஞ்சத்தை மயக்கும் கலைகடலே
பூமியில் மூன்றில் இரண்டளவு
பாகங்கள் கொண்டுநீ ஆள்கின்றாய்
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை
காட்சி தந்தேநீ நீள்கின்றாய்
அறிஞர்கள் பற்பலர் உனைஆய்ந்து
அதிசயச் செய்திகள் பலகண்டார்
உலகோர் பலர்உன் அருகில்வந்து
உல்லாசம் அடைந்திடும் நிலைகண்டார்
ஆழம் நிறைந்த இடங்களிலே
அமைதியை நீயும் தருகின்றாய்
அலையாய் எழும்பிக் கரையோரம்
அழகிய வடிவங்கள் பெருகின்றாய்
ஆழத்தை உன்னுள் கொண்டதனால்
ஆழியென்ற பெயர் நீகொண்டாய்
பரந்தும் விரிந்தும் இருப்பதனால்
பரவையென மறுபெயர் பெற்றாய்
அழுக்கும் இழுக்கும் இல்லாத
அற்புத படைப்பு நீயன்றோ?
அறுசுவை உணவுக்கு ருசியூட்ட
அளிப்பாய் உப்பும் நீயன்றோ?
முத்தினை உன்னுள் மறைத்துவைத்து
மூழ்கியே அதனை எடுக்கவைப்பாய்
பலவகை மீன்களை நீவளர்த்து
பசிபோக்கும் உணவாய் எமக்களிப்பாய்
திருமால் உன்னில் பள்ளிகொண்டார்
திருமகளும் அங்கு அண்டிநின்றார்
தேவரும் அசுரரும் உன்னிடம்தான்
தேவாமிர்தம் அதை கடைந்தெடுத்தார்
கப்பல்கள் மிதப்பதும் உன்மேலே
கட்டுமரம் செல்வதும் உன்மேலே
கடற்கரை ஓரத்தில் மீனவர்கள்
காலத்தைக் கழிப்பதும் உன்னாலே
ஆகாயமழை உன் துணையாகும்
ஆறுகள் நதிகளுன் இணையாகும்
நிலத்திற்கு நீயே தலைப்பிள்ளை
நீயின்றி மீனவர் இனமில்லை
சுனாமியாய் நீ உருவெடுத்தால்
சுருட்டிடுவாய் இந்த உலகத்தையே
சுற்றிவரும் இந்த பூமியிலே
சற்றும் நிறுத்தாயே அசைவதையே.
மண்ணில் மழையும் நீதருவாய்
மக்களுக்கும் பலபொருள் தருவாய்
எந்நாளும் இம்மண்ணை நீகாத்து
எல்லோர்க்கும் தாயாய் விளங்கிடுவாய்.
பாவலர். பாஸ்கரன்