தந்தையின் தொண்டே தலை கவிஞர் இரா இரவி

தந்தையின் தொண்டே தலை ! கவிஞர் இரா .இரவி !

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தரணியில் உணராத மாந்தர் இல்லை !
தியாகத்தின் திருஉருவம் தந்தை அவர்
தன்னலமற்றவர் குடும்பநலம் பேணுபவர் !
உழைத்து உழைத்து ஓடானபோதும் அவர்
ஒருபோதும் சலித்துக் கொள்வதில்லை !
குடும்பத் தலைவர் என்ற பொறுப்பால்
குடும்பம் காக்கப் பொறுப்பாக உழைப்பவர் !
தன் மகிழ்ச்சியைத் தள்ளி வைத்து விட்டு
தன் குடும்ப மகிழ்ச்சிக்குக் காரணமானவர் !
குடும்பத்திற்காக அவமானங்களை ஏற்றவர்
கூறிய பணிகளை செய்து முடித்தவர் !
தன்மானத்தையும் ஒதிக்கி வைத்து விட்டு
தன் குடும்பத்திற்காக பொறுமை காப்பவர் !
அறச்சீற்றத்தையும் அப்படியே தணித்து விட்டு
அன்பான குடும்பத்திற்காக தவவாழ்வு வாழ்பவர் !
சோதனைகள் வந்தபோதும் சோர்ந்திடாமல்
சொக்கத் தங்கமாக வாழும் நல்லவர் !
சோகங்கள் வந்தபோதும் சோம்பிடாமல்
சுறுசுறுப்போடு உழைத்து வருபவர் !
குழந்தைகளுக்கு அறிவொளி தந்த விளக்கு
குவலயத்தில் தந்தையின் தொண்டே தலை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-May-16, 9:11 am)
பார்வை : 70

மேலே